மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற பெண் ரயில்வே போலீஸ்!

பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற பெண் ரயில்வே போலீஸ்!

மும்பையைச் சேர்ந்த ரயில்வே பெண் போலீஸ் ஒருவர் மகாராஷ்டிராவின் பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

மத்திய ரயில்வே மூலம் ஆர்பிஎஃப் துணை இன்ஸ்பெக்டராகப் பணியில் சேர்ந்தவர் ரேகா மிஸ்ரா (32). கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு ரயில் நிலையங்களில் காணாமல்போன, கடத்தப்பட்ட மற்றும் வீட்டிலிருந்து ஓடிவந்த குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறார். பல்வேறு சிரமங்களுக்கு இடையில் எவ்வாறு குழந்தைகளைக் காப்பாற்றினார் என்பது குறித்து மகாராஷ்டிராவின் பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரேகா மிஸ்ரா பிறந்தார். இவர் தந்தை ஒரு ராணுவ அதிகாரி. 2014ஆம் ஆண்டு ரேகா மிஸ்ரா ஆர்பிஎஃப்பில் சேர்ந்தார். தற்போது, சத்ரபதி சிவாஜி மஹாராஜ் ரயில் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவரது சாதனைகளைப் பாராட்டி மத்திய ரயில்வேயின் பொது மேலாளர் டி.கே.சர்மா தலைமையில் நேற்று முன்தினம் (ஜூன் 11) சிறப்பு விழா ஒன்று நடைபெற்றது. அப்போது பேசிய மேலாளர் டி.கே.சர்மா, மிஸ்ரா சிறந்த வேலையைச் செய்துள்ளார்; அதே நேரத்தில் சமூக நலனுக்காகவும் உழைத்துள்ளார்; பாடப்புத்தகத்தின் ஒரு பகுதியில் இவர் இடம்பெற்றுள்ளது, இனிவரும் தலைமுறையினருக்கு நிச்சயமாக நல்ல ஊக்கத்தை அளிக்கும் எனக் கூறினார்.

இதுகுறித்து ரேகா மிஸ்ரா கூறுகையில், ”இந்தத் தருணம் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. பல குழந்தைகள் வீட்டில் பெற்றோர் அல்லது சகோதரர்களிடம் சண்டை போட்டுவிட்டு, வீட்டை விட்டு ஓடி வந்துவிடுவார்கள். சிலர் முகநூல் நண்பர்களைப் பார்க்கவோ அல்லது சினிமா நடிகர்களைப் பார்க்கவோ அப்படிச் செய்கின்றனர். ஆனால், மற்றவர்கள் மும்பை நகர் மீதான ஈர்ப்பு காரணமாக இங்கே வந்துவிடுகின்றனர். சில தருணங்களில், குழந்தைகள் கடத்தப்பட்டும் கொண்டு வரப்படுகின்றனர்.

அதனால், என்னுடைய குழு எப்போதுமே அந்தக் குழந்தைகள் மீது ஒரு கண் வைத்திருப்போம். இப்படி வீட்டைவிட்டு வருபவர்கள் 13 முதல் 16 வயதுடைவர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்தப் பிரச்சினையையும் சந்திக்காமலும், யாரிடமும் சிக்கி தவறான பாதையில் செல்லாமலும் தடுத்து, அவர்களை அவர்களுடைய குடும்பத்துடன் சேர்த்து வைப்பதுதான் எங்களது நோக்கம்.

கடந்த நான்கு ஆண்டுகளாக, இதுபோன்று 45 சிறுமிகள் உள்பட 430 குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளோம். இப்படிக் காப்பாற்றப்பட்டவர்கள் பெரும்பாலும், உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்தக் குழந்தைகளின் எண்ணிக்கை கோடை விடுமுறையின்போது அதிகரிக்கும். இரண்டு டஜன் குழந்தைகள் அவர்களின் குடும்பங்களைக் கண்டுபிடித்து ஒப்படைக்கப்பட்டனர். மீதமுள்ள குழந்தைகள் சிறுவர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்” எனக் கூறினார்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon