மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

இணைப்பு: வேலைக்கு ஆபத்து!

இணைப்பு: வேலைக்கு ஆபத்து!

ஏர்டெல் மற்றும் டெலினார் நிறுவனங்கள் இணைந்த பிறகு டெலினாரின் ஊழியர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின்னர் இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் சில நெட்வொர்க் நிறுவனங்கள் மூடப்பட்டும் சில நெட்வொர்க் நிறுவனங்கள் இணைக்கப்பட்டும் வருகின்றன. அந்த வகையில், டெலினார் இந்தியா நிறுவனத்தை பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைப்பதற்கு மே 14ஆம் தேதி தொலைத் தொடர்புத் துறை ஒப்புதல் அளித்திருந்தது. இந்த இணைப்பின் மூலமாக டெலினார் சேவை வழங்கி வரும் ஆந்திரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, குஜராத், கிழக்கு உத்தரப் பிரதேசம், மேற்கு உத்தரப் பிரதேசம், அசாம் ஆகிய ஏழு தொலைத் தொடர்பு வட்டாரங்களில் ஏர்டெல் சேவை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இந்த இணைப்பால் டெலினார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பணியில் தொடர்வது சம்பந்தமாக டெலினார் நிறுவன ஊழியர்களுடனான சந்திப்பு ஒன்றுக்கு ஏர்டெல் நிறுவனம் அழைப்பு விடுத்து அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. ஆந்திர வட்டாரத்தில் பணியாற்றும் டெலினார் ஊழியர் ஒருவர் இத்தகவலை மிண்ட் ஊடகத்திடம் பேசுகையில் உறுதிசெய்துள்ளார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக ஏர்டெல் நிறுவனம் “டெலினார் இந்தியாவின் அனைத்து ஊழியர்களும் ஏர்டெல் நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றுவதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை” என்று தெரிவித்துள்ளது.

இந்த இணைப்பால் டெலினார் இந்தியா நெட்வொர்க் நிறுவன ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கெனவே வருவாய் இழப்பைச் சந்தித்து வரும் ஏர்டெல் நிறுவனம் டெலினார் ஊழியர்களுக்கு வாழ்வளிப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவே!

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon