மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 27 மே 2018

கடைசி வரை போராடிய காடுவெட்டி குரு!

கடைசி வரை  போராடிய காடுவெட்டி குரு!

வன்னியர் சங்கத்தின் தமிழக தலைவர் காடுவெட்டி குரு அரசியல் வாழ்கையில் போராடியவர், நுரையீரல் தொற்றால் மருத்துவமனையிலும் போராடி மறைந்துள்ளார்.

காடுவெட்டி குரு வன்னிய சமுதாய இளைஞர்களை ஈர்த்தவர், யார் என்ன என்று யோசிக்காமல் டாக்டர் ராமதாஸ் மீதுள்ள மரியாதையால் மற்றவர்களை எடுத்தெறிந்து பேசக்கூடியவர்.

குரு மீது போலீஸார் தவறான குற்றச்சாட்டுகளை அள்ளிவீசிய நிலையில் பத்திரிகையாளர் ஒருவரின் அனுபவமே குருவின் நேர்மைக்கு சான்று. 19 வருடங்களுக்கு முன், காடுவெட்டி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாகவும், அதற்கு குருவே காரணம் என்றும் போலீஸ் தகவல் பரப்பியிருந்தது. இதையடுத்து காடுவெட்டி ஊருக்குள் சென்று நேருக்கு நேர் சந்தித்து போலீஸ் சுமத்தும் குற்றச்சாட்டுகளை எடுத்துச் சொன்னார் அந்த பத்திரிகையாளர்.

கம்பீரமான சிரிப்போடு எழுந்து அந்த பத்திரிகையாளரின் தோளைத் தட்டிக்கொடுத்த குரு, ஒரு டூ வீலரும் உதவிக்கு ஒரு ஆளையும் அனுப்பி சாராயம் காய்ச்சுவதைப் படம் எடுத்து வாருங்கள் பிறகு நான் பதில் சொல்கிறேன் என்றார். அந்தப் பத்திரிகையாளரும் பயம் அறியாமல் சாராயம் காய்ச்சும் பகுதிக்குச் சென்று ஆற்று ஓரத்தில் நீண்டதூரம் சாராயம் காய்ச்சுவதை படம் எடுத்துவந்தார்.

அதன் பின் குரு அந்த பத்திரிகையாளரிடம், “சாராயம் காய்ச்சுகின்றவர்களை பிடிச்சுட்டுப் போங்கனு நானே பல முறை போலீஸ்கிட்ட சொல்லியிருக்கேன். ஆனா அவங்க மாமூலுக்கு ஆசைப்பட்டு என் மீது அழுக்கைப் பூசினார்கள்’’ என்ற குரு, இதோ வீட்டு எதிரில் உள்ள ஷெட்டில் இருப்பவர்கள் போலீஸ்தான் என்று அவர்களை அழைத்தார்.

ஒவ்வொரு போலீஸையும் என்ன ஊர் என்று கேட்டார், அவர்களும் வரிசையாக நின்றுகொண்டு கடலூர் புதுநகர் காவல் நிலையம், விருத்தாசலம் காவல் நிலையம், சேத்தியாத்தோப்பு காவல் நிலையம், அண்ணாமலை நகர் காவல் நிலையம் என்று வரிசையாகச் சொன்னார்கள்.

“இவர்கள் பத்துநாட்களாக வந்து தங்கியிருக்கிறார்கள் இவர்களுக்குத் தினந்தோறும் கோழிகறி குழம்பு, ஆட்டுக்கறி குழம்பு, சரக்கு எனக் கொடுக்கிறேன் என் சொந்த செலவில்.

இவர்கள் ஏன் வந்திருக்கிறார்கள் தெரியுமா? அவர்கள் லிமிட்டில் காணாமல் போன டூ வீலர்களை கண்டுபிடித்து அதை ஏற்றிப்போவதற்காக. அவர்களிடம் வண்டி திருடுகின்றவனை பிடித்துக் கொடுக்கிறேன், பிடித்து சிறையில் போடுங்கள் என்று சொன்னால் வேண்டாம் என்கிறார்கள். ஆனால் உண்மையிலே குற்றங்களை குறைக்க போலீஸ்போல செயல்படும் என் மீது தவறான தகவலைப் பரப்புகிறார்கள்” என்று சொன்ன குரு முத்தாய்ப்பாக ஒன்றைச் சொன்னார், ‘தம்பி, உண்மையிலயே திருடன் யாருன்னா அது போலீஸ்தான்’ என்று.

வன்னியர் சங்கத் தலைவராகவிருந்தாலும் தலித் சமூகத்தினரிடம் நெருக்கமாக நம்பிக்கையாக எளிமையாக பழகக்கூடியவர்.

திமுக ஆட்சிக்காலத்தில் பாமக கூட்டணியில் இருந்தது. அப்போது ஜெயங்கொண்டம் பகுதியில் நிலக்கரி சுரங்கம் விரிவாக்கம் செய்வதற்கு என்.எல்.சி, முயற்சித்தது. இதற்கு பாமக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது அதிகாரிகள் முதல்வர் கருணாநிதியை சந்தித்தபோது, “நீங்கள் பாமக தலைவர் ராமதாஸை பார்த்துவிட்டு வாருங்கள்” என்றார். அதன்படியே என்.எல்.சி, அதிகாரிகள் ராமதாஸை சந்தித்து விரிவாக்கத்தைப் பற்றி சொன்னபோது, “ நீங்கள் காடு வெட்டி குருவைப் பாருங்கள்’’ என்று சொல்லிவிட்டார் ராமதாஸ்.

என்.எல்.சி.அதிகாரிகள் காடுவெட்டி குருவைச் சந்தித்தபோது, “ எங்க மக்களையும் என் மண்ணையும் அழிக்க பார்க்கறீங்களா?” என்று கோபமாக பேசி அனுப்பியுள்ளார்.

அலைச்சல் தூக்கமில்லாமை, டாக்டர்கள் அறிவுரையை அலட்சியப்படுத்தி கட்சி பணி சங்கத்துப் பணியில் தீவிரம் காட்டிவந்ததால் சளி தொல்லையால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டார் குரு. கடலூர் நுரையீரல் சிறப்பு டாக்டர் கலைக்கோவன் தனிக் கவனம் எடுத்து குருவுக்கு சிகிச்சை கொடுத்துவந்தார்.

ஒரு கட்டத்தில் நுரையீரல் மாற்றுச் சிகிச்சை செய்யலாம் அதில் ரிசல்ட் 50% சதவீதம்தான் சொல்லமுடியும் என்றார்கள் டாக்டர்கள் அப்போதும் சிரிப்போடு வெளியில் போய்விடுவாராம் குரு.

பிரச்னை அதிகமான பட்சத்தில் டாக்டர் ராமதாஸ் வற்புறுத்தலால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகச் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சிகிச்சையளிக்க வரும் டாக்டர்களையும் செவிலியர்களையும் பார்த்து, “என்னை முடக்கி போட நினைக்கிறீங்கிளா?” என்று கேட்டிருக்கிறாராம்.

குரு, டாக்டர்களிடம் சண்டை போடுவதை மருத்துவர் ராமதாஸிடம் சொன்னபோது, சிரித்துக்கொண்டே, “அவர் அப்படிதான் ஆனால் ரொம்ப நல்ல குணம் உள்ளவர்” என்று டாக்டர்களை சமாதானம் செய்துவிட்டு போவாராம்.

மருத்துவமனையில் சேர்த்ததிலிருந்து ராமதாசும், அன்புமணியும் தினந்தோறும் குருவை சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டுவந்தார்கள். மே 26 ஆம் தேதி மாலை சுமார் 7 மணியளவில் நிலைமை மோசமாகியுள்ளது என்ற தகவல் கேள்விப்பட்ட மருத்துவர் ராமதாஸ் மனதளவில் நிலைகுலைந்துபோயுள்ளார். குரு உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஆம்புலன்ஸில் சுமந்துகொண்டு காடுவெட்டி கிராமத்தை நோக்கிவந்த வாகனத்தை வழிமறித்தது மக்கள் கூட்டம். பாமகவினர் மட்டுமல்லாது மற்ற கட்சியினர் அனைவரது அஞ்சலிக்குப் பிறகு குரு உடல் அவர் விருப்பப்படியே சொந்தத் தோட்டத்தில் அவரது தாத்தா, அப்பா ஆகியோர் புதைக்கப்பட்ட இடத்தில் இன்று பகல் புதைக்கப்பட்டது.

வெளியே அதிரடியான ஆளாகத் தெரிந்தாலும் முரட்டுக் குழந்தை அவர் என்கிறார்கள் காடுவெட்டி கிராமத்தில்.

ஞாயிறு, 27 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon