மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

பிளஸ் டூ தேர்வு: சாதித்த பார்வையற்ற மாணவிகள்!

பிளஸ் டூ தேர்வு: சாதித்த பார்வையற்ற மாணவிகள்!

திண்டுக்கல்லைச் சேர்ந்த பார்வையற்ற சகோதரிகள் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1050 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சானார்பட்டியைச் சேர்ந்தவர் எல்.பாண்டிகோகிலா. இவரது சகோதரி எல்.பாண்டி செல்வி, இவரை விட மூன்று வயது பெரியவர். இவர்களது தந்தை எஸ்.இலக்கியன் தினக்கூலித் தொழிலாளி. நடந்து முடிந்த பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் எல்.பாண்டிகோகிலா 1064 மதிப்பெண்கள் பெற்று அந்தப் பள்ளியில் முதலிடத்தையும், அவரது அக்கா பாண்டி செல்வி 1053 மதிப்பெண்கள் பெற்று அதே பள்ளியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். வரலாறு பாடத்தில் 199 மதிப்பெண்கள் பெற்று பாண்டிசெல்வி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

பாட வாரியாக இவர்களது மதிப்பெண்கள் விவரம்:

பாண்டி கோகிலா:

தமிழ்-162,

ஆங்கிலம்-176,

புவியியல்-186,

கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்-170,

வரலாறு-192

பொருளாதாரம்-178.

பாண்டி செல்வி:

தமிழ்-182,

ஆங்கிலம்-168,

புவியியல்-169,

வரலாறு-199,

பொருளாதாரம்-163

அரசியல்-172.

மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த போதிலும் அதனைப் பொருட்படுத்தாமல் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் இந்தப் பார்வையற்ற சகோதரிகள்.

இது குறித்து பாண்டிசெல்வி கூறுகையில்,"எங்கள் குடும்பத்தில் என்னையும், கோகிலாவையும் சேர்த்து மொத்தம் நான்கு பேர். எங்களுக்கு ஒரு தங்கை மற்றும் ஒரு தம்பி இருக்கிறார்கள் அவர்கள் இருவரும் குழந்தைகள். எங்கள் படிப்பிற்கு உதவும் நிலையில் பெற்றோர்கள் இல்லை. உறவினர்களின் உதவியாலேயே நாங்கள் இருவரும் கல்வி பயின்றோம்" என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் சிவகாசியில் அச்சகக் கூலித் தொழிலாளியின் மகளான ராசாத்தி பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1036 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 90 சதவிகித பார்வை மாற்றுத்திறன் கொண்ட இவர், அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் கீழ் ப்ரைலி முறையில் (பார்வையற்றோர் கற்கும் முறை) பயின்று இந்தச் சாதனையை படைத்துள்ளார்.

தவறுக்கு வருந்துகிறோம்

நமது மின்னம்பலத்தில் மதியம் 1 மணிப் பதிப்பில் `தடையை வென்று சாதித்த வான்மதி' என்ற தலைப்பில் வெளியான செய்தியில், வான்மதி 1200க்கு 1031 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளதாகத் தெரிவித்திருந்தோம். அதைவிட அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளின் விவரம் தற்போது தான் தெரியவந்தது. தவறுக்கு வருந்துகிறோம்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon