மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

கோவா, பீகாரில் எதிரொலிக்கும் கர்நாடக முடிவு!

கோவா, பீகாரில் எதிரொலிக்கும் கர்நாடக முடிவு!

தனிப் பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்த கர்நாடக ஆளுநரின் நடவடிக்கையை முன் மாதிரியாகக் கொண்டு கோவா, பீகார் மாநிலங்களில், ‘கர்நாடக ஃபார்முலா’ வெடித்திருக்கிறது. இது பாஜகவுக்கும் அம்மாநில ஆளுநர்களுக்கும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவாவில் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் இப்போது ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறது. அதேபோல பீகார் மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சி அமைக்க உரிமை கோர இருப்பதாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் இப்போது தனிப் பெரும் கட்சியாக இருக்கும் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்து பதவிப் பிரமாணமும் செய்துவைத்துவிட்டார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கோவாவில் நடந்த தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றது.

40 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட கோவாவில் ஆட்சியமைக்க 21 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 17 தொகுதிகளைக் கைப்பற்றித் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. பாஜக 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கோவா பார்வர்டு, எம்.ஜி.பி. ஆகிய கட்சிகள் தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்றன. தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. 3 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வென்றனர்.

தேர்தல் முடிவுகளின்படி ஆட்சியமைக்க போதுமான உறுப்பினர்களைப் பெறாதபோதும், அதிக தொகுதிகளில் வென்றதால் காங்கிரஸை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும். ஆனால், கோவாவின் ஆளுநர் மிருதுளா சின்ஹாவை சந்தித்த பாஜகவின் மனோகர் பரிக்கர் தனக்கு மகாராஷ்டிரவாதி கோமந்தக், கோவா பார்வர்டு மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்ததற்கான ஆதாரங்களை ஒப்படைத்தார். இதையடுத்து ஆட்சியமைக்க பாரிக்கருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து 2017ஆம் மார்ச் 14ஆம் தேதி கோவா முதல்வராக பாரிக்கர் பதவியேற்றார்.

இந்நிலையில் இப்போது கர்நாடக ஆளுநர் தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததைப் போல கோவாவிலும் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று நாளை (மே 18) கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் மாளிகையை நோக்கிப் பேரணியாகச் செல்ல இருக்கிறார்கள்.

நாம் இது குறித்து காங்கிரஸ் அகில இந்திய செயலாளரும், கோவா மாநிலப் பொறுப்பாளருமான டாக்டர் செல்லகுமாரிடம் பேசினோம்.

“கடந்த வருடம் காங்கிரஸ் கோவாவில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றது. ஆனால் நாங்கள் எங்களுக்கான மெஜாரிட்டியை திரட்டி ஆட்சி அமைக்க முயற்சி செய்துகொண்டிருந்தபோதே பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்துவிட்டார் ஆளுநர். அப்போதே இதுபற்றி நாங்கள் விரிவாக ஊடகங்களிலும் பேசியிருக்கிறோம். பாஜகவுக்கு சாதகமாக நடக்க வேண்டும் என்பதே ஆளுநர்களுக்கு இடப்பட்ட உத்தரவாக இருக்கிறது. அதனால்தான் கோவாவில் மேற்கொண்ட நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாறான நிலைப்பாட்டை கர்நாடகாவில் மேற்கொண்டிருக்கிறார்கள். எனவேதான் நாங்கள் நாளை கோவா ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்து தனிப்பெரும் கட்சியான காங்கிரசை ஆட்சி அமைக்க கோரிக்கை வைப்போம்’’ என்றார் கோவாவுக்குப் புறப்பட்டபடியே.

கர்நாடக ஆளுநர் பற்ற வைத்த பொறி கோவாவை அடுத்து பீகாரிலும் பரவியிருக்கிறது.

கடந்த 2005ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமாரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுவும் காங்கிரஸும் சேர்ந்து மகா கூட்டணி அமைத்து பாஜகவை எதிர்த்துப் போட்டியிட்டனர். இந்த கூட்டணியே வென்றது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 80 இடங்களில் வென்றது. அக்கட்சியே தனிப்பெரும் கட்சியாக இருந்தது. ஆனால் கூட்டணியாகவே போட்டியிட்டதால் நிதீஷ் குமார் முதல்வர் ஆனார். 2017 ஆம் ஆண்டு லாலுவுடனான உறவை ஒரே நாளில் முறித்து பாஜகவுடன் கைகோர்த்து நிதீஷ் தொடர்ந்து பீகாரின் முதல்வராக இருக்கிறார்.

இந்நிலையில் கர்நாடக ஆளுநரின் முடிவை அடுத்து இன்று (மே 17) தனது ட்விட்டரில் எழுதியுள்ள லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ், ‘’பீகார் சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சி என்றால் அது ராஷ்டிரிய ஜனதா தளம்தான். அப்படிப் பார்த்தால் எங்களைதான் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும். கர்நாடக ஆளுநரின் முடிவை ஒட்டி எங்களையும் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று நாளை மதியம் ஒரு மணிக்கு பீகார் ஆளுநரை சந்திக்கிறேன்’’ என்று எழுதியுள்ளார்.

கோவா, பீகாரைத் தொடர்ந்து மணிப்பூரிலும் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

2017இல் நடந்த மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில், மொத்தமுள்ள 60 இடங்களில் காங்கிரஸ் 28 இடங்களிலும், பாஜக 21 இடங்களிலும் வெற்றி பெற்றன. தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான 30 இடங்களைப் பிடிக்க, காங்கிரசுக்கு வெறும் 3 இடங்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனாலும் இதர சிறிய கட்சிகள் ஆதரவுடன் பாஜக 33 உறுப்பினர்களின் ஆதரவை பல வழிகளிலும் பெற்றது. இப்போது அங்கேயும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளது.

கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவின் தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்த முடிவால் இப்போது பாஜகவுக்கு கோவா, பீகார், மணிப்பூர் என்று பல்வேறு மாநிலங்களில் பிரச்சினை ஆகியிருக்கிறது.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon