மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

பாகிஸ்தானாக மாறும் இந்தியா!

பாகிஸ்தானாக மாறும் இந்தியா!

பாரதிய ஜனதா கட்சியானது இந்தியாவை சர்வாதிகார நாடாக அல்லது பாகிஸ்தானாக மாற்றி வருகின்றது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சார்ந்த குமாரசாமி மற்றும் பாஜகவைச் சார்ந்த எடியூரப்பா இருவரும் ஆட்சியமைக்க உரிமை கோரினர். ஆனால் ஆளுநர் நேற்று எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். பல்வேறு சர்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் இடையில் இன்று காலை எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றார்.

சத்தீஸ்கர் ராய்பூரில் இன்று (மே 17) நடைபெற்ற “ஜன் ஸ்வராஜ் சமீலன்” நிகழ்வின் வெள்ளி விழாவில் பங்கேற்ற ராகுல் காந்தி, “பாஜகவானது இந்தியாவை சார்வாதிகார நாடாக அல்லது பாகிஸ்தானாக மாற்றி வருகின்றது. ஆர்எஸ்எஸ் அமைப்பானது இந்தியாவின் அனைத்து ஜனநாயக நிறுவனங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக கைப்பற்றி வருகின்றது. இது போன்ற நிகழ்வுகள் சர்வாதிகார நாடுகளில் தான் நடைபெறும்” என்று கூறியுள்ளார்.

“நாட்டின் அரசியல் அமைப்பு கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. கர்நாடகாவில் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் ஒருபுறம் இருக்கிறார்கள், ஆனால் ஆளுநர் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் 1௦௦ கோடி ரூபாய்க்கு விலை பேசப்படுகிறார்கள்” என்று ராகுல் காந்தி பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “பாஜக நாடுமுழுவதும் அச்சமூட்டும் சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது. அவர்கள் தலித் மக்களை விரும்புவதில்லை, பெண்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கும் நன்மை செய்யப் போவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது உரையில் பாஜக தலைவர் அமித்ஷாவைப் பற்றிப் பேசிய ராகுல், “எழுபதாண்டு கால இந்திய வரலாற்றில் முதல் முறையாக கொலைக் குற்றம் சாட்டப்பட்ட நபர் தேசியக் கட்சியின் தலைவராகியுள்ளார்” என்று விமர்சித்தார்.

இறுதியாக, “இந்தியாவின் நீதித்துறை, பத்திரிக்கைகள், பாஜக எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைவரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக ஒற்றை வார்த்தைப் பேச முடியாமல் அச்சத்தில் இருக்கிறார்கள்” என்றார் ராகுல் காந்தி.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon