மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

உணவுப் பொருட்களிலிருந்து எத்தனால்!

உணவுப் பொருட்களிலிருந்து எத்தனால்!

தேசிய உயிரி எரிபொருள் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய உயிரி எரிபொருள் கொள்கையின் படி, சேதமடைந்த உணவு தானியங்கள், அழுகிய உருளைக் கிழங்குகள், சோளம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படும். இதனால் நடப்பு ஆண்டில் மட்டும் 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவு தவிர்க்கப்படும். இந்தத் தேசிய உயிரி எரிபொருள் கொள்கைக்கு மே 16ஆம் தேதியன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுவரையில், கரும்பிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு வந்த எத்தனாலை மட்டும் பெட்ரோலுடன் கலப்பதற்கு அனுமதிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தேசிய உயிரி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மொலாசஸ்ஸில் (வெல்லப்பாகு) இருந்து உயிரி எத்தனால் உற்பத்தி செய்வதையும், சமையல் சாராத எண்ணெய் வித்துகளில் இருந்து உயிரி டீசல் உற்பத்தி செய்வதையும் இந்தப் புதிய கொள்கை 1ஜி என்று வகைப்படுத்துகிறது. நகராட்சி திடக் கழிவுகளிலிருந்தும், பயோ சி.என்.ஜி.யில் (உயிரி அழுத்த இயற்கை எரிவாயு) இருந்தும் 2ஜி எத்தனால் உற்பத்தி செய்துகொள்ளலாம்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’கரும்புச் சாறு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, இனிப்புச் சோளம், சோளம், மரவள்ளிக் கிழங்கு, கோதுமை, அரிசி, அழுகிய உருளைக் கிழங்குகள் போன்றவற்றை அனுமதிப்பதன் மூலம் எத்தனால் உற்பத்திக்கான மூலப் பொருட்களை இக்கொள்கை விரிவுபடுத்துகிறது. தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒப்புதலுடன் பெட்ரோலுடன் கலப்பதற்கான எத்தனாலை உற்பத்தி செய்ய உபரி உணவு தானியங்களைப் பயன்படுத்துவதற்கு இக்கொள்கை அனுமதியளிக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon