கான் திரைப்பட விழாவில், திரையிடப்பட்டு படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே பார்வையாளர்கள் 100 பேர் அரங்கை விட்டே வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸில், கான் திரைப்பட விழா பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், ஹூமா குரேஷி, மல்லிகா ஷெராவத், நடிகர் தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இவ்விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராய் நாடு திரும்பியுள்ளார்.
இந்த விழாவில் பல படங்கள் திரையிடப்பட்டுவரும் நிலையில், லார்ஸ் வோன் ட்ரையர் இயக்கிய சீரியல் கில்லர் படமான, ‘தி ஹவுஸ் தட் ஜாக் பில்ட்’ என்ற படமும் திரையிடப்பட்டது. ஆனால் திரையிடப்பட்டு படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே பார்வையாளர்கள் 100 பேர் அரங்கை விட்டே வெளியேறியுள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்று உறுப்புகளைச் சிதைக்கும் கொடூரக் காட்சிகள் படத்தில் அதிகமாக இருந்ததுதான் இந்த வெளியேற்றத்துக்குக் காரணமாக கூறப்படுகிறது.
இதுபோன்ற பார்க்கக்கூட முடியாத கொடூர வன்முறைக் காட்சிகளை வைத்து படமெடுப்பது கலையே கிடையாது என வெளியேறியவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக இந்தப் படத்தைப் பார்த்த பிரபல பத்திரிகையைச் சேர்ந்த சார்லி ஏஞ்சலாவும் இதே குற்றச்சாட்டை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், படத்தை முழுவதுமாகப் பார்த்த சிலர் படம் சிறப்பாகவே இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.