மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்!

காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்!

கர்நாடகா ஆளுநர் வஜுபாய் வாலா, அம்மாநிலத்தின் முதலமைச்சராக எடியூரப்பாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (மே 18) மாநில மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் (மே 15) வெளியாகின. பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றபோதும், பெரும்பான்மை பெறவில்லை. இதனையடுத்து, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி ஆட்சியமைக்க உறுதுணையாக இருப்போமென்று அறிவிப்பு வெளியிட்டார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத். மஜதவின் குமாரசாமி முதலமைச்சராக ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார். அதன்பின் குமாரசாமி, சித்தராமையா உட்பட இரு கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் இணைந்து சென்று, கர்நாடக மாநில ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்தனர்.

ஆனால், இன்று (மே 17) காலை பெங்களூருவில் நடந்த பதவியேற்பு விழாவில் பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் வஜுபாய்வாலா. இதனையடுத்து மஜத மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இணைந்து, சட்டமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். பெரும்பான்மை பெறுவதற்கான இடங்களை மஜத – காங்கிரஸ் கூட்டணி பெற்றுள்ளது என அறிவித்தபோதும், பாஜகவை ஆட்சியமைக்க அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த பிரச்சினையை நாடு முழுவதும் தெரிவிக்கும் வகையில், நாளை மாநில மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட். இதுகுறித்து, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை அளித்தபிறகு, ஆளுநர் பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

”ஆளுநர் அலுவலகத்தின் மாண்பை மட்டும் அவர் குலைக்கவில்லை; அவரது செயல்பாடு அரசியலமைப்புக்கு எதிரானது. இந்திய ஜனநாயகத்தின் இதயத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலானது, ஒரு முன்னோடியாக அமையும் அபாயமுள்ளது. இனி வரும் தேர்தல்களில் கடுமையான விளைவுகளை இது ஏற்படுத்தக்கூடுமென்று எச்சரிக்கை செய்துள்ளது” என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் கெலாட். இந்த போராட்டத்தின்போது உணர்ச்சியைத் தூண்டும் வார்த்தைகளையும், புதுமையான நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டுமெனக் கூறியுள்ளார்.

இந்த போராட்டத்திற்கான ஆதரவை, இதர ஜனநாயக சக்திகள் மற்றும் பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சியினர் பெற வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார் அசோக் கெலாட். இந்த போராட்டம் தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஊடகங்களைச் சந்தித்துப் பேச வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார்.

இதனால், ஜனநாயக விதிமுறைகள் மற்றும் அரசியலமைப்பின் புனிதத்தன்மையை குடியரசுத்தலைவர் காக்க வேண்டுமென்று கூறி, நாளை ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநரைச் சந்தித்து கர்நாடக ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கோரிக்கை மனுவை அளிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

அசோக் கெலாட்டின் அறிவிப்பு வெளியானவுடன், இன்று மாலை 6 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. பொதுப்பணித்துறை அமைச்சர் நமசிவாயம் தலைமையில், புதுச்சேரியில் கர்நாடக ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon