மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 11 ஜுன் 2018

காலா வசூலித்த 100 கோடியைத் தேடி...

காலா வசூலித்த 100 கோடியைத் தேடி...

இராமானுஜம்

மினி தொடர்: காலாவின் வியாபாரப் பயணம் - 12

ரஜினிகாந்த் நடித்து வெளியான காலா திரைப்படம் ஜூன் 7 அன்று இந்தியாவில் ரிலீஸ் ஆனது. அதற்கு முன்னதாக வெளிநாடுகளில் காலா படத்துக்கான ப்ரீமியர் காட்சிகள் நடைபெற்றன. நம் ஊர்களில் அதிகாலை சிறப்புக் காட்சி, ரசிகர் மன்ற சிறப்புக் காட்சி போன்றதுதான் ப்ரீமியர் காட்சி. இவற்றின் மூலம் அதிகபட்ச வசூலை விநியோகஸ்தர்கள் பெற முயற்சிப்பது வழக்கம். கபாலி போன்று காலாவுக்கு கல்லா கட்டிவிடும் என்றுதான் இலங்கைத் தமிழரால் நடத்தப்படும் ஐங்கரன் பிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டது.

காலா படத்தை வெளிநாடு வாழ் இந்தியத் தமிழர்களைக் காட்டிலும் கடுமையாக எதிர்த்ததும், புறக்கணித்ததும் இலங்கைத் தமிழர்கள். இவர்கள் வருகையைப் பொறுத்தே தமிழ்த் திரைப்படங்களின் வசூல் இருக்கும். சுமார் ரூ.30 கோடி வரை மலேசியா, சிங்கப்பூர், நார்வே, கனடா, ஆஸ்திரேலியா, லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களால் ரஜினி நடித்த படங்களுக்கு வசூல் ஆகும். அது காலா பட விஷயத்தில் நடக்காமல் போனது.

ஆந்திரா, கேரளா மற்றும் வடஇந்தியப் பகுதிகளிலும் காலா கண்டுகொள்ளப்படவில்லை. கர்நாடகாவில் இனி என்ன முயற்சி செய்தாலும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும். எஞ்சி இருப்பது தமிழகத்தின் வசூல் மட்டுமே. தமிழகத்தில் 440 திரைகளில் ரிலீஸ் ஆன காலா முதல் நாள் காலையில் தொடங்கிய சிறப்புக் காட்சிக்குரிய முழுமையான டிக்கெட்டுகளை விற்க முடியாமல் ரசிகர் மன்ற மற்றும் தியேட்டர் நிர்வாகிகள் நஷ்டப்பட்டது தனிக்கதை.

சென்னை தவிர்த்து பிற ஊர்களில் உள்ள திரையரங்குகளில் அரங்கம் நிறையவில்லை என்பது கவலைக்குரிய செய்திதான். படம் வெளியான இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை காலா படம் திரையிடப்பட்டுள்ள 70% திரைகளில் இரண்டு இலக்க (60-90) டிக்கெட்டுகளே விற்பனை ஆயின.

பல காம்ப்ளக்ஸ் தியேட்டர்களில் ஜுராசிக் வேர்ல்டு படம் பார்க்கச் சென்ற குடும்பங்கள் அப்படத்துக்கான டிக்கெட் கிடைக்காததால் வேறு வழி இன்றி காலா படம் பார்த்த கதை ஏராளம். சனிக்கிழமை காலைக் காட்சி முதல் இரவுக் காட்சி வரை காலா படத்துக்கான வசூல் மோசமாக இல்லை. இரட்டை இலக்கத்திலிருந்து மூன்று இலக்க விற்பனைக்கு காலா முன்னேற்றம் அடைந்தார்.

தமிழகத்தில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரையிட்டுள்ள திரையரங்கு உரிமையாளர்களும், கொடுத்த அசலாவது வசூல் ஆகுமா என கலங்கி நின்றுகொண்டிருக்கும்போது, காமெடி கலாட்டா செய்கின்றன ஊடகங்கள் என்கிறார் தியேட்டர் உரிமையாளர் ஒருவர். படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.100 கோடி வசூலைக் கடந்தது காலா என்று செய்தி வாசித்தது புதிய தலைமுறை தொலைக்காட்சி.

பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடேவும் காலா உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலைக் கடந்துவிட்டது என எழுதியது. டிரேட் அனாலிசிஸ் செய்வதாகச் சொல்லப்படும் ஒருவர் ட்விட் செய்ததை மேற்கோள் காட்டி இந்தியா டுடே செய்தி வெளியிட்டது திரையரங்குகளைக் கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலைக்காட்சிக்கே காலா படம் திரையிட்ட கொட்டகைகள் காற்று வாங்கிக்கொண்டிருக்க, பொறுப்பும் கடமையும் மிக்க தொலைக்காட்சிகள் காலா ரூ.100 கோடியைக் கடந்தது என இடைவிடாது வாசித்துக்கொண்டிருந்தன. தொலைபேசியில் நம்மைத் தொடர்புகொண்டு, சம்பந்தப்பட்ட ஊடகங்களின் தொடர்பு முகவரியையும், தொலைபேசி எண்களையும் கேட்டுப் பெற்றனர். எதற்கு என்ற கேள்விக்கு கோபத்துடன் சட்டென பதில் வந்தது. “தியேட்டர் நிலைமை என்னவென்று ஒரு நடை வந்து பார்த்துவிட்டு உண்மையைச் சொல்ல வேண்டும் அல்லவா?” அதைப் பண்ணாம, ரூ.100 கோடி வசூல் ஆகிடுச்சுன்னு இப்படிப் பொய்யா சொல்ற பய புள்ளைகளை நாலு கேள்வி கேட்கணும். அந்த நூறு கோடி எங்க வசூல் ஆச்சுன்னு பகிரங்கமாக அறிவிக்கணும்னு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப சட்டத்தில் இடம் இருக்கா தம்பி” என நமக்கு பயத்தை மூட்டிவிட்டு தொலைபேசியைத் துண்டித்தார்

தொலைக்காட்சிகளும், அச்சு ஊடகங்களும் மூன்று நாட்களில் ரூ.100 கோடியைக் காலா வசூலித்தது எனக் கூறியதன் உண்மையை அறிந்துகொள்ளும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறோம்.

ஆதாரபூர்வமான முழு விவரங்களுடன் மாலை 7 மணிப் பதிப்பில்...

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்!

காலா தர்மன் அல்ல!

ரஜினி தடுமாறினாலும் சினிமா நிலைக்க வேண்டும்!

காலாவுக்காக 11 லட்சம் பேர் வருவார்களா?

காலா அத்துமீறல்களும் விஷாலின் மௌனமும்!

காலா வேட்டை: ஆளும்கட்சி உதவியுடன் ஈ பறக்கிறது!

காலாவுக்காக விஷால் மௌன விரதமா?

வாய்ப்பை வீணடித்த ரஜினி

பரபரப்பு இல்லாத ஓப்பனிங்

குடை சாய்ந்த கோபுரம்!

ஆட்டம் காணும் சூப்பர் ஸ்டார் அரியணை

திங்கள், 11 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon