மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

ஆன்லைன் கலந்தாய்வுக்குத் தடையில்லை!

ஆன்லைன் கலந்தாய்வுக்குத் தடையில்லை!

பொறியியல் படிப்பில் ஆன்லைன் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கையில் இணையதளம் அல்லாத ஆஃப்லைன் மூலமும் கலந்தாய்வு நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையின்போது அண்ணா பல்கலைக்கழக தரப்பு வழக்கறிஞர், மாணவர்களின் விண்ணப்பக் கட்டணத்தை டிடியாக செலுத்தும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; அதன்படி நாளை (மே 18) முதல் மாணவர்கள் கட்டணத்தை செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையாக நடைபெறுவதை ஆன்லைன் கலந்தாய்வு உறுதி செய்யும்; அதுபோன்று மாணவர்கள் பெற்றோர்கள் கலந்தாய்வுக்காகச் சென்னை வர வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதை ஏற்ற நீதிபதிகள் ஆன்லைன் முறையில் விண்ணப்பம் பெறவும், கலந்தாய்வு நடத்தவும் தடையில்லை என்று உத்தரவிட்டுள்ளனர். மாவட்டம்தோறும் மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதையும், டிடி மூலமாக விண்ணப்ப கட்டணம் ஏற்கப்படும் என்பதையும் ஊடகங்களில் விளம்பரப்படுத்தவும் உத்தரவிட்டனர். இந்த உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்து ஜூன் 8ஆம் தேதி அறிக்கையாகத் தாக்கல் செய்யவும் ஆணையிட்டுள்ளனர்.

இதற்கிடையே இந்த ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கையில் திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஒவ்வொரு மண்டலத்திற்கும் 4 பாடப் பிரிவுகளில் தலா 240 இடங்கள் வீதம் மொத்தம் 720 இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon