மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

சுரங்கம்: இந்தியா - மொராக்கோ ஒப்பந்தம்!

சுரங்கம்: இந்தியா - மொராக்கோ ஒப்பந்தம்!

சுரங்கம் மற்றும் நிலவியல் துறையில் இந்தியா மற்றும் மொராக்கோ நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா - மொராக்கோ நாடுகளுக்கு இடையேயான இந்த ஒப்பந்தம் ஏப்ரல் 14ஆம் தேதியன்று முதலில் மொராக்கோ மின்சாரம், சுரங்கம், நிலையான மேம்பாடு அமைச்சகத்திற்கும், இந்திய சுரங்கத் துறை அமைச்சகத்துக்கும் இடையே டெல்லியில் கையெழுத்தாகியிருந்தது. இந்நிலையில் இதற்கான ஒப்புதலைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மே 16ஆம் தேதி வழங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய சுரங்கம் மற்றும் நிலவியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ’இந்த ஒப்பந்தம் சுரங்கம் மற்றும் நிலவியல் துறையில் இந்தியாவுக்கும் மொராக்கோவுக்கும் இடையே நிறுவன அமைப்புகளை உருவாக்க வகை செய்கிறது. இந்த ஒத்துழைப்பினால் பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல் துறைகளில் இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மைகள் ஏற்படும்.

சுரங்கம் மற்றும் நிலவியல் துறையில் இந்தியாவுக்கும் மொராக்கோவுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். நிலவியல் அடிப்படை வசதி மேம்பாடு, நிலவியல் மற்றும் சுரங்கப் பணி மேம்பாடு, பயிற்சித் திட்டங்கள், நிலவியல் தகவல் வங்கி உருவாக்குதல் போன்ற துறைகளிலான இரு தரப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள், புதுமைப் படைப்பு நோக்கத்துக்கு உதவும்’ என்று கூறப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான இந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டத் துறையில் இந்தியா மற்றும் மொராக்கோ இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது சட்டம் மற்றும் சட்டம் இயற்றுதல் துறையில் அனுபவங்கள் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ள உதவும் என்று சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon