மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

சுமையைக் குறைக்க அரசு முயற்சி!

சுமையைக் குறைக்க அரசு முயற்சி!

ஏற்றுமதியாளர்களுக்கு ரீஃபண்ட் தொகையைச் செலுத்துவதற்கு ஒரு புதிய வழிமுறையை உருவாக்க வர்த்தக அமைச்சகம் முயன்று வருகிறது.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் ‘பிசினஸ் லைன்’ ஊடகத்திடம் பேசுகையில், “வரித் தொகை ரீஃபண்ட் செய்யப்பட்டால் ஏற்றுமதியில் போட்டித் தன்மை அதிகரிக்கும். ஏனெனில், ஏற்றுமதிக்கு இந்தியா வழங்கும் மானியங்கள் குறித்து உலக வர்த்தக அமைப்பில் கேள்விகள் எழுந்துள்ளன. ஜிஎஸ்டியின் கீழ் ஏற்றுமதியாளர்களுக்கு வரி ரீஃபண்ட் செய்யப்படுவதில்லை. மேலும், ஏற்றுமதியாளர்கள் மின்சாரத்துக்கான வரி, பெட்ரோலியப் பொருட்களுக்கான மதிப்புக் கூட்டு வரி, மண்டி வரி, ஸ்டாம்ப் வரி மற்றும் இதர வரிகளைச் செலுத்தி வருகின்றனர். ஆக, வரிகளை திருப்பிச் செலுத்துவதற்கு ஒரு வழிமுறைக் கண்டுபிடிக்கப்பட்டால், அது மிகப்பெரிய நிவாரணமாக அமையும்” என்று கூறினார்.

ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலின் தகவலின்படி, ஜவுளித் துறையில் உள்ள பருத்திக்கான வரி, மின்சாரத்திற்காக வரி, பதிவு செய்யப்படாத டீலர்களிடம் இருந்து வாங்கப்படும் நார்கள் மீதான உள்ளீட்டு வரிக் கடன் கட்டுப்பாடுகள் போன்றவற்றால், ஜவுளித் துறை மீது கூடுதலாக 4 முதல் 5 விழுக்காடு சுமை சுமத்தப்படுகிறது. வரித் தொகையை ரீஃபண்ட் செய்வதற்கு ஒரு புதிய வழிமுறையைக் கண்டுபிடிக்க வர்த்தக அமைச்சகம் ஒரு குழுவை அமைத்துள்ளது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon