மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

மத்திய அரசுக்கு சாதகமாக ஆளுநர்கள்!

மத்திய அரசுக்கு சாதகமாக ஆளுநர்கள்!

மத்திய அரசுக்கு ஆதரவாகவே மாநில ஆளுநர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் இதுதான் ஊரறிந்த உண்மை என்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகத்தில் ஆட்சியமைக்க யாருக்கும் அறுதிப் பெரும்பான்மைக் கிடைக்காத நிலையில், ஆட்சியமைக்க பாஜக சட்டமன்றத் குழுத் தலைவர் எடியூரப்பாவும், மஜத தலைவர் குமாரசாமியும் தனித்தனியாக உரிமை கோரினர். 117எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ள குமாரசாமியை அழைக்காத ஆளுநர் வஜுபாய் வாலா, 104எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுள்ள எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்தார். இன்று காலை கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்.

இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், மத்திய அரசின் கைப்பாவையாக ஆளுநர்கள் செயல்படுகிறார்கள் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு மாநிலத் தலைவர்களும் கருத்துக்கள் கூறி வருகின்றனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மே 17) செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். "பிரதமர் மோடி தமிழகத்தில் ஆளுநரையும், ஆளுநர் அலுவலகத்தையும் பயன்படுத்தி எந்தளவுக்கு ஜனநாயகப் படுகொலை செய்திருக்கிறார் என்பது ஏற்கனவே நாடறிந்த உண்மை. அதே நிலையை தற்போது கர்நாடக மாநிலத்தில் அரங்கேற்றி இருக்கிறார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. பிரதமராக இருக்கும் மோடி இப்படி தொடர்ந்து ஜனநாயகத்தை படுகொலை செய்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது" என்று விமர்சனம் செய்தார்.

கமல் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு, "திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும், அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் நான் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசியபோது, அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய தேவையில்லை என்று அனைவரும் தெரிவித்து இருக்கின்றனர். எனவே, திமுக உள்ளிட்ட 9 கட்சிகளும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்" என்று பதிலளித்துள்ளார்.

தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு சாதகமாக செயல்படுகிறார்களே என்ற கேள்விக்கு, "அது ஊரறிந்த உண்மை. ஏற்கனவே இதை தமிழ்நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. இப்போது கர்நாடக மாநிலம் பார்க்கிறது. அதேபோல, பல்வேறு மாநிலங்களும் இதனை பார்த்துக் கொண்டிருக்கின்றன" என்றும் தெரிவித்துள்ளார்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon