மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

ஆளுநர் முடிவு: வலுக்கும் கண்டனங்கள்!

ஆளுநர் முடிவு: வலுக்கும் கண்டனங்கள்!

பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்த கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவின் முடிவுக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, 104 தொகுதிகள் வெற்றி பெற்றிருந்த பாஜக சார்பில் எடியூரப்பா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் கூட்டணி அமைத்து 118 எம்எல்ஏக்கள் இருப்பதாக அறிவித்தும் ஆட்சியமைக்க அழைக்காத அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா, நேற்று எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசமும் வழங்கினார். ஆளுநரின் இந்த நடவடிக்கை பாஜகவுக்கு சாதகமாக எடுக்கப்பட்டுள்ளது என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்றைய நாள் கர்நாடகா மற்றும் இந்திய ஜனநாயகத்துக்கு மிகவும் சோகமான நாள். மத்திய அரசின் கைப்பாவையாக தங்களை மாற்றிக்கொள்ளும் ஆளுநர், தாங்கள் வகிக்கும் பதவியின் மதிப்பைக் குறைக்கின்றனர். குதிரை பேரத்துக்கும் ஜனநாயக மதிப்பைச் சீர்குலைப்பதற்கும் ஆளுநரின் முடிவு வழிவகுக்கும். எனவே, பாஜகவை ஆட்சியமைக்க அழைத்த கர்நாடக ஆளுநரின் முடிவை சட்ட ரீதியாக ஆய்வு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் இது தொடர்பாக ஏஎன்ஐ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார். கர்நாடக ஆளுநர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்பதோடு, மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையிலும் இருந்துள்ளார். மத்திய அரசின் பேச்சையே அவர் கேட்பார் என்பது தெளிவாகிறது” என்று கூறியுள்ளார்.

இதேபோல், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி, “ஆட்சி எந்திரத்தை பாஜக கைப்பற்றிய தினத்தில் இருந்தே ஜனநாயகத்தைத் தொடர்ந்து தாக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். பாபா சாகீப் அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச் சட்டத்தை அழித்து ஒழிக்கும் சதியும் இந்த ஆட்சியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே, பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவிற்கு கர்நாடக ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்தது சரியான நடைமுறை என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தஞ்சையில் இன்று (மே17) செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், “பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளதால் எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுத்தது சரியான நடைமுறை எனக் கூறினார்.

மேலும், “எடியூரப்பா பதவி ஏற்றவுடன் விவசாயிகள் கடன் ரூ.56 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்துள்ளார். பாரதிய ஜனதா ஆட்சி எங்கெல்லாம் நடைபேறுகிறதோ அங்கெல்லாம் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்துள்ளது. 150 ஆண்டுகள் பழமையான சிக்கல் நிறைந்த காவிரி பிரச்சினைக்கும் பாஜக அரசு நல்ல தீர்வை எடுக்கும் உச்சநீதிமன்ற துணையாக இருக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon