மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

அத்வானிக்காக வேதனைப்படுகிறோம்: ராகுல்

அத்வானிக்காக வேதனைப்படுகிறோம்: ராகுல்

பாஜகவின் மூத்த தலைவர் அத்வானிக்காக வேதனைப்படுவதாகத் தெரிவித்த ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விட காங்கிரஸ் கட்சி அத்வானிக்கு அதிக மரியாதையை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.

மகாராஷ்டிராவின் மும்பையில் நேற்று (ஜூன் 12) நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “வாஜ்பாய்க்கு எதிராக நாங்கள் தேர்தலில் போட்டியிட்டுள்ளோம். ஆனால், தற்போது அவர் நோய்வாய்ப்பட்டுள்ளார். அதனால் அவரை மருத்துவமனையில் போய் பார்த்தேன். இந்த நாட்டுக்காக வாஜ்பாய் உழைத்துள்ளார். அவரை நாங்கள் மதிக்கிறோம். இதுதான் எங்களின் கலாச்சாரம்” என்று குறிப்பிட்ட அவர், பாஜக மூத்த தலைவர் அத்வானிக்காக வேதனைப்படுவதாகவும் தெரிவித்தார்.

“பிரதமர் மோடியின் குரு அத்வானிதான். ஆனால், பல்வேறு நிகழ்ச்சியில் நான் பார்த்துள்ளேன், அத்வானியை மோடி மதித்ததே இல்லை. அத்வானிக்காக இன்று நான் வேதனைப்படுகிறேன். மோடியை விட காங்கிரஸ் கட்சி அத்வானிக்கு அதிக மதிப்பு கொடுத்துள்ளது” என்று கூறினார்.

மேலும், “காங்கிரஸ் கட்சிக்கு எதிராகக் கடந்த 50 ஆண்டுகளாகப் போராடி வருவதாக ஒரு மூத்த தலைவர் என்னிடம் கூறினார். தற்போது, தேசத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஒரு கட்சியால் முடியும் என்றால் அது காங்கிரஸ்தான் என்று 50 ஆண்டுகளுக்குப் பின் உணர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ். அமைப்பின் சித்தாந்தங்களை காங்கிரஸால் மட்டுமே வீழ்த்த முடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.

வரவுள்ள ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடையும் என்று குறிப்பிட்ட ராகுல், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் பாஜகவைத் தோற்கடிக்கும் என்றும் உறுதிப்படக் கூறினார்.

மகாராஷ்டிராவின் பிவண்டியில் 2014ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி, மகாத்மா காந்தி கொலைக்கு ஆர்எஸ்எஸ் இயக்கம்தான் காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து பிவண்டி பகுதியின் ஆர்எஸ்எஸ் செயலாளரான ராஜேஷ் குண்டே என்பவர் பிவண்டி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக பிவண்டி நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேற்று (ஜூன் 12) ஆஜரானார். அவர்மீது ஐபிசி 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

இதையடுத்து நீதிமன்ற நுழைவாயிலில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் கொள்கைகளுக்கு எதிராகத்தான் நாங்கள் போராடுகிறோம். பிரதமர் மோடி விவசாயிகள் பிரச்சினைகள் குறித்தும், நாட்டில் இளைஞர்கள் இடையே அதிகரித்துவரும் வேலையின்மை குறித்தும் பேச மறுக்கிறார். ஆனால், குறிப்பிட்ட சில பணக்காரர்களுக்காகக் கோடிக்கணக்கில் கடன் தள்ளுபடி செய்கிறது மத்திய அரசு. இந்த அரசு பணக்காரர்களுக்கு மட்டுமே.

வானொலியில் மன் கி பாத் என்று பேசும் பிரதமர் மோடி காம் கி பாத் (வேலைவாய்ப்பு) குறித்துப் பேசாமல் மவுனமாக இருக்கிறார்.

பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் துணிவிருந்தால், எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் என் மீது போடட்டும். சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டம் எங்களுடையது. எனவே, அத்தனை வழக்குகளிலும் சட்டப் போராட்டம் நடத்தி, வெற்றி பெறுவேன்” என்று தெரிவித்தார்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon