மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

சிறப்புக் கட்டுரை: அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் மாநிலங்கள்!

சிறப்புக் கட்டுரை: அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் மாநிலங்கள்!

அபிஷேக் வக்மரே & இந்திவ்ஜால் தஷ்மனா

இந்தியாவில் உருவாக்கப்படும் அமைப்பு சார்ந்த வேலைவாய்ப்புகளில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மூன்று முன்னணி தொழில் மயமான மாநிலங்கள் உருவாக்குவதாக எம்ப்ளாயீஸ் பிராவிடன் ஃபண்ட் அமைப்பின் ஏழு மாதத் தகவல் கூறுகிறது.

எனினும், தேசியத் தலைநகர் பகுதியைச் சேர்ந்த டெல்லி, குருகிராம், நொய்டா ஆகிய இடங்களும் இம்மூன்று மாநிலங்களுடனும் ஒப்பிடுவதற்குத் தகுதியுடன் உள்ளன. இப்பகுதிகளில் உருவாகும் வேலைவாய்ப்புகள் அந்நகரங்கள் சார்ந்த மாநிலங்களான ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகியவற்றுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

டெல்லி, சண்டிகர் ஆகிய இரண்டு ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் இருபது மாநிலங்களுக்கான வேலைவாய்ப்புத் தகவல்கள் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளன. தெலங்கானா மாநிலம் சார்ந்த தகவல்கள் ஆந்திரப் பிரதேசத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட முதற்கட்டத் தகவல்களில், மாநில வாரியான, தொழில் வாரியான தகவல்கள் எதுவும் இல்லை.

இந்தியாவில் சில முன்னணி மாநிலங்கள் மட்டும் பெரும்பான்மையான வேலைவாய்ப்புகளை வழங்கி வந்தன என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். எனினும், இந்தத் தகவல்கள் அந்தக் கருத்துக்கு வலு சேர்ப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கேர் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதாரவியலாளரான மதன் சப்னாவிஸ் பேசுகையில், “இம்மாநிலங்கள் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கின்றன. மேலும் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களாகவும் இவை உள்ளன. உற்பத்தித் துறை, சேவைத் துறை, கட்டுமானத் துறை என அனைத்துத் துறைகளிலும் இம்மாநிலங்கள் பங்கு கொண்டுள்ளன. ஆகையால், இம்மாநிலங்கள் பெரும்பாலான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்ற தகவல் தர்க்கமானதாகத் தெரிகிறது” என்கிறார்.

2017 செப்டம்பர் மாதத்துக்கும், 2018 மார்ச் மாதத்துக்கும் இடையேயான காலகட்டத்தில் முறைசார்ந்த துறையில் சுமார் 39.3 லட்சம் வேலைவாய்ப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. எனினும், பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் உருவான வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

மார்ச் மாதத்தில் உருவான வேலைவாய்ப்புகளின் மொத்த எண்ணிக்கை 6,13,134 ஆக உள்ளது. பிப்ரவரி மாதத்தில் உருவான வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 5,89,034 ஆகும். ஜனவரி மாதத்தில் உருவான வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 6,14,369 ஆகும். நவம்பர் மாதத்தில் உருவான வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 6,32,280.

முறைசார்ந்த துறைகளில் உருவான 39.3 லட்சம் வேலைவாய்ப்புகளில், மகாராஷ்டிர மாநிலத்தில் 4,50,000 வேலைவாய்ப்புகளும், தமிழ்நாட்டில் 4,65,000 வேலைவாய்ப்புகளும், குஜராத்தில் 3,93,000 வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளன. இதர வேலைவாய்ப்புகள் 17 மாநிலங்களிலும், டெல்லி, சண்டிகர் ஆகிய ஒன்றியப் பிரதேசங்களிலும் உருவாகியுள்ளன.

அனைத்து வயது வரம்புகளிலும் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிய மாநிலம் மகாராஷ்டிரா ஆகும். 18 வயதுக்குட்பட்ட வேலைவாய்ப்புகளில் அதிகமாக முறைப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்புகள் தமிழகத்தில் உருவாகியுள்ளன.

ஏழு மாதக் காலத்தில், 18 முதல் 21 வயது வரம்பிற்குள் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 12.9 லட்சம் ஆகும். 22 முதல் 25 வயது வரம்பிற்குள் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 11.2 லட்சமாக உள்ளது. இந்தத் தகவல்களில், 20க்கும் அதிகமான ஊழியர்களைப் பணியமர்த்தியுள்ள நிறுவனங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. ஏனெனில், பிராவிடண்ட் நிதி வழங்க 20 ஊழியர்கள் கட்டாயமாகப் பணியமர்த்தப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள தொழில் நிறுவனங்களில் 99.3 விழுக்காடு நிறுவனங்கள் 20க்கும் குறைவான ஊழியர்களையே பணியமர்த்துகின்றன என்று ஆறாவது பொருளாதாரக் கணக்கெடுப்பின் தகவல்கள் கூறுகின்றன.

2017-18ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 70 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக ஜனவரி மாதத்தில் ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான சவுமியா காந்தி கோஷும், பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தின் பேராசிரியர் புலக் கோஷும் நடத்திய ஓர் ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலங்களில் உருவாகியுள்ள அமைப்பு சார்ந்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை மகாராஷ்டிராவில் 8,17,302 ஆகவும், தமிழ்நாட்டில் 4,65,319 ஆகவும், குஜராத்தில் 3,92,954 ஆகவும், ஹரியானாவில் 3,25,379 ஆகவும், கர்நாடகாவில் 2,93,779 ஆகவும், டெல்லியில் 276,877 ஆகவும் உள்ளது.

நன்றி: பிசினஸ் ஸ்டேண்டர்டு

தமிழில்: அ.விக்னேஷ்

நேற்றைய கட்டுரை: அழியும் பனையால் அழியும் பயன்கள்!

மின்னஞ்சல் முகவரி: [email protected]

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon