மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 5 ஜுன் 2018

காலா அத்துமீறல்களும் விஷாலின் மௌனமும்!

காலா அத்துமீறல்களும் விஷாலின் மௌனமும்!

இராமானுஜம்

மினி தொடர்: காலாவின் வியாபாரப் பயணம் - 5

பாபா படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிகாந்த் தமிழ் சினிமா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அதற்கு பிறகு அவர் நடித்த படங்களின் புரமோஷனுக்காகத் தமிழகத்தில் சினிமா பத்திரிகையாளர்களை இன்றுவரை சந்தித்ததில்லை. அவர் நடித்த படங்களின் தெலுங்கு பதிப்புக்காகத் தெலுங்கு பத்திரிகையாளர் சந்திப்புக்களில் அவர் தொடர்ந்து பங்கேற்றுவருகிறார். நேற்றைய தினம் காலா படத்தின் புரமோஷனுக்காக ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறார்.

தமிழகத்தில் காலா படத்தைத் திரையிட அனைத்து ஏரியாக்களிலும் தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டன. துப்பாக்கிச் சூடு நடைபெற்ற தூத்துக்குடிக்கு ரஜினிகாந்த் சென்று வந்த பின், காவல் துறைக்கு ஆதரவாக அவர் பேசிய பேச்சுகள் எதிர்மறையான விமர்சனங்கள் ஏற்படக் காரணமாக அமைந்தன. இதனால் தூத்துக்குடி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் காலா திரையிடுவதில் சிக்கல் எனக் கூறப்பட்டுவந்த நிலையில் அப்பகுதியில் தூத்துக்குடி உட்பட14 தியேட்டர்களில் காலா படம் திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிக வசூலைக் கொடுக்கக்கூடிய மதுரை, ராமநாதபுரம் விநியோகப் பகுதியில் காலா படத்திற்கு தியேட்டர்கள் ஒப்பந்தமாவதில் தேக்க நிலை நீடிக்கிறது, இதற்குக் காரணம், பாகுபலி 2 படத்திற்கு ஆன வசூல் கணக்கை அடிப்படையாகக் கொண்டு மினிமம் கேரண்டி அடிப்படையில் அட்வான்ஸ் கேட்பதால் காலா படத்தைத் திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இது பற்றி தியேட்டர் உரிமையாளர்களிடம் பேசியபோது தமிழகத்தில் பாவப்பட்டவர்கள் மதுரை விநியோகப் பகுதியில் இருக்கும் தியேட்டர் உரிமையாளர்கள்தான். குறிப்பிட்ட சில நபர்களிடம் மதுரை பட விநியோகம் சிக்கிக்கொண்டு தியேட்டர் தொழிலை அழித்துக்கொண்டிருக்கிறது என்றார்கள்.

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வழி விடவில்லை என்ற பழமொழி மதுரை சினிமாவுக்கு பொருந்தும் என்கின்றனர். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பெரும்பான்மையானவர்கள் இங்கு இருப்பவர்களிடம் பைனான்ஸ் வாங்கிப் படம் தயாரிக்கின்றனர். அதனால் அவர்களை மீறிப் புதியவர்களுக்குப் படத்தை வியாபாரம் செய்ய முடியாமல் கடன் வாங்கியவரிடமே படத்தைக் கொடுத்துவிடுகின்றனர்.

விநியோக முறையில் படத்தை வாங்கிவிட்டு எங்களிடம் எம்.ஜி. கேட்கின்றனர். காலா படம் தமிழ்நாடு முழுவதும் அட்வான்ஸ் அடிப்படையில் தியேட்டர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் சிறிய ஊர்களுக்குகூடக் குறைந்தபட்சம் 10 லட்ச ரூபாய் எம்.ஜி. கேட்பதால் காலா படத்திற்குத் தியேட்டர்கள் போடுவதில் தேக்க நிலை நீடிக்கிறது என்கின்றனர். அதே நாளில் வரும் ஜீராசிக் வேர்ல்டு படத்திற்குத் தேவைக்கு அதிகமாகவே தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது எனக் கூறுகின்றனர்.

திரையரங்க உரிமையாளர்கள் ஒன்றுபட்டு இருக்கும் திண்டுக்கல்லில் அட்வான்ஸில் காலா திரையிட ஒப்பந்தம். அதற்குப் பக்கத்தில் இருக்கும் பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ஊர்களுக்கு வசூல் ஆக முடியாத அளவு எம்.ஜி. தொகை கேட்கப்படுகிறது. ஏப்ரல் மாதத்திற்குப் பின் எம்.ஜி. முறை இருக்காது எனக் கூட்டத்தில் கூறிய அன்புச் செழியன்தான் காலா படத்தின் மதுரை விநியோகஸ்தர்.

8 கோடி வரை எம்.ஜி. வாங்கித் தருவதாக லைகாவுக்கு இவர் வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம். இவர் அதிக அளவு கமிஷன் வாங்குவதற்கு வியாபார தர்மங்களை மீறி எம்.ஜி. தொகை கேட்பது அராஜகமானது. அன்புச் செழியன் முன்னேற்றத்துக்கு உதவியது திரையரங்குகள் என்பதை அன்புச் செழியன் மறந்துவிட்டார்போல என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்.

செங்கல்பட்டு, கோவை ஏரியாக்களுக்குப் புதிய படங்கள் வாங்கி ரிலீஸ் செய்யும்போது அட்வான்ஸ் முறையில் படம் கொடுக்கும் இவர், மதுரையில் மாற்றி யோசிப்பதற்குக் காரணம் தியேட்டர்காரர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்பதுடன், இவரது படங்களைத் திரையிட அட்வான்ஸ் கொடுக்க வேண்டியது இல்லை. அந்தத் தொகைக்கு வட்டி கொடுத்தால் போதும் என்பதால் பெரும்பான்மையான திரையரங்க உரிமையாளர்கள் அன்புச் செழியன் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்கின்றனர்.

அதிகபட்ச விலை என்பது தெரிந்தே, ரஜினி படம் திரையிட வேண்டும் என்பதற்காக 365 நாட்களும் ஓடினாலும் வசூலாகாத தொகையை எம்.ஜி. பணமாகக் கொடுத்து காலா திரையிட ஒப்பந்தம் செய்துள்ளனர். சிஸ்டத்தைச் சரிசெய்ய வேண்டும் என்று சொன்ன ரஜினியின் காலா படத்திற்கு மதுரை நகரத்தில் குறைந்தபட்சம் 300 முதல் 500 ரூபாய் வரை காவல் துறை பாதுகாப்புடன் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழ் சினிமாவில் 48 நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெறக் காரணமாக இருந்தவர் நடிகர் விஷால். அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தவர் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால். அது போன்று பெரிய படங்களுக்கு 350 ரூபாய்க்கு மேல் தியேட்டர்கள் ஒதுக்கக் கூடாது என்றும் அறிவித்தது தயாரிப்பாளர்கள் சங்கம். இந்த இரண்டு விஷயங்களும் காலா படத்தில் அப்பட்டமாக மீறப்படுகின்றன.

வேலூர் என்கிற சிறிய நகரத்தில் மட்டும் 16 திரைகளில் காலா திரையிட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதுபற்றித் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் எந்தக் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. லைகா நிறுவனத்துடன் விஷாலுக்கு இருக்கும் வியாபாரத் தொடர்பு நியாயம் பேசத் தடுக்கிறது என்பது உண்மையா?

நாளை காலை 7 மணிக்கு விஷாலுக்கு பகிரங்கக் கடிதம்.

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்!

காலா தர்மன் அல்ல!

ரஜினி தடுமாறினாலும் சினிமா நிலைக்க வேண்டும்!

காலாவுக்காக 11 லட்சம் பேர் வருவார்களா?

செவ்வாய், 5 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon