மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

பிறந்த நாள் கட்டுரை: பத்மினி ஒரு கலங்கரை விளக்கம்!

பிறந்த நாள் கட்டுரை: பத்மினி  ஒரு கலங்கரை விளக்கம்!

சிவா

நடிகை பத்மினியை சினிமாவில் முதன்முறையாகப் பார்த்தபோது அவருடைய திரை ஆளுமையை என்னால் சரிவரப் புரிந்துகொள்ள முடியவில்லை. நடிப்புக்கென எனக்குள் இருந்த இலக்கணங்களுக்குள் அவர் பொருந்திவரவில்லை. ஆனால், வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தின் ‘கண்ணும் கண்ணும் கலந்து’ பாடலில் சிறந்தவர் யார் எனப் பகுக்க முடியாத வகையில் ஆடித் தீர்த்த பத்மினி - வைஜெயந்தி மாலா ஆகியோரைப் பார்த்தபோது பிரமித்துப்போனேன். அந்த நடனத்தைப் பற்றிப் பேச எனக்கு அருகதை இல்லை. ஆனால், பத்மினி தனித்து அதிகாரம் செலுத்திய ‘தில்லானா மோகனாம்பாள்’ படம் வெளியாகி, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்குப் பிறகு பிறந்த ஒருவரை பத்மினி எப்படி ஆக்கிரமித்தார் என்பதைப் பற்றிப் பேசலாம். நேற்று (12.06.2018) பத்மினியின் பிறந்த நாள் என்பதால் அதற்கு ஒரு பொருத்தமும் அமைந்துவிட்டது.

முதல் காட்சியில் பத்மினி கண்ணாடி முன் நின்று ஒய்யாரமாய்த் தனது அழகையும், அதை எடுத்துக்காட்டிய ஆடையையும், அவை தாங்கி நின்ற நகைகளையும் சரிபார்த்துக்கொள்ளும் அழகைப் பின்னாளில்தான் கவனிக்க முடிந்தது. சிவாஜியின் நாதஸ்வர இசையைக் கேட்டு மயில் போல ஆடிக்கொண்டே மனதளவில் நடனமாடிக்கொண்டிருந்த காட்சிக்காகவே திரைப்படத்தை ஓட்டிப் பார்த்ததால் இதைக் கவனிக்க முடியாமல் போனது. மழைக்கு முன் மேகங்கள் உரசுவதால் ஏற்படும் இடிச் சத்தத்தைக் கேட்டு ஆடுமாம் மயில். ஆனால், அது ஆண் மயில். இங்கு ஆடியதோ பெண் மயில். மயில் அழகு அதன் ஆட்டத்தில் அதிகம் என்றாலும், ஒவ்வொரு பாதத்தையும் அளந்து எடுத்து வைக்கும் மயிலின் நடை, பத்மினிக்குக் கால் வந்த கலை.

நடிப்பைப் பொறுத்தவரையில் சிவாஜியை எங்கும் மிஞ்ச முடியாது. ஆனால், இப்படத்தின் ரயில் காட்சியில் இருவருக்கு மட்டும் குளோஸ்-அப் காட்சியொன்றை வைத்திருப்பார்கள். மனதளவில் நடைபெறும் அந்த உரையாடலில் சிவாஜியின் சின்னச்சின்ன வசனங்களுக்கு அவர் சுலபமாகச் சிரித்தும் ஆச்சரியப்பட்டும் கடந்துவிடுவார். பத்மினி “அழகர் மலை” என்பதற்குப் பார்வையை மேல் நோக்கி செலுத்தி, வலதிலிருந்து இடம் வரை கண்களைக் கொண்டுவந்து சிவாஜி மேல் நிறுத்திவிட்டு, “ஆயிரம் ஜனங்களுக்கு மத்தியில்” என்பதாகக் குறிப்பிட்டு, “ நீங்களை ஒளிஞ்சிக்கிட்டிருந்ததையே கண்டுபிடிச்ச எனக்கு இவ்வளவு நெருக்கத்திலா கண்டுபிடிக்க முடியாது” என சிவாஜியின் பார்வை கண்டு வெட்கத்தில் மேல் இமைகளை மட்டும் கீழே சாய்ப்பார். ஒரு நிமிடமே இடம்பெறும் இந்தக் காட்சியில் இடம்பெற்ற 60 முதல் 70 வார்த்தைகளை வெறும் கண்களால் பேசியபோதும், பத்மினியின் உடல் ரயிலின் ஆட்டத்தில் அற்புதமான சிறு நாட்டியத்தை அரங்கேற்றியிருக்கும்.

சிவாஜியின் பாத்திரத்தை அறிமுகப்படுத்தும்போது ரொம்பவும் பிடிவாதம் கொண்டவர் என்பார்கள். “நல்ல தொழில் இருப்பவர்களிடம் அப்படியொரு குணம் இருப்பது இயல்புதானே” என பத்மினி சொல்லியிருப்பார். ஆனால், தன்னால் இயன்றபோதெல்லாம் சிவாஜியின் சுயத்தைச் சீண்டி விளையாடுவதும், பிறகு தனி அறையில் அழுது தீர்ப்பதுமெனப் படம் முழுக்க நாட்டியத்தில் சிறந்தவராகவும், அன்புக்கு ஏங்கும் குழந்தையாகவும் நடித்திருப்பார். இது மிக உயர்ந்த எல்லையைத் தொடுவது நாகப்பட்டினத்தில்தான்.

ஜில் ஜில் ரமாமணியின் நாடகத்தைப் பார்க்க வரும் இடத்தில், சிவாஜியை மலேயா செல்லாமல் தடுக்க பத்மினி எடுக்கும் முயற்சி அத்தனை அழகானது. அதில், சிவாஜியின் கர்ஜனைகளையும், ரகசியக் கட்டளைகளையும் அடித்து உடைத்து “சொன்ன வாக்கைக் காப்பாற்றாமல் ரோஷம் கெட்டுப்போய் ஓடும் மனிதனுக்கு எதற்கு மரியாதை” என சிவாஜியின் இமேஜை மொத்தமாக டேமேஜ் செய்வார். அதனால், தில்லானா வாசிக்க ஒப்புக்கொண்டதும், நொடி நேரம் தனது திருப்தியை வெளிக்காட்டி அடுத்த நொடியே “அப்படியா அதையும்தான் பாப்போம்” என நினைத்ததைச் சாதித்து நிற்கும் காட்சியில் பெருஞ்சிங்கத்தின் பிடரியைக் கடித்து விளையாடும் குழந்தையின் தன்மையைப் பெற்றிருப்பார் பத்மினி.

தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் பத்மினியின் ஆட்டத்துக்குப் பெயர்பெற்றது. ஆனால், அதைத் தவிர்த்து எதை எதையோ பேசிக்கொண்டிருப்பதாக நினைக்கலாம். பத்மினியைச் சிறப்பாக நடனமாடக்கூடியவர் என்ற சிறு வட்டத்துக்குள் மட்டும் சுருக்கிவிட முடியாது அல்லவா. ஆனாலும், பத்மினியையும் நடனத்தையும் பிரித்துவிட முடியாது. தில்லானாவுக்கு ஆட வீட்டில் பயிற்சி எடுக்கும் பத்மினியின் சிறு நடனக் கூறு இந்தப் படத்தில் மிக முக்கியமானது.

பரதநாட்டியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றதும் அதற்கான உடையை முதலில் வாங்கிவிடுகிறார்கள். அப்படிக் கற்றுக்கொண்டு தேர்ச்சியடைந்த பிறகும், திடீரென ஒரு இடத்தில் ஆடச் சொன்னால் “சேலையைக் கட்டிக்கொண்டு எப்படி ஆடுவது?”என்று கேட்பவர்களை எல்லா இடத்திலும் காணலாம். சமீபத்தில், புதுக்கோட்டையைச் சேர்ந்த சதிர் ஆட்டக் கலைஞர் முத்துக்கண்ணம்மாள் தக்‌ஷிண சித்ரா விருது பெற்றபின் நடனமாடியபோது, சிலரையும் ஆடுவதற்கு அழைத்தார். அப்போது, சேலைஅணிந்தவர் முதல் பாவாடை சட்டை அணிந்தவர்கள் வரை அனைவரும் தயக்கம் காட்டினார்கள். இவ்வளவு நேரம் நான் ஆடுனதைப் பாக்கலயா என அவர் கேட்ட பிறகே ஒவ்வொருவராய் முன்வந்து கடைசியில் அனைவரும் ஆடினார்கள். அதுபோலவே,சேலையைக் கட்டிக்கொண்டு தில்லானாவுக்குத் தயாராகும் பத்மினியும் சிறப்பான நடனம் ஒன்றை அமைப்பார்.

சேலைக்குள் ஒளிந்துகொண்டு ஆடும் கால்கள் அவ்வப்போது எட்டிப் பார்ப்பதன் மூலம் மட்டுமே அவையும் ஆடுகின்றன என்பது தெரியும். மற்றபடி கை தனியே, கால் தனியே, தலை தனியே என புரோகிராம் செய்யப்பட்டதுபோல அவர் ஆடும் அழகு அத்தனை அர்த்தமானது. ஆடுவதால் கால்களில் ஏற்படும் அதிர்வு உடல் முழுவதும் பரவுவது இயல்பு. ஆனால், அத்தனை லாகவமாகக் கால்களைத் தரையில் உதைக்காமல் ஒற்றி எடுத்து, துள்ளி எழும் மான்போல அவர் ஆடும் அழகைக் காண ஆயிரம் ஜிகாபைட் டேட்டா வேண்டும்.

பத்மினி நடனத்தில் சிறந்தவர்தான். ஆனால், நடிப்பிலும் அவர் தேர்ந்தவர். சொல்லப்போனால், நடனக் கலைக்குள் நடிப்புக் கலையும் அடக்கம். நடனம் என்பதே சில பாவனைகளையும் உருவகங்களையும் செய்திகளையும் பேசாமல் தன் உடல் மூலமாக நிகழ்த்திக் காட்டுவது. உடல் முழுவதும் நடிக்காமல் இது எப்படிச் சாத்தியம்? இது புரிந்தபோதுதான் நடனக் கலைஞருக்கு நடிப்பு இயல்பாகவே வரும் என்பது புரிந்தது. பத்மினி நடனம் ஆடாத காட்சிகளை உன்னிப்பாகக் கவனித்தால் இது மேலும் தெளிவாகப் புரியும். மேலே சொன்ன ரயில் நிலையக் காட்சியில் அபிநயம் என்ற ஒரு செயலுக்கான தேவை இருக்கிறது. ஆனால், அதற்கான தேவை இல்லாதபோதும் பத்மினியின் கண்கள் சேதி சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றன. அவருடைய முகத்தின் சிறு சிறு அசைவுகள், உதட்டின் நெளிவுகள் ஆகியவையும் பாத்திரத்தின் உணர்வுகளைப் பேசிக்கொண்டுதான் இருக்கின்றன. சந்தேகம் இருப்பவர்கள் மன்னாதி மன்னன் படத்தில் வரும் ‘நீயோ நானோ யார் நிலவே’ என்னும் பாட்டில் பத்மினியின் முக பாவங்களையும் உடல் அசைவுகளையும் பார்த்தால் புரியும்.

பத்மினி நடனமாடாதபோதும் நடனம் தந்த பாவனைத் திறனும் உடல் மொழியும் அவரிடமிருந்து வெளிப்படத்தான் செய்கின்றன. நடனத்தில் அவை அபிநயமாக, அடவுகளாக, பாவங்களாக வெளிப்படும். நடனமாடாத காட்சிகளில் மிக நுட்பமாக, சிறு அசைவுகளாக வெளிப்படும். அதாவது, அவர் நடனத்தில் நடிப்பு இருக்கும். நடிப்பில் நடனம் இருக்கும்.

நடனத்தைக் கடந்து ஒரு நடிகையாகவும் கிடைக்கும் இடைவெளியிலெல்லாம் தனது திறமைகளை வெளிப்படுத்திய பத்மினி, இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு சினிமாவிலிருந்து விலகியிருந்தார். திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி, அங்கேயே ஒரு நடனப் பள்ளியையும் தொடங்கிவிட்டிருந்ததாகத் தெரியவந்தபோது, நடனத்துக்கும் நடிப்புக்குமான நெருக்கத்தை உணர முடிந்தது. நடிப்பு எனும் கலை, நடனத்திலிருந்து பிரிந்துவந்ததாகவும் சொல்லலாம். தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜியின் குரு, நாதத்தையும் நடனத்தையும் தன் இரு கண்களாகச் சொல்வதுபோல, பத்மினியின் திரை வாழ்வில் அவரது நடனத் திறமையும் நடிப்புத் திறமையும் அவரின் இரு கண்களாகவே இருந்திருக்கின்றன. அதனைப் பார்க்க முடியாமல், நடிகைக்கான இலக்கணம் பத்மினிக்கு இல்லையென நான் நினைத்ததை ரசனைக் குறையாகவே எடுத்துக்கொண்டு பத்மினியை மெருகேற்றிய நடனக் கலை மன்னித்துவிடும் என நம்புகிறேன்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon