மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 23 பிப் 2020

இளையராஜா 75: அவர் ஒருவர்தான்!

இளையராஜா 75: அவர் ஒருவர்தான்!

செழியன்

இன்று (ஜூன் 2) இளையராஜாவின் பிறந்த தினம்

நேற்று முற்பகலில் இளையராஜாவின் பாடலை நானும் சிபியும் கேட்டுக்கொண்டிருந்தோம். மூன்றாம் பிறை படத்தின் துவக்கப் பாடல். இசை மாணவனான சிபி என்னைப் பார்த்துப் புன்னகைத்து, “அவருக்கு மட்டும் எப்படிப்பா இப்படியெல்லாம் தோணுது? எனக்கு அவரு கம்போஸிங் கத்துக் குடுப்பாரா?” என்று கேட்டான். “கம்போஸிங் கத்துக் குடுக்க முடியாது. நீயே அவரு பாட்டுல இருந்து கத்துக்க வேண்டியதுதான்” என்று சொல்லிவிட்டு இளைய நிலா பாடலின் பல்லவிக்குப் பிறகு வரும் கிட்டார் இசையை ஒலிக்கவிட்டு “இதை வாசிச்சுப் பாரு” என்றேன். கிட்டாரில் விரல்கள் அங்கும் இங்கும் தாவி அரைமணி நேரப் பயிற்சிக்குப் பிறகு அந்த இசையை வாசித்துவிட்டுப் புருவத்தை உயர்த்தித் தலையை அசைத்தான்.

கல்லூரி நாட்களில் சிவகங்கை பூச்சொரிதல் விழாவுக்கு ஆர்கெஸ்ட்ரா நடக்கும். அதில் ஒருமுறை ப்ரியா படத்தின் டார்லிங் டார்லிங் பாடலின் துவக்க இசையை இசைக் கலைஞர்கள் வாசித்துவிட்டுப் புருவத்தை உயர்த்தித் தலையை அசைப்பதைப் பார்த்திருக்கிறேன்.

ஒரு பாடல் அடிப்படையாக ஒரு ட்யூன் வழியாகத்தான் இயங்குகிறது. இதை நம் வசதிக்காக ராகம் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், அந்த ஒரு ட்யூனின் ஆதாரத்திலிருந்து வேறு வேறு வகையான இசையை வேறு வேறான இசைக் கருவிகளைக் கொண்டு பாடலுக்குள் இளையராஜா நிகழ்த்துகிற அற்புதம்தான் ஆச்சரியமானது. Change over என்று சொல்லப்படும் குறிப்பிட்ட கதிக்குள் மாறிக்கொண்டே இருக்கும் இந்த இசைத் துணுக்குகளை மட்டும் நாம் கவனித்துப் பார்த்தால் அதுவே அலாதியான அனுபவமாக இருக்கும்.

இசையின் பகுதியாகவே இருக்கும் ராஜா

குழந்தைகளிடம் க்ரீம் பிஸ்கட்டுகளைக் கொடுத்தால் அவர்கள் பிஸ்கட்டைப் பிரித்து எடுத்து முதலில் க்ரீமைத்தான் தின்பார்கள். அதுபோல அவரது எந்தப் பாடலைக் கேட்டாலும் எனக்குப் பாடலின் இடையில் இருக்கும் இசைதான் (Interlude, prelude) முதல் ஆர்வம் (Interlude என்பது பாடலின் முதல் சரணத்துக்கும் இரண்டாவது சரணத்துக்கும் இடையில் வருகிற இணைப்பு இசை. Prelude என்பது பாடலின் துவக்க இசை). மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன் என்று கீதையில் கண்ணன் சொல்வது போல இளையராஜா பாடலின் இசைப் பகுதியாகவே இருக்கிறார். அவரது இசையை ரசிகராகவோ அல்லது மாணவனாகவோ அணுகுகிற யாருக்கும் அந்த பிரமிப்பு தவிர்க்க முடியாதது. காரணம், அந்த இசைச் சேர்க்கையில் வரும் அற்புதமான இசை மாற்றங்கள்.

இளையராஜாவுக்கு முந்தைய திரைப்பட இசையமைப்பாளர்கள் ஒரு பாடலின் ராகத்தில் அது தரும் பாவங்களில் அற்புதமான பங்களிப்புகளைத் தந்திருக்கிறார்கள். அந்தப் பாடல்களில் பெரும்பாலானவை நம் இந்திய இசை மரபு வழி வருபவை. இந்திய இசை மரபு என்பது குரலை முதன்மைப்படுத்தி இயங்குகிறது. ஒரு பாடகர் பாடுவார். அவர் பாடும் ராகத்தின் தன்மைக்கேற்ப பல்லவியிலிருந்து அடுத்த சரணத்துக்கு இணைப்பை ஏற்படுத்தும் இசையாகவே அது இருக்கும்.

இது கச்சேரியில் ஒருவர் பாடும்போது அவரது ஆலாபனைகளையே வயலின் அல்லது வீணையில் திரும்ப இசைக்கும் மரபிலிருந்து வருகிறது. பாடுபவரின் குரலுக்கு இடையில் இணைப்புபோல இந்த இசைதான் இருக்கும். இதையே பக்க வாத்தியம் என்று சொல்கிறோம். இந்தப் பக்க வாத்திய மரபின் தொழில்நுட்பம் சார்ந்த தொடர்ச்சியாகவே திரைப்பாடல்கள் பெரிதும் இருந்தன. இதனால் பெரும்பாலான பழைய பாடல்களின் interlude என்பது இரண்டு பல்லவிகளுக்கும் இடையில் ஒரே இசைதான் திரும்பத் திரும்ப இசைக்கப்படும்.

பழைய தமிழ்த் திரையிசைப் பாடல்களில் அதன் இசைச் சேர்ப்புக்காகப் பெரிதும் புகழப்படுகிற இரண்டு பழைய பாடல்களைக் கேட்டால் (துள்ளுவதோ இளமை - குடியிருந்த கோயில், பட்டத்து ராணி - சிவந்த மண்) Interlude என்பதில் இருக்கும் வித்தியாசத்தை உணர முடியும். Interlude என்பதை விரைவில் கடந்துவிட்டுக் குரலுக்கு மாறுவதைக் கவனிக்க முடியும்.

ஆனால், இளையராஜா மேற்கத்திய இசையின் மீதிருக்கும் ஆளுமையினால் இந்த interlude, மற்றும் prelude என்பவற்றை அழகான கவிதைகளைப் போலத் தன் பாடல்களின் இடையில் கையாளுகிறார். அதிலும் சிறப்பு என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இசைக் கருவிகளின் வழியாகக் கோர்வைகளை மாற்றிக்கொண்டே இருக்கிறார். இந்தச் சேர்க்கைகள் அபூர்வமானவை. இதனைப் புரிந்துகொள்ள ‘தளபதி’ படத்தில் வரும் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ என்னும் பாடலை எடுத்துக்கொள்ளலாம்.

இசைக் கருவிகள் என்னும் கதாபாத்திரம்

திரைக்கதையின் நுட்பங்கள் பற்றிப் படிக்கும்போது அதில் fore shadow என்றொரு பதம் வருகிறது. அதாவது கதையின் பின்னால் வரும் கதாபாத்திரத்தை அல்லது அதன் குணாதிசயத்தைக் கதையின் தொடக்கத்திலேயே கோடிட்டுக் காட்டுவது. திரைக்கதையின் இந்த யுக்தியை வைத்துக்கொண்டு இந்தப் பாடலில் இசையைப் பார்க்கலாம். ஒரு தேர்ந்த இசையமைப்பாளருக்குத் தன் பாடலில் இருக்கும் இசைக் கருவிகள் ஒரு கதாபாத்திரம்போல.

திரை இசை என்பது மேற்கத்திய இசை வடிவம் போல தன்னிச்சையானது அல்ல. நமது இசையோ அல்லது பாடலோ ஒரு காட்சியின் மீதுதான் இசைக்கப்படுகிறது. இவ்வாறு இசைக்கப்படும்போது கதையில் அதுவரை நீங்கள் பார்த்த கதாபாத்திரத்தின் தன்மையை மீறி இசை இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால் அது படத்தின் மனநிலைக்குப் பொருந்தாது. எனவே பாட்டில் இருக்கும் இசை கதாபாத்திரத்தின் தன்மைக்கு மட்டுமல்ல கதையின் தன்மைக்கும் இசைந்ததாக இருக்க வேண்டும். பாடல் என்பது இந்தியத் திரைப்பட மரபில் மட்டுமே இருப்பதால் இதற்கு எந்த மேற்கத்திய மாதிரிகளும் இல்லை. எனவேதான் எந்த முன்மாதிரிகளும் இல்லாமல் இளையராஜா உருவாக்கும் இசைச் சித்திரங்கள் பிரமிக்க வைக்கின்றன. இவை இந்திய இசை மரபில் புதிய வடிவங்கள். புதிய கோர்வைகள்.

பிரமிக்கவைக்கும் அதிசயம்

‘சுந்தரி’ பாடலை ஒருமுறை கேளுங்கள். இந்த ஏழு நிமிடப் பாடல் காட்சி மாதிரிகள் எதுவும் இல்லாமல் கற்பனையில் முழுக்கப் புனையப்பட்டு பிறகுதான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மனதில் வைத்துக் கேளுங்கள். ஒரு ஏழு நிமிடப் பாடல் காட்சிக்கான soundscape ஐ முழுக்கக் கற்பனையில் உருவாக்குவது என்பது சாதாரண வேலை இல்லை. உதாரணத்துக்கு Dunkrik என்ற படத்துக்குக் கரு இசை (theme music) உருவாக்கப்படுகிறது என்றால் அங்கே காட்சிகளுக்கான மாதிரிகள் நிச்சயம் வரையப்பட்டிருக்கும். வரையப்பட்ட படங்கள் ஒரு திரைப்படம்போல இயங்குவதற்கான தொழில்நுட்பத்தில் இந்தக் காட்சி திரையில் எவ்வளவு நேரம் வரும், எங்கே காட்சி மாறும் என்கிற குறிப்புகள் நிச்சயம் இருக்கும். ஆனால், நம் திரைப்படங்களில் ஒரு காதல் பாடல் போர்ப் பின்னணியில் நடக்கிறது என்பதைக் கடந்து குறிப்புகள் எதுவும் இருந்திருக்கும் சாத்தியங்கள் இல்லை.

முன்பு சொன்ன fore shadow என்கிற யுக்தியை மனதில் வைத்துக்கொண்டு இந்தப் பாடலின் பல்லவியில் வரும் புல்லாங்குழல் பாடல் முழுக்கச் செய்கிற வேலையைக் கவனியுங்கள். பாடல் எப்படித் துவங்குகிறது? போரும் காதலும் அகமும் புறமும் எப்படி இணைகிறது? எந்த இசைக் கருவிகள் இணைத்து வைக்கின்றன? அந்த மாற்றம் இயல்பாக எப்படி நிகழ்கிறது? மேற்கத்திய இசையும் இந்திய இசையும் இணைகிற (fusion) இடங்களைக் கவனியுங்கள். இந்தப் பாடலின் முழு இசையையும் காட்சி வழியே மனதில் முதலில் இயற்றி, ஒரு மனிதர் தன் கற்பனையின் வழியே அதை ஸ்வரங்களாகக் காகிதத்தில் எழுதினார் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.

இதுபோல அவரது இசைக்கோர்வைகள் உருவாக்கும் நிலக்காட்சிகள் குறித்து, கற்பனை வெளிகள் குறித்து நம்மிடம் அதிகம் பதிவுகள் இல்லை. அவர் பாடலுக்குள் கண்டுபிடிப்புகள் இருக்கின்றன. பரிசோதனைகள் இருக்கின்றன. அது குறித்த எந்த ஆய்வுகளும் நம்மிடம் இல்லை. முதன்முதல் தஞ்சாவூர் கோயிலைப் பார்க்கும்போது, தாஜ்மகாலைப் பார்க்கும்போது இது மனித உழைப்பா, இது சாத்தியமா என்று பிரமிக்கத் தோன்றும். அப்படி நுணுகிக் கேட்கிற யாரையும் பிரமிக்க வைக்கிறவர் இளையராஜா.

விழித்திருக்கும் பின்னிரவாக அது இருக்க வேண்டும். நெடுஞ்சாலைப் பயணமாக இருக்க வேண்டும். அகாலமான அந்தப் பொழுதின் அமைதியில், இருளின் தனிமையில் அவர் இசை உங்களுடன் இருக்க வேண்டும். அதுதான் தருணம். அப்படிக் கேட்கிற வாய்ப்பு நிகழ்ந்தால் உங்கள் கடந்த காலம் ஒரு மவுனத் திரைப்படம் போல உங்கள் மனதில் ஓடத் துவங்கும்.

மேற்கத்திய இசை மரபில் ஒரு மேற்கோள் இருக்கிறது. ஆயிரம் இளவரசர்கள் பிறந்திருக்கலாம். இனியும் பிறக்கலாம். ஆனால், ஒரே ஒரு பீத்தோவன்தான். அதுபோல நமக்கும் ஒரு ஒரே இளையராஜாதான்.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: செழியன், திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர். கல்லூரி, பரதேசி முதலான பல படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பரதேசி படத்தின் ஒளிப்பதிவுக்காக 2013இல் லண்டன் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினைப் பெற்றார். இவரது இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த டு லெட் என்னும் திரைப்படம் தேசிய விருது பெற்றதுடன் சர்வதேச அளவில் பல விருதுகளையும் பெற்றுவருகிறது.)

சனி, 2 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon