மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 5 ஜுன் 2018

காலா வேட்டை: ஆளும்கட்சி உதவியுடன் ஈ பறக்கிறது!

காலா வேட்டை: ஆளும்கட்சி உதவியுடன் ஈ பறக்கிறது!

இராமானுஜம்

மினி தொடர்: காலாவின் வியாபாரப் பயணம் - 6

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது (2013ஆம் ஆண்டு) கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகளால் எதிர்ப்பு கிளம்பியது. படத்தைத் திரையிட்டுக் காட்டி பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிவுக்கு வந்த பின்னர், படத்தைத் திரையிடத் தடையில்லை என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த அதே நாள் நள்ளிரவில் அந்த உத்தரவுக்குத் தடை உத்தரவு பெற அதிமுக அரசு நீதிமன்றப் படிக்கட்டுகளை ஏறியது.

திட்டமிட்ட நாளில் உலகம் முழுவதும் விஸ்வரூபம் தமிழகம் தவிர்த்து ரிலீஸாகி வெற்றி பெற்றது. தமிழகத்தின் எல்லையோரம் இருந்த கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தமிழ் ரசிகர்கள் விஸ்வரூபம் படத்தைப் பார்த்தனர். தமிழகத்தில் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு கொடுக்க போதிய காவல் துறையினர் இல்லாததால் விஸ்வரூபம் படத்தைத் திரையிட அனுமதிக்க இயலவில்லை என தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதே அதிமுக தலைமையிலான தமிழக அரசின் காவல் துறை திரையரங்குகளில் காலா படம் திரையிடுகின்றீர்களா, முழுமையான பாதுகாப்பு தரப்படும், மேலிட உத்தரவு என்கிறார்கள்.

விஸ்வரூபம் பட பஞ்சாயத்துகள், பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஒரு மாலை வேளையில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் ஓர் விழா. காங்கிரஸ் பிரமுகர் ப.சிதம்பரம் சிறப்பு விருந்தினர். அந்த விழாவில் கலந்துகொண்ட கமல்ஹாசன், “வேட்டி கட்டிய தமிழன் இந்திய பிரதமர் ஆக வேண்டும்” எனப் பேசியிருந்தார். அப்போது இந்தியப் பிரதமர் வேட்பாளராக பல அரசியல் மேடைகளில் ஜெயலலிதா பெயர் முன்மொழியப்பட்டுவந்ததை இங்கு குறிப்பிட வேண்டும்.

வேட்டி கட்டிய தமிழன் இந்தியப் பிரதமர் என கமல் பேசியது ஜெயலிதாவுக்கு எரிச்சலூட்டியது. அதற்கான எதிர்வினைதான் விஸ்வரூபம் ரிலீஸை அதிமுக அரசு தடுக்கக் காரணம் என்று அப்போது அரசியல் களமும் சினிமா தளமும் பரபரப்பாகப் பேசின. அதுபோலவே தனது அரசியல் அத்தியாயத்தின் டீசர்களில், சிஸ்டம் சரியில்லை எனக் கூறினார் ரஜினிகாந்த். அவருக்கு என்ன தெரியும் என்றார்கள் தமிழக அமைச்சர்கள். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருவதாகச் சொன்ன கமல், ரஜினியை தினந்தோறும் எங்காவது ஒரு பொதுக்கூட்டத்தில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விமர்சிக்கத் தவறியதில்லை இந்தத் தமிழக அமைச்சர்கள். இந்த சூழல் ‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குத் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்’ என ரஜினிகாந்த் பேசியவரை தொடர்ந்தது.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களை தூத்துக்குடி சென்று சந்தித்துவந்தனர். காலா படம் ரிலீஸ் நேரத்தில் தான் மட்டும் போகாமல் இருந்தால் விமர்சனத்துக்கு உள்ளாக நேரிடும் என்று கருதிய ரஜினி, சோகத்தில் இருக்கும் மக்களை மகிழ்விக்க நடிகனாக தூத்துக்குடி செல்கிறேன் என்று புறப்படும் முன் சென்னையில் பத்திரிகையாளர்களிடம் கூறினார். நடிகனாக தூத்துக்குடியில் தரையிறங்கியவர் பத்திரிகையாளர்களிடம் அரசியல்வாதியாகப் பேசினார்.

‘துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம் சமூக விரோதிகள்; அவர்கள் யார் என்று எனக்கு தெரியும்’ என்றவர், ‘இது போன்று எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்’ என்று ஆவேசப்பட்டார். அதிமுக அரசின் செயல்பாடுகளுக்கு ஆதரவான நிலையாக அரசியல் விமர்சகர்கள் மட்டத்தில் ரஜினியின் பேச்சு பார்க்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் எந்த அரசியல் கட்சிகளின் ஆதரவும் இன்றி தனித்து விடப்பட்ட அதிமுக அரசுக்கு ரஜினிகாந்தின் பேட்டி மிகப் பெரும் பலமாக, உதவியாக, மருந்தாக மாறியது. அதன் பின் ரஜினிக்கு ஆதரவாக தங்களது பேச்சை மாற்றினார்கள் தமிழக அமைச்சர்கள். அவர் அரசியலுக்கு வரும்போது வரட்டும், அது வரை தமிழக அரசு ரஜினியைப் பயன்படுத்திக்கொள்வதன் வெளிப்பாடுதான் காலா படம் திரையிடும் தியேட்டர்களுக்கு, காவல் துறை பாதுகாப்பைத் தாமாக முன்வந்து வழங்குவது என்கிறது அரசியல் வட்டாரம்.

ரஜினிக்கு அரசியல் ஆதரவு கிடைத்ததுமே மக்கள் ஆதரவு போய்விட்டது என்ற வாதத்தையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ரஜினி பட ரிலீஸ் என்றால் பொங்கல், தீபாவளி போல இன்னொரு பண்டிகையாகப் பார்த்துவந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றனர் மக்கள். காலா படத்தின் தயாரிப்பு தரப்பு ’இரண்டு நாட்களுக்கு ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டது’ என பெருமையான பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறது. ஆனால் திரையரங்கு உரிமையாளர்களைப் பொறுத்தவரையில் இது பெரும் பின்னடைவு. ரஜினி ரசிகர்களால் முதல் 5 நாட்களுக்கு விற்றுப்போகும் டிக்கெட்டுகளையும், அதன் பின் வாய்வழியாகப் பரவும் கருத்து மூலம் தியேட்டருக்கு வரும் பொதுமக்களையும் குறிவைத்தே இரண்டு வாரங்கள் முழு வீச்சில் படத்தைத் திரையிடத் திட்டமிடுவார்கள் தியேட்டர்காரர்கள். ஆனால், முதல் வார விடுமுறைக்கு டிக்கெட் விற்பதே பெரும்பாடாகிவிட்ட நிலையில், அதிக விலைக்கு டிக்கெட் விற்கமுடியாமல் திணறுகின்றனர். வழக்கமாக முதல் மூன்று நாட்களுக்கு 2000 ரூபாய்க்குக் குறையாதவை ரஜினி பட டிக்கெட்டுகள். ஆனால் 500 ரூபாய்க்கும் 800 ரூபாய்க்கும் விற்பதற்கே மிகவும் கடினமான சூழல் ஏற்பட்டுள்ளதாக வருத்தப்படுகிறார்கள்.

தமிழக அரசின் ஆசியோடு, காவல் துறை பாதுகாப்புடன் காலா டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பதில் தியேட்டர்களுக்கு இனி சிரமம் இருக்காது என்று நினைத்த நிலையில், ரஜினி ரசிகர்களாலேயே 2000 ரூபாய்க்கும் 1000 ரூபாய்க்கும் வாங்கப்படாத டிக்கெட்டுகளை பொதுமக்கள் எப்படி வாங்குவார்கள் என யோசிக்கவைத்திருக்கிறது. இப்படியே சென்றால், போட்ட முதலே வரமுடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதைத்தான் சிஸ்டம் சரியில்லை என்றாரோ ரஜினிகாந்த்?

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்!

காலா தர்மன் அல்ல!

ரஜினி தடுமாறினாலும் சினிமா நிலைக்க வேண்டும்!

காலாவுக்காக 11 லட்சம் பேர் வருவார்களா?

காலா அத்துமீறல்களும் விஷாலின் மௌனமும்!

செவ்வாய், 5 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon