மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

சூடுபிடிக்கும் காரிஃப் சாகுபடி!

சூடுபிடிக்கும் காரிஃப் சாகுபடி!

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் காரிஃப் சாகுபடியும் சில மாநிலங்களில் முன்கூட்டியே தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய வேளாண் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜூன் 8ஆம் தேதி கணக்குப்படி 84.61 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இந்த காரிஃப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவு என்றாலும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் செய்யப்பட்ட சாகுபடி பரப்பைக் காட்டிலும் இது 8.5 விழுக்காடு அதிகமாகும்.

கர்நாடகா, பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரையில் 3.45 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 15 விழுக்காடு அதிகமாகும். அதேபோல மேகாலயா, நாகலாந்து, அசாம் மற்றும் அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், தமிழ்நாடு, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த ஆண்டு நெல் சாகுபடி அதிகரித்துள்ளது. இதுவரையில் 6.32 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 5 விழுக்காடு குறைவாக இருந்தாலும், இந்த ஆண்டு இதுவரையில் செய்யப்பட்டுள்ள காரிஃப் சாகுபடியில் இது 56 விழுக்காடு வரை அதிகமாகும்.

அதேபோல இதுவரையில் நடப்பு பருவத்தில் 1.87 லட்சம் ஹெக்டேரில் பருப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், கர்நாடகா, உத்தரகாண்ட் உள்ளிட்டப் பகுதிகளில் பருப்பு சாகுபடி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 1.98 லட்சம் ஹெக்டேரில் பருப்பு சாகுபடி செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு சாகுபடி முழுமையடையும்போது கடந்த ஆண்டை விட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டைப் போல சமமான அளவில்தான் இந்த ஆண்டும் எண்ணெய் வித்துகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon