கந்து வட்டி கொடுமையால் சுமை தூக்கும் தொழிலாளர் பெருமாள் சாணிப்பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு ரங்கம்பாளையத்தைச் சேர்ந்த பெருமாள் அரசு நிறுவனமான ஆவினில் சுமை தூக்கும் தொழிலாளராகப் பணிபுரிந்துவருகிறார். இவர் சம்பத் நகரைச் சேர்ந்த வாசு என்பவரின் நிதி நிறுவனத்தில் கந்து வட்டிக்கு 15 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று வாரந்தோறும் வட்டி மற்றும் அசலையும் கட்டிவந்துள்ளார்.
5 வாரங்களில் 7500 ரூபாய் செலுத்திவந்த நிலையில், மீதத் தொகையைக் கட்டக் கால தாமதம் ஏற்பட்ட நிலையில், நிதி நிறுவன ஊழியர்கள் தகாத வார்த்தைகளில் திட்டியதால் மனமுடைந்த பெருமாள் சாணிப் பவுடரைக் குடித்துத் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனைப் பார்த்த உறவினர்கள் பெருமாளை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
என்ன செய்கிறது காவல் துறை?
கந்து வட்டி கொடுமையை வேரறுக்கத் தமிழக அரசு 2003 ம் ஆண்டு, 'கந்துவட்டி தடுப்புச் சட்டத்தை' கொண்டு வந்தது, அதனடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கக் காவல் துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது . ஆனால் மணி நேர வட்டி, தினவட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி, கந்து வட்டி என வரைமுறை இல்லாமல் வட்டிவாங்குவது தொடர்கிறது. இதனால் கந்து வட்டிக் கொடுமையால், வெளியில் தெரியாமல் பல தற்கொலைகள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் ஏழைகள் மட்டுமல்ல, வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள், திரைப்பட தயாரிப்பாளர் எனப் பட்டியல் நீள்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளில், 800 பேர் வரை தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். நெல்லை கந்து வட்டி தீக்குளிப்பிற்குப் பிறகும் இது போன்ற சம்பவங்கள் நடப்பது தொடர்கின்றன.