தனுஷின் அனேகன் படத்தின் மூலம் கவனம்பெற்ற அமைரா தஸ்தூர், தனது அடுத்த படத்தில் இரட்டைத் தோற்றத்தில் நடிக்கிறார்.
சிம்பு கதாநாயகனாக நடித்து வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்தாக ஜி.வி.பிரகாஷை கதாநாயகனாகக் கொண்டு புதிய படம் ஒன்றை உருவாக்கிவருகிறார். சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ பாணியில் உருவாகிவரும் இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக அமைரா நடிக்கிறார். மேலும் சஞ்சிதா ஷெட்டி, சோனியா அகர்வால் ஆகியோரும் நடிக்கின்றனர்.
தந்தையின் தொழிலை கவனித்துவரும் ஜி.வி.பிரகாஷ், வெவ்வேறு பெண்களிடம் காதல் வயப்பட்டு, இறுதியில் உண்மைக் காதலைக் கண்டடைவதை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படம் குறித்தும் அமைராவின் கதாபாத்திரம் குறித்தும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.
“ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அமைரா நடிக்கிறார். சிறு வயதிலிருந்தே ஜி.வி.பிரகாஷ் மீது காதல் கொள்ளும் கதாபாத்திரம் அவருடையது. நம் வாழ்க்கையில் பல உறவுகளைக் கடந்திருப்போம். ஆனால் எப்போதும் மறக்கமுடியாத ஒரு காதல் இருந்துகொண்டுதான் இருக்கும். அமைராவின் கதாபாத்திரமும் இது போன்றது. படம் முழுவதும் அவர் இருப்பார். இரண்டு விதமான தோற்றத்தில் நடிக்கிறார்” என்றார்.
படம் குறித்து கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்கள் என்றபோது, “இந்தப் படத்தில் கற்பனைக் கூறுகள் நிறைய உள்ளன. ஆனால் படம் குறித்து வெளிப்படையாகச் சொல்ல முடியாது” என்றவர், மீண்டும் அமைராவின் கதாபாத்திரம் குறித்து விவரிக்கலானார்.
“உண்மையான அன்பிற்காகப் போராடும் அமைரா, அதை நிரூபிக்க எந்தளவுக்குச் செல்ல வேண்டுமோ அந்தளவுக்குச் செல்வார். ஒரு அப்பாவி போல தோற்றம் கொண்டாலும் உணர்ச்சிகளை திறம்பட வெளிப்படுத்துவார். அவருடைய கதாபாத்திரத்தை திரையில் பார்க்கும் அனைவரும் வெகுவாக ரசிப்பர்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.