மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 2 ஜுன் 2018

காலா தர்மன் அல்ல!

காலா தர்மன் அல்ல!

மினி தொடர்: காலாவுடன் ஒரு வியாபாரப் பயணம் -2

இராமானுஜம்

தமிழகத்தில் அனைத்து ஊடகங்களிலும் விவாதத்திற்குரியதாக ரஜினிகாந்த் தூத்துக்குடி பயணமும் அதனையொட்டி அவர் பேசியதும் மாறிவிட்டது. ரஜினி நடித்த படங்கள் ரிலீஸாவதற்கு முன்பு எதைப் பற்றியாவது எதிர்மறையாக, பரபரப்பாக பேசி அனைவரது கவனத்தையும் தன் திரைப்படத்தின் பின்னால் திருப்பி விடுவது ரஜினிக்குக் கைவந்த கலை.

காலா முதல் முறை ரிலீஸ் தேதி அறிவித்த போது திரைப்படத் துறை வேலைநிறுத்தம் நடைபெற்றுவந்தது. காலா திட்டமிட்டபடி ஏப்ரல் 14 அன்று வெளிவந்து வேலைநிறுத்தத்தை முறியடித்துவிடுவார்கள் எனக் கூறப்பட்டது. வியாபாரம் முடியாத நிலையில் சங்க முடிவுக்குக் கட்டுப்படுவதாகக் கூறித் தேதி மாற்றம் செய்யப்பட்டது. ரஜினி நடித்த படங்கள் வியாபாரத்தில் எப்போதும் தடுமாற்றத்தைச் சந்தித்தது இல்லை. காலா படத்தின் பட்ஜெட்டுக்கு இணையாக ஸ்பான்சர் மூலம் பணம் வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

படத்தின் அசல் கிடைத்துவிட்டது. இனி தயாரிப்பு தரப்புக்கு கிடைக்க வேண்டியது ரஜினி சம்பளம், லாபம் மட்டும் என்பதால் தமிழ்நாடு வியாபாரத்தில் தயாரிப்பு தரப்பு வேகம் காட்டவில்லை. தமிழ் சினிமாவில் சில வருடங்களாகப் புதிய படங்களின் தமிழ் நாட்டு உரிமையை வாங்கி சிலர் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். சிலர் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் முடக்கப்பட்டு தொடர்ந்து படங்கள் வாங்க முடியாத நிலையில் சினிமாவை விட்டே போயிருப்பார்கள்.

தமிழகத்தில் மிகப் பெரிய விநியோக பகுதிகளாக, வருவாய் முக்கியத்துவம் மிக்க செங்கல்பட்டு, கோவை, மதுரை ஆகிய மூன்று ஏரியாக்களில் பெரிய படங்களை குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே ரிலீஸ் செய்திருப்பார்கள். தாங்களாக எந்தப் படத்தையும் கேட்டுப் போக மாட்டார்கள். தயாரிப்பாளரே இவர்களிடம் கொடுத்துவிடக்கூடிய சூழலை உருவாக்கிவிடுவார்கள். காலா படத்தின் செங்கல்பட்டு விநியோக உரிமையைப் புதியவர்கள், பழையவர்கள் என நிறைய பேர் கேட்டனர். இல்லை என்று சொல்வதில்லை. அதிகப்படியான விலையைக் கூறித் திரும்பிப் பார்க்காமல் போகவைத்தார்கள். நீண்ட வருட தொழில் முறை விநியோகஸ்தர் லத்திப் ரவி அவுட் ரேட் முறையில் காலா படத்தின் உரிமையை 12 கோடிக்குக் கேட்டுள்ளார். 18 கோடிக்குக் குறைவாகப் படம் இல்லை என லைகா நிறுவனம் கூறிவிட்டது ஆனால், அதே 12 கோடிக்கு செங்கல்பட்டு விநியோக உரிமையை சென்னை-காஞ்சிபுரம் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் அருள்பதிக்குத் தயாரிப்பு தரப்பிலிருந்து கொடுத்துள்ளனர்.

இதனை அறிந்த லத்திப் ரவி நேரடியாகச் சென்று, “வியாபார தர்மம் இன்றி நடந்துகொள்கிறீர்கள். நான் கேட்ட விலையை விட அதிகமாக அவுட்ரேட் முறையில் விற்பனை செய்யாமல், அதே தொகைக்கு விநியோக உரிமை கொடுத்தது எந்த வகையில் நியாயம்?” எனக் கேட்க , தங்களின் இயலாமையைக் கூறி தென்னாற்காடு உரிமையை அவருக்கு வழங்கியுள்ளது லைகா. பன்னாட்டு நிறுவனம் என்றாலும் தங்கள் படத் தொழிலுக்கு இங்கு கடன் வாங்கியுள்ளார்கள். அந்த ஃபைனான்சியர் சொல்கிறவர்களுக்கு காலா படத்தைத் தர வேண்டிய நிர்பந்தம் லைகாவுக்கு இருந்தது.

இந்த சூட்சமம் புரியாத தனுஷ் தரப்பு, காலாவின் தமிழ்நாட்டு வியாபாரத்தில் ஏமாந்துவிட்டதாகக் கூறுகின்றனர். எப்படி?

திங்கட்கிழமை மாலை 7 மணி அப்டேட்டில்.

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்!

சனி, 2 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon