மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

சென்னை: போலீஸ் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு?

சென்னை: போலீஸ் தாக்கியதில் முதியவர்  உயிரிழப்பு?

சிசிடிவி காட்சிகளுடன் காவல் துறையினர் மறுப்பு

சமீபத்தில் சென்னை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து போலீஸார் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி மணிகண்டன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து போக்குவரத்துக் காவலர்கள் வாகன ஓட்டிகளிடம் கடுமையாக நடந்து கொள்வதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் நேற்று (ஜூன் 12) மதுரவாயலில் போக்குவரத்து போலீஸார் முதியவர் ஒருவரைத் தாக்கியதால் அவர் உயிரிழந்தார் என்ற தகவல் பரவியது

ஆனால், போலீஸ் தாக்கியதில் முதியவர் உயிரிழக்கவில்லை என்பதை சிசிடிவி காட்சிகளுடன் காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை மதுரவாயலைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (59). அதிமுக நிர்வாகியான இவர் நேற்று காலை 11.45 மணியளவில் தனது மகன் வினோத் குமாருடன் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காரில் சென்றுள்ளார். அப்போது மதுரவாயிலில் போக்குவரத்து காவலர் ராமலிங்கம் பணியில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் முதியவர் சதீஷ்குமார், காவலர் ராமலிங்கத்திடம் வேலையைச் செய்யாமல் செல்போனில் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அந்தச் சமயத்தில் பின்னால் வந்த வாகனங்கள் முதியவர் காரை இடிக்க நேரிட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர் போக்குவரத்து காவலருடன் மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு தொடர்ந்து சில நிமிடங்கள் வரை இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் சில நிமிடங்களில் காரில் ஏறச் செல்லும்போது முதியவர் மயங்கிக் கீழே விழுந்துள்ளார்.

இதைக் கண்ட காவலர் ராமலிங்கம் விரைந்து சென்று முதியவரைத் தூக்கி காரில் அனுப்பி வைத்துள்ளார். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

மயங்கி விழுந்த முதியவர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மகன் வினோத் அளித்த புகாரின்பேரில் அவரது உடல் தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக முதியவர் சதீஷ்குமார் இதயநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார். ரியல் எஸ்டேட் மற்றும் மணல் வியாபாரத் தொழில் செய்து வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

காவலர் தாக்கியதால்தான் முதியவர் உயிரிழந்தார் என்று தகவல் பரவியதைத் தொடர்ந்து காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர். அதில், காவலர் ராமலிங்கம், முதியவர் சதீஷ்குமாரைத் தூக்கி காரில் ஏற்றி அனுப்பியது பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon