மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

சிறப்புத் தொடர்: மாஃபியா உலகை வியப்பில் ஆழ்த்திய சிறுவன்!

சிறப்புத் தொடர்: மாஃபியா உலகை வியப்பில் ஆழ்த்திய சிறுவன்!

ஹரிஹரசுதன் தங்கவேலு

தாவூத் இப்ராஹிம் பற்றிய தொடர் - 3

தாவூத்திடம் சில விநோதமான பழக்கங்கள் உண்டு. அதில் ஒன்று, அவர் கட்டிய மாளிகைகளுக்கு வெள்ளை மாளிகை (The White house) எனப் பெயரிடுவது. பெயர் மட்டுமில்லாமல் மாளிகையின் கட்டுமான வடிவம்கூட அமெரிக்க அதிபர் மாளிகையைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். தாவூத்தின் துபாய் வீடு, லண்டன் வீடு, இப்போது கராச்சியில் இருக்கும் வீடு என அனைத்து மாளிகைகளின் பெயரும் வெள்ளை மாளிகைதான். தாவூத் எங்கு இருக்கிறாரோ அதைப் பொறுத்து ‘வெள்ளை மாளிகை’ பெயரும் இடம் மாறும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள், உலக நாடுகளின் கறுப்புப் பொருளாதாரப் பணப் பரிமாற்றங்கள், அதன் பின்னணி அரசியல் புள்ளிகளின் சந்திப்பு, ஹவாலா ஒப்பந்தங்கள் என அனைத்தும் நடப்பது இந்த ‘அதிபர் மாளிகை’யில்தான்.

பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியில், சர்வதேச பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதில், தாவூத்திற்குப் பெரும் பங்கு உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. 2000ஆம் வருடத்தில் பாகிஸ்தானில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின்போது, மூடப்படும் நிலையில் இருந்த பாகிஸ்தான் மத்திய வங்கியை மீட்டெடுத்தது அனைத்தும் தாவூத்தின் கறுப்புப் பணம் என்கிறார்கள்.

ஒரு நாட்டின் மத்திய வங்கியை திவாலாகாமல் காப்பாற்றிய தாவூத்தின் முதல் குற்றம், ஒரு வங்கி பணத்தை கொள்ளையடித்து ஆரம்பமானதுதான் விதியின் புதிர் விளையாட்டுகளில் ஒன்று!

நகரம் முழுவதும், காவல் துறை தங்களைத் தேடிக்கொண்டிருப்பதை அறிந்த நண்பர்கள் தலைமறைவானார்கள். தாவூத் தன் அண்ணன் சபீருடன் ஓடி ஒளிந்தான். சிறுவர்கள் நிகழ்த்திய பெருங்குற்றம் என்பதால், காவல் துறைக்கு விடப்பட்ட ஒரு சவாலாக இதைக் கருதி, தனிப் படைகள் அமைத்து நகரம் எங்கும் தேடுதல் வேட்டை நிகழ்த்தப்பட்டது. அதிலும் க்ரைம் பிராஞ்ச் பிரிவு காவல் துறையினர் மிக முனைப்பாகத் தேடிக்கொண்டிருந்தனர்.

அதில் ஒரு தலைமை கான்ஸ்டபிளின் பெயர் இப்ராஹிம் கஸ்கர். மிக நேர்மையானவர், கண்டிப்பானவர். தன் வறுமையைப் பொருட்படுத்தாமல் பரிசுத்தமான நேர்மை வாழ்வு வாழ்பவர். கஸ்கரின் மனைவி பெயர் அமினா. குழந்தைகள் இறைவனின் வரம் என்பதில் பெரு நம்பிக்கை கொண்டிருந்த இந்தத் தம்பதிக்கு எட்டு ஆண் வாரிசுகள், நான்கு மகள்கள் உட்பட மொத்தம் பன்னிரண்டு குழந்தைகள். இவர்கள் அனைவரும் வாழ்ந்த வீடு பத்துக்குப் பத்துக்கு சதுர அடி கொண்ட ஒரு சிறிய வீடு. வறுமையில் இவர் வாழ்வு இருந்தாலும், கஸ்கர் ஒரு காவலர் என்பதால் டோங்கிரி பகுதி முழுவதும் செல்வாக்கு இருந்தது. மேலும் ஹாஜி மஸ்தானையும் இன்னொரு தாதா கரீம் லாலாவையும் துணிச்சலாகச் சந்திக்கும் ஒரு காவலர் கஸ்கர் மட்டுமே. இந்த இரு தாதாக்களும் கஸ்கரின் மீது நட்பு ரீதியாக மரியாதை வைத்திருந்தனர். இப்பகுதி இஸ்லாம் சமூகத்தினரின் சிறு சிறு பிரச்சினைகள் அனைத்துக்குமே கஸ்கர் தலைமையில்தான் பஞ்சாயத்து நடைபெறும். இதற்கு ஒரே காரணம் கஸ்கரின் களங்கமில்லா நேர்மை.

அப்படியான கஸ்கர், இன்றைய தேடுதலில் மற்ற காவலர்களை விட வெறி கொண்டு இந்தக் கொள்ளைக் கூட்டத்தைத் தேடி அலைந்தார். கடமையைக் கடந்து நிகழ்த்த்திய இந்தக் கடின வேட்டைக்கு இன்னொரு காரணமும் இருந்தது. அவர் தேடிக்கொண்டிருந்தது தன் மகன்களை! ஆம், கஸ்கரின் இரண்டாவது மகன் தாவூத் இப்ராஹிம். முதல் மகன் சபீர்!

இன்று செல்வச் செழிப்பில் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியான தாவூத்தின் ஆரம்ப காலம் கொடிய வறுமையில் கழிந்தது. தந்தை கஸ்கருக்கு வரும் சொற்ப வருமானம் பன்னிரண்டு குழந்தைகளின் ஒரு வேளை உணவுக்குக்கூடப் போதவில்லை. அவர்களின் காலை உணவு பெரும்பாலும் டீ, ரொட்டியாகத்தான் (BRUN pav) இருந்தது. அதற்கு அடுத்த வேளை உணவு என்பது இரவு உணவுதான்.

கஸ்கரால் தன் பிள்ளைகளுக்கு இரு வேளை உணவு மட்டுமே கொடுக்க முடிந்தாலும் அவர்களுக்கு நல்ல கல்வி கொடுக்க நினைத்தார். கல்வி மட்டுமே பிள்ளைகளின் எதிர்காலத்தை மாற்றும் என உறுதியாக நினைத்தார், மற்ற பிள்ளைகளை நகராட்சி பள்ளியில் படிக்க வைத்த கஸ்கர், தாவூத்தை ‘Ahmed Sailor High School’ எனும் ஆங்கில வழிப் பள்ளியில் படிக்க வைத்தார்.

தாவூத்தின் மீது தனிப் பிரியம் கொண்டவர் கஸ்கர். முதல் பிள்ளை சபீருக்குப் பிறகு இரண்டாவது மகன் பிறந்ததும் தாவூத் எனப் பெயரிட்டதற்குக் காரணம் இருந்தது. புனித நூலான குரானில் அனுபவ அறிவும் அதீத ஆற்றலும் கொண்ட இறைத் தூதரின் பெயர் தாவூத். இறைத் தூதர் மட்டுமல்லாது இறைவனின் படைப்புகளான உயிருள்ளவை, உயிரற்றவை அனைத்தின் அரசனாக ஆண்டவர் பெயரும் தாவூத். தன் பிள்ளையும் அதே போன்றதொரு பெயரையும் புகழையும் பெற வேண்டும் என நினைத்துச் சூட்டிய பெயர்தான் தாவூத். பள்ளியில் படிப்பதுடன் நில்லாமல் RSP (Road Safety Patrol) குழுவிலும் பயிற்சி பெற வைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபடுத்தினார்.

பத்து வயது வரை பள்ளிப்படிப்பைத் தொடர்ந்த தாவூத்தின் வாழ்வை, அவர் தந்தையின் பணி நீக்கம் மாற்றியது. 1966இல் நிகழ்ந்த ஒரு கொலை வழக்கைத் திறம்பட விசாரிக்காத காரணத்திற்காக க்ரைம் பிராஞ்ச் குழுவின் அனைத்துக் காவலர்களும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதில் கஸ்கரும் ஒருவர். இருந்த சொற்ப வருமானமும் இனி இல்லை என்ற துயர நிலையில் மகன்களைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தினார் கஸ்கர். குடும்பம் பட்டினியில் வாடியது, கிடைத்த தற்காலிக வேலைகள் அனைத்தையும் செய்தார் கஸ்கர். மிகக் குறைந்த வருமானம் ஈட்டினாலும் பணத்துக்காகச் சட்ட விரோத வேலைகள் செய்ய அவர் மனம் அப்பொழுதும் இசையவில்லை, தொடர்ந்து நேர்மையாக வாழ்ந்தார்.

ஆனால், தாவூத்திடம் அவர் தந்தையிடம் இருந்த நேர்மை துளியும் இல்லை, பள்ளி செல்வதிலிருந்து விடுபட்ட பிறகு சகவாசங்கள் மொத்தமாய் அவனைச் சீரழித்தன. கடத்தல் குற்றப் பின்னணிகள் கொண்ட நபர்கள், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் சமூகம் என மும்பை மாஃபியா ஒரு சிறுவனை மெல்ல மெல்ல விழுங்கத் தொடங்கியது. தாதாக்கள் ராஜாங்கம் மற்றும் அவர்கள் செல்வாக்கான வாழ்க்கை பற்றிய கனவுகளில் திளைத்தான் தாவூத். சகாக்களுடன் இணைந்து மோஹத்தா மார்க்கெட்டில் ரூபாய் 5,000 பெறுமானமுள்ள ராடோ வாட்ச், 2,000 என ஆசை காட்டி, விற்பனை செய்யும்போது உள்ளே வெறும் கல்லை வைத்து ஏமாற்றும் (PALTI MAARNA), சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டான்.

தாவூத்தைப் பொறுத்தவரை எப்படியாவது பணம் ஈட்ட வேண்டும். அது நல்ல வழியா கெட்ட வழியா என்றெல்லாம் இல்லை, வறுமையில் இருக்கும் தம்பி தங்கைகளுக்கு நல்ல உடைகள் வாங்க வேண்டும். சமூகத்தில் தன் குடும்பமும் மதிக்கப்பட வேண்டும் என்ற ஏக்கம் அவனுக்கு இருந்தது. இப்படியான சிறு சிறு மோசடிகள் மூலம் அவன் பணம் தரும்போதெல்லாம் அவன் தாய் அமினா அதை மறுத்திருக்கிறார். அப்பாவிற்குத் தெரிந்தால் வருத்தப்படுவார், திருந்து எனக் கண்டித்திருக்கிறார். ஆனால், அதைப் பற்றிக் கவலையே இன்றித் தன் தங்கைகளின் கைகளில் பணத்தைத் திணித்துவிட்டு நகர்ந்துவிடுவானாம் தாவூத்.

கஸ்கருக்கு அரசல் புரசலாக இந்தச் சம்பவங்கள் தெரியவந்தாலும், அவர் நம்பவில்லை. ஆனால் ஒருமுறை கஸ்கரின் நண்பரிடமிருந்தே தாவூத் பணத்தைப் பிடுங்கிக்கொண்டு ஓடி விட இது தெரியவந்த கஸ்கர் பெல்ட்டால் விளாசிவிட்டார். அதன் பிறகு தாவூத் பல நாட்களுக்கு எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை. தன் மகன் திருந்திவிட்டான், தன்னைப் போலவே நேர்மையாக உழைத்து வாழ்வான் என நம்பிய தந்தைதான், இப்போது க்ரைம் பிராஞ்ச் காவல் துறையுடன் சேர்ந்து ஒவ்வொரு குடியிருப்பாக மகன்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

கஸ்கரின் முகம் களைப்பை விட அவமானத்தால் சிவந்திருந்தது. தன் அத்தனை நாள் நேர்மையும் உடைந்துபோன மன வலி அவர் கண்களில் வெறி ஏற்றியிருந்தது. தாவூத் மட்டுமல்லாது சபீரும் சேர்ந்து இக்குற்றத்தை நிகழ்த்தியிருக்கிறான் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ரூபாய் 4,75,000 வங்கித் திருட்டு, மிகப் பெரிய குற்றம். அவர்கள் பெறப்போகும் தண்டனைக்கு ஒரு தந்தையாகக் கண்ணீர் வடித்தார். ஒரு நண்பர் வீட்டில் அவர்கள் ஒளிந்திருப்பது தெரிந்து அங்கு போய் அவர்களைப் பிடித்து வந்தார். வீட்டிற்கு வந்ததும் தன் போலீஸ் பெல்ட்டால் அடி விளாறினார். தாவூத் அசரவில்லை, தவறிழைத்துவிட்டோம் எனத் தெரியும். ஆகவே, அமைதியாக நின்றான். அன்று இரவு முழுவதும் அவர்களுக்கு விழுந்த அடியில் டோங்கிரி பகுதி நடுங்கியது. இரவு உணவுகூடத் தராமல் அடி தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் கஸ்கரின் நண்பர்கள் சேர்த்து அவரைத் தடுத்துப் பிடிக்க, அன்று உயிர் தப்பினர் தாவூத்தும் சபீரும். அடுத்த நாள் சூரியன் உதித்ததும் முதல் வேலையாகப் பணத்தை எடுத்துகொண்டு, கூடவே மகன்கள் இருவரையும் அழைத்துப் போய் காவல் துறை அதிகாரிகளின் காலடியில் கிடத்தினார் கஸ்கர்.

“எனது மகன்கள் செய்தது தவறுதான், ஆனால் சிறுவர்கள் என்பதை கருத்தில் கொண்டு மன்னித்துவிடுங்கள்” எனத் தனக்குத் தெரிந்த அதிகாரிகள் ஒவ்வொருவர் காலிலும் விழுந்து மன்றாடினார். கஸ்கரின் இத்தனை நாள் நேர்மையும், சிறுவர்கள் ரத்த விளார் உடம்பையும் பார்த்த அதிகாரிகள் மனம் இரங்கி அவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு அளித்தனர். இனி எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபட மாட்டோம் என எழுத்துபூர்வமாக இருவரும் உறுதி அளித்ததை அடுத்து அவர்களைக் கைது செய்யாமல் மன்னித்தது காவல் துறை.

இனியாவது தன் மகன்களுக்கு நல்ல காலம் ஆரம்பிக்கட்டும் என வேண்டிய தந்தை கஸ்கருக்கு தாவூத்தின் எதிர்காலம் அன்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 15 நிமிடங்களில் தாவூத் நிகழ்த்திய இந்தத் துணிகரக் கொள்ளை, மாஃபியா உலகின் பெரும் தாதாக்கள் முதல் கடைநிலை போர்ஜரிகள் வரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது. காலம் தாவூத்தின் விதியைக் கையில் வைத்துக் காத்திருந்தது.

(நாளைக் காலை தொடரும்…)

நள்ளிரவில் பிறந்த சாம்ராஜ்ஜியக் கனவு!

வெற்றி பெற்ற திட்டமும் தவறிய இலக்கும்!

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon