மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

சிறப்புப் பார்வை: இந்துத்துவ ஆட்சியில் தலித்துகள் - 2!

சிறப்புப் பார்வை: இந்துத்துவ ஆட்சியில் தலித்துகள் - 2!

முனைவர் ஒய். ஸ்ரீனிவாச ராவ்

உத்தரப் பிரதேசம் பராய்ச் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சாவித்ரி பாய் புலே இட ஒதுக்கீட்டுக் கொள்கையைத் தாக்கியதற்காகவும் அம்பேத்கர் சிலை களங்கப்படுத்தப்பட்டதற்கும் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவருவதை எதிர்த்தும் அவரது கட்சி மற்றும் அரசாங்கத் தலைமைக்கு எதிராகக் கேள்வியெழுப்பினார். அவர் மட்டுமின்றி ராபர்ட்ஸ்கஞ்சைச் சேர்ந்த சோட்டே லால் கார்வார், எட்டவாவைச் சேர்ந்த அசோக் குமார் தோரே நாகினாவைச் சேர்ந்த யஷ்வந்த் சிங் - அனைவருமே உபியைச் சேர்ந்தவர்கள் - ஆகியோரும் கட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். எஸ்சி / எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வது, இட ஒதுக்கீட்டுக் கொள்கையை இந்தக் கட்சி ஆதரிக்கவில்லை என உருவாகிவிட்ட தோற்றம், தலித்துகளுக்கு எதிராகப் பெருகிவரும் போலீஸ் அடக்குமுறைகள் ஆகிய பிரச்சினைகளைக் கட்சித் தலைமை சரிவரக் கையாளவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளனர். இவர்களுள் ஒருவர் உபி முதல்வர் ஆதித்யநாத் முன்பு இப்பிரச்சினைகளை எழுப்ப முற்படுகையில் அவர் அவர்களை மரியாதையோடு நடத்தவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

சாவித்ரி பாய் புலே தலித் அமைப்புகள் அறைகூவல் விடுத்த வலுவான பாரத் பந்திற்கு ஒருநாள் முன்னர் இந்திய அரசியல் சட்டத்தையும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையையும் பாதுகாப்பதற்கான பேரணி ஒன்றை நடத்தி, "நான் இந்தியாவின் எம்.பி., தொடர்ந்து எம்.பி.யாக இருக்கிறேனா இல்லையா என்பது ஒரு பொருட்டல்ல, ஆனால், அரசியல் சட்டத்திலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையிலும் எந்த மாற்றத்தையும் சகித்துக்கொள்ள மாட்டேன்" எனவும் முழங்கினார். அதேபோல, மற்றவர்களும் கட்சியின் அமைப்புக்குள்ளேயே தலித்துக்களுக்கு எதிரான பாகுபாடு, தலித்துகளுக்கு எதிராக எதிர்த் தாக்குதல்கள், அவர்களுக்கு எதிராகப் போடப்பட்ட பொய் வழக்குகள், யோகி ஆதித்யநாத்திடம் அவர்கள் சந்தித்த அவமரியாதை போன்ற பிரச்சினைகளை எழுப்பினர்.

முதுகெலும்பற்ற தலைவர்கள்

கட்சிக்குள் இந்த எம்.பி.க்களுக்கு நேர்மாறாக உதித் ராஜ், ராம்விலாஸ் பாஸ்வான், ஜதின்ராம் மான்ஜி மற்றும் ராமதாஸ் அதவாலே போன்ற அடிபணிந்துபோகும் தலித் அரசியல்வாதிகளையும் நாம் பார்க்கிறோம். இவர்களுள் முதலில் குறிப்பிடப்பட்டவர் பாஜக எம்.பி. என்ற முறையிலும் மற்றவர்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்ற முறையிலும் முதுகெலும்பற்ற தலித் தலைவர்களாகச் செயல்படுகின்றனர். ராமதாஸ் அதவாலே (இந்தியக் குடியரசு கட்சி-A), ராம்விலாஸ் பாஸ்வான் (லோக் ஜனசக்தி) ஆகியோர் செய்துகொண்ட கருத்தியல் சமரசம் மிக மோசமானது. நீண்ட காலமாக தலித் தலைவராக இருந்து தன் சொந்த அரசியல் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல ஒரு கட்சிக்குத் தலைமை தாங்கும் இவர்கள், தனது சொந்தக் கட்சிக்கே எதிராக ஒரு பேரணியை நடத்திக்காட்டிய சாவித்ரி பாய் புலேயுடன் ஒப்பிடப்பட முடியாதவர்கள்.

இந்த நான்கு கலக பாஜக தலித் எம்.பி.க்களைப் போல் இல்லாமல் இவர்கள் நீண்ட காலமாக தலித் செயல்வீரர்களாகவும் பல்வேறு இயக்கங்களுக்குத் தலைவர்களாகவும் இருந்துவந்துள்ளனர். இவர்கள் தலித் விரோதக் கட்சியுடன் கேள்விக்குள்ளாகக்கூடிய வகையில் கூட்டணி வைத்திருப்பது குறித்து குற்ற உணர்ச்சி எதுவும் இல்லாதிருப்பது மட்டுமின்றி பாஜகவை விமர்சனம் செய்ய வேண்டிய நேரத்தில் வாய்மூடி மௌனிகளாகவும் இருக்கின்றனர். பல நேரங்களில் அதவாலேவும் ராம்விலாஸ் பாஸ்வானும் பாஜகவுக்கு ஆதரவாக நின்று அது தலித்துகளையும் முஸ்லிம்களையும் விரட்டிவிடாமல் எவ்வாறு அவர்களைத் தன் பக்கம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என ஆலோசனைகளையும் வழங்கினர். கோபங்கொண்ட தலித்துகள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாஜக தலித் எம்.பி.க்களை "அறுதியிடும் தலித் அரசியல்வாதிகளாகவும்", பாஸ்வான் போன்றவர்களை "சந்தர்ப்பவாத தலித் அரசியல்வாதிகளாகவும்" பார்க்கின்றனர்.

எது எப்படியிருப்பினும், ஆர்எஸ்எஸ் - பாஜகவில் அவர்கள் உறுப்பினர்களாகவோ தலைவர்களாகவோ அல்லது கூட்டணிக் கட்சியினராகவோ இருப்பது பரந்த தலித் மக்களின் உயரிய நலன்களுக்கு உதவவில்லையென்றால் அதை நியாயப்படுத்த முடியாது. அவர்கள் அமைச்சர்களாகவும் எம்.பி.க்களாகவும் எம்.எல்.ஏ.க்களாகவும் ஆவதாலும் மற்ற பொறுப்புகளுக்கு வருவதாலும் எந்தப் பலனும் இல்லை. இட ஒதுக்கீட்டின் மூலம் அவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவது என்ற கருத்தே தலித்துகள் எதிர்கொள்ளும் பரந்த பிரச்சினைகளைக் கையாள வேண்டும் என்ற நோக்கிலேயாகும். பாஜகவிலுள்ள மேல்சாதித் தலைவர்களே அவர்களை அவமரியாதைக்குள்ளாக்கும்போது அவர்கள் தலித்துகளுக்கு எவ்வாறு பங்களிக்க முடியும்?

எனவே, பாஜகவிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் தலைவரொருவர் தலித் மக்களின் ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்குப் பங்களிக்கத் தனது பதவியைப் பயன்படுத்த முடியாதவராக இருந்தால் பின்னர் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருப்பதில் எந்தப் பலனும் இல்லை. அதாவது, தனிநபர் அரசியல் முன்னேற்றம் மட்டுமே இட ஒதுக்கீட்டின் நோக்கமல்ல.

தலித்துகள் ஏன் பாஜகவை ஆதரிக்கிறார்கள்?

அதிகாரத்தில் தொடர பாஜகவுக்கு உதவும் கடைசி மற்றும் மிக முக்கியப் பிரிவு நகர்ப்புற மற்றும் கிராமப்புற எழுத்தறிவற்ற இந்து தலித் மக்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் அம்பேத்கரிசம் மற்றும் தலித் உணர்வின் செல்வாக்கின் கீழ் வராதவர்கள். எங்கும் தீண்டாமை கடைப்பிடிக்கப்படும் ஒரு நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவுக்கு மிகவும் முக்கியமானதாக விளங்கும் சாதி அமைப்பே தங்களது தாழ்ந்த வாழ்க்கைக்குக் காரணம் என்று தலித்துகள் அனைவருக்குமே தெரிந்திருப்பினும், தலித் மக்கள் ஏன் பாஜகவுக்கு வாக்களிக்கின்றனர்?

கல்வியறிவற்ற ஆதரவற்ற ஏழை தலித் மக்கள் மாற்று மதங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்து மதத்தோடு ஒட்டிக்கொண்டு பாஜகவினருக்கு இடமளிக்கின்றனர். காரணம் அது தங்களது 'ஆதி கலாச்சாரம்' என்பதால் அது அவசியம் எனக் கருதுகின்றனர். யதார்த்தத்தில் அது உண்மையல்ல. மிகவும் வலுவான வாக்கு சக்தியாக விளங்கும் இவர்களை, மத மற்றும் கலாச்சார உணர்வுகள் வாயிலாகவும் நல வாழ்வுத் திட்டங்கள் வாயிலாகவும் சமபந்தி போஜனம் முதலான உத்திகள் வாயிலாகவும் ஆர்எஸ்எஸ் - பாஜக அணுகுகின்றனர். இந்த தலித் மக்கள் தங்களுடைய தலைவர்களைப் போலவே பாஜக அல்லாத அரசாங்கங்கள் தங்களை வாக்காளர்கள் என்ற முறையில் முக்கிய சக்தியாகப் பார்த்தாலும் ஏனைய சாதி இந்துக்களுக்கு நிகராகச் அவர்களுடன் சரிசமமாக நடத்தத் தகுதி வாய்ந்தவர்கள் அல்ல எனத் தங்களைக் கருதிக்கொள்கிறார்கள் போலும். பாஜக கருத்தியலின் ஆபத்தைப் பற்றி உணர்ந்திருந்தாலும் இத்தகைய உணர்வுதான் மாற்றத்திற்காகவோ அல்லது சில எதிர்பார்ப்புகளுடனோ பாஜகவுக்கு வாக்களிக்க இவர்களை நிர்பந்திக்கிறது போலும்.

கிராமங்களில் சிறுபான்மையினராக இருக்கும் அவர்களது நிலைகூட பயத்தினால் பாஜகவுக்கு வாக்களிக்க நிர்பந்திக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, பிரதான அரசியல் நீரோட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான அரசியல் கட்சிகள் - அவை பாஜகவாக இருந்தாலும் சரி அல்லது காங்கிரஸாகவோ இடதுசாரிகளாகவோ பிராந்தியக் கட்சிகளாகவோ இருந்தாலும் சரி - அவற்றுள் பெரும்பாலானவை சாதி அடையாளங்களின் அடிப்படையிலேயே தங்கள் கருத்தியல் அடித்தளங்களை நிறுவுகின்றன என்பது அவர்களுக்குப் புரிந்திருக்கும். எனவே, பாஜககூட ஒரு அரசியல் கட்சி என்ற முறையில் மேல்சாதிகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே, பாஜகவுக்கும் இதர கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. தலித்துகள் மீதான சாதி இந்துக்களின் அடக்குமுறைகள் வடஇந்திய மாநிலங்களில் 2000ஆம் ஆண்டிலும் மத்தியில் 2014இலும் அதே அளவில் நிலவின. அதாவது, பாஜக ஆட்சியில் இல்லாதபோதும் தலித்துகள் மீதான தாக்குதல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதுவே அநேகமாக தலித்துக்களை ஆர்எஸ்எஸ் - பாஜக மனுவாதி கருத்தியலின் அபாயத்தையும் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் ஏனைய கட்சிகளின் சாதியத்தையும் வேறுபடுத்திப் பார்க்க அனுமதிக்கவில்லை எனத் தோன்றுகிறது.

தலித்துகளின் நிர்பந்தம்?

என்றாலும், பாஜகவை உண்மையாகவே தேர்ந்தெடுத்துதான் தலித் மக்கள் அதற்கு வாக்களிக்கிறார்கள் என்ற தோற்றத்தை இக்காரணங்களனைத்தும் நமக்குக் கொடுக்கவில்லை. பலவீனமான தனிமைப்படுத்தப்பட்ட சமூகக் குழுக்கள் என்ற அவர்களது ஆபத்தான நிலைதான் பாஜகவுக்கு வாக்களிக்கும்படி அவர்களை நிர்பந்திக்கிறது. இந்த ஆபத்தான நிலையை எதிர்கொள்ள வேண்டுமானால் தலித் குடியிருப்புகளின் ஒவ்வொரு மூலைமுடுக்குக்கும் அம்பேத்கரியம் பரவ வேண்டியது அத்தியாவசியமாகும். ஒவ்வொரு தலித்தையும் தலித் நெட்வொர்க்கிற்குள் கொண்டுவர வேண்டியதன் முக்கியத்துவத்தை தலித் செயல் வீரர்களும் அமைப்புகளும் புறக்கணிக்கின்றனர். கடந்த காலத்தில் தாங்கள் யார், தற்போது தாம் என்னவாக இருக்கிறோம், தாம் எப்படி நடத்தப்பட்டோம், இப்போது தங்களுக்கு என்ன நிகழ்கிறது, அதை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் நாட்டில் தலித்துகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்க அவர்கள் எத்தகைய பாத்திரத்தை வகிக்க முடியும் என்பதை அறியாத அல்லது இதிலிருந்து விடுபட்ட, கிராமம் ஒன்றுகூட இருக்கக் கூடாது. இது செய்யப்பட்டால், உணர்வுபூர்வமான தலித்துக்களின் எண்ணிக்கை பிரமாண்டமாகப் பெருகும். அது தானாகவே தலித் விரோதக் கருத்தியலுக்கும் சமூக சக்திகளுக்கும் எதிராகச் செயல்படும்.

தலித்துகள் பாஜகவில் இருக்கலாமா?

யார் என்ன விளக்கம் கொடுத்தாலும், தங்கள் வரலாற்றையும், இந்து சமூகத்தில் தங்களது நிலையையும் இந்து மதத்தால் மறுக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளுக்கான அவர்களுடைய போராட்டங்களையும் இந்து மதத்தில் புத்திசாலித்தனமாகச் சகஜமானதாக்கப்பட்ட அவர்களின் தொடரும் அவமரியாதையையும் புரிந்துகொள்ளும் உணர்வுபூர்வமான எந்த தலித்தும் வலதுசாரிகள் கருத்தியலை ஏற்றுக்கொண்டு ஆர்எஸ்எஸ் -பாஜகவின் உறுப்பினர்களாகவோ அல்லது தொண்டர்களாகவோ மாறும் மறுகணமே அவர் தலித்தாக இருப்பது முடிவுக்கு வருகிறது என நம்புவதில்லை.

இது கருத்தியல் மட்டத்தில். மத்தியில் கடந்த நான்கு ஆண்டுகள் பாஜக ஆட்சியில் அது தலித் மக்களுக்கு என்ன செய்தது எனப் பார்ப்போமேயானால் தலித்துகள் பாஜகவின் எதிரிகள் என மீண்டும் மீண்டும் ஆர்எஸ்எஸ் - பாஜக நிரூபித்துள்ளது என வாதிட விளக்கமெதுவும் தேவையில்லை. வேறு எந்த சமூகத்தினரையும் விட தலித்துகளே பாஜகவின் முதல் எதிரிகள்; ஏனெனில், இந்துக்களாக இருந்தாலுமே அவர்கள் மனுவாதி இந்துயிசத்தையும் அதன் பரவலையும் வளர்ச்சியையும் தொடந்து விமர்சித்து வந்துள்ளனர். நிறைவேற சாத்தியமற்ற கனவை, அதாவது மதச்சார்பற்ற இந்தியாவை இந்து ராஷ்டிரமாக்க வேண்டும் என்ற கனவை, நிறைவேற்றிக்கொள்ள ஆர்எஸ்எஸ் முயற்சித்து வருகிறது. அத்தகைய அரசின் அடித்தளங்கள் சனாதன தர்மம், மனு ஸ்ம்ருதி, மத மற்றும் கலாச்சார வாழ்க்கையின் மற்றும் சாதி அமைப்பின் வேத மற்றும் புராண பாரம்பரியங்களின் அடிப்படையில் நிறுவப்படும்.

மறுபுறம் தலித்துகள், இந்து மதத்தை இலக்காகக் கொள்வதன் மூலம் சாதிமுறையை அழித்தொழிக்கவும் வரலாற்றுரீதியான சமூக கலாச்சார சமத்துவத்தை அடைவதற்காகவும் போராடிவருகின்றனர். 19ஆம் நூற்றாண்டில் ஜோதிபா பூலே முதல் தொடங்கி 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மால்கம் X சந்திரசேகர் ஆசாத் 'ராவண்' வரை போராட்டம் சாதி முறைக்கும் தலித்துகளை விலக்கி வைத்து அவர்களை அவமதிக்கும் அதன் உள்ளார்ந்த இயல்புகளுக்கும் எதிரானது ஆகும். ஒன்றரை நூற்றாண்டுகளாக தலித்துகளும் அவர்களுடைய தலைவர்களும் எவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடினார்களோ அவற்றை மீண்டும் சாராம்சமாகத் திருப்பிக் கொண்டுவருவதற்காக உள்ள ஆர்எஸ்எஸ் - பாஜக கருத்தியலோடு ஒருவர் எங்ஙனம் இணக்கமாக இருக்க முடியும்?

(ஆர்எஸ்எஸ் கனவுகாணும் இந்து ராஷ்டிரத்தில் தலித்துகளின் நிலை என்ன? நாளைக் காலை…)

நன்றி: கவுன்ட்டர் கரன்ட்ஸ்

தமிழில்: பா.சிவராமன்

இந்துத்துவ ஆட்சியில் தலித்துகள்!

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon