மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு நாளையா?

18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு நாளையா?

தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் நாளை (ஜூன் 14) தீர்ப்பு வரும் என்று அரசியல், வழக்கறிஞர்கள் வட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அப்போதைய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் 19 எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்தனர். அவர்களில் ஜக்கையன் மட்டும் மீண்டும் எடப்பாடி அணிக்கே திரும்பிவிட, மீதமுள்ள 18 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த பரிந்துரையின் பேரில் கடந்த வருடம் செப்டம்பர் 18 ஆம் தேதி சபாநாயகர் தனபால் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்கு பல கட்டங்களைக் கடந்து, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை முடிந்து கடந்த ஜனவரி 23 ஆம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

அன்று முதல் தீர்ப்பு இப்போது வருகிறது, அப்போது வருகிறது என்று தகவல்கள் வெளியாவதும் ஆனால் தீர்ப்பு வெளியாகாத சூழலுமே நிலவியது. ஆனால் நாளை (ஜூன் 14) இவ்வழக்கின் தீர்ப்பு உறுதியாக வெளியாகும் என்று உயர் நீதிமன்ற வட்டாரங்களில் இருந்து தகவல்கள் பரவி வருகின்றன.

சென்னைக்கு வரும் நீதிபதி சுந்தர்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை தலைமை நீதிபதியோடு இணைந்து விசாரித்த நீதிபதி சுந்தர் அண்மையில் மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் நீதிபதி சுந்தர் நாளை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வருகிறார். .

“18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு உள்ளிட்ட வேறு சில வழக்குகள் நீதிபதி சுந்தர் விசாரித்தவை. நாளை நீதிபதி சுந்தர் சென்னை உயர் நீதிமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள இருப்பதால் அவரால் விசாரிக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது’’ என்கிறார்கள் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்.

இதுகுறித்து நாம் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் பேசியபோது, “நீதிபதி சுந்தருக்கு நாளை (ஜூன் 14) மதுரையில் அமர்வு ஏதுமில்லை. அவர் சென்னை உயர் நீதிமன்றம் செல்வது உறுதியான தகவல்தான்’’ என்கிறார்கள்.

தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றி எழுதப் போகும் தீர்ப்பு இது என்று பல தரப்பினரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுபற்றி தனக்கு நெருக்கமான சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது தீர்ப்பு வழங்கும் இரு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்துகள் கொண்ட தீர்ப்பினை வழங்க வாய்ப்புள்ளது என்றும், உச்ச நீதிமன்றம் சென்றபின்பே இதில் இறுதித் தீர்ப்பு கிடைக்கும் என்று முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம்.

ஆனால், தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வழக்குப் பட்டியலில் இந்த வழக்கு இடம்பெறவில்லை.

புதன், 13 ஜுன் 2018

அடுத்ததுchevronRight icon