மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

போலீஸ் அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்த முதல்வர்!

போலீஸ் அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்த முதல்வர்!

கோவை ரயில் நிலையம் அருகே தமிழக காவல் துறையின் முதல் அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 17) திறந்துவைத்தார்.

கோவை ரயில் நிலையம் எதிரில், ஹாமில்டன் கிளப் கட்டடம் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1918ஆம் ஆண்டு ஹாமில்டன் என்ற போலீஸ் அதிகாரி ஹாமில்டன் கிளப்பைக் கட்டினார். பின்னர், 1951ஆம் ஆண்டு தமிழக போலீசிடம் இந்தக் கட்டடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் உள்ள 18 அறைகளில், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தங்கியிருந்தனர்.

இந்தக் கட்டடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டதால், இதனை இடிக்கத் திட்டமிடப்பட்டது. அப்போதைய மாநகர போலீஸ் கமி‌ஷனராக இருந்த அமல்ராஜ், இந்தக் கட்டடத்தை இடிக்காமல், புதுப்பித்து, அதை காவல் அருங்காட்சியகமாக மாற்றத் திட்டமிட்டார். இதையடுத்து, அருங்காட்சியகமாக மாற்ற காவல் துறை சார்பில் பணிகள் நடைபெற்றன. தற்போது 60 லட்சம் ரூபாய் செலவில் இந்த கிளப் அருங்காட்சியகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு, நவீன ஆயுதங்கள், துப்பாக்கிகள், வாள், ராணுவத் தளவாடங்கள் மற்றும் டாங்கிகள் உள்ளிட்ட துறை சார்ந்த பல பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி, விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல், வீரப்பனிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

இது குறித்துப் பேசிய முதல்வர், இது இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கு உதவும். கோவையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமானங்களுக்கு எரிபொருள் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon