மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

ஈகிள்டன் விடுதிக்கு பாதுகாப்பு வாபஸ்!

ஈகிள்டன் விடுதிக்கு பாதுகாப்பு வாபஸ்!

கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள ஈகிள்டன் விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவைப் பெற்ற குமாரசாமியை ஆட்சியமைக்க அழைக்காமல், தனிப்பெருங்கட்சியாக உள்ள பாஜகவை அதன் சட்டமன்றக் கட்சித் தலைவர் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா நேற்றிரவு அழைத்தார். இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.

இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி காங்கிரஸ், மஜத தொண்டர்கள் கர்நாடகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கர்நாடக சட்டப்பேரவை அமைந்துள்ள விதான் சவுதான் பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு வாபஸ்

போராட்டம் முடிந்து பேருந்து மற்றும் கார்களில் அழைத்துச் செல்லப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பிடதியிலுள்ள ஈகிள்டன் விடுதியில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் எடியூரப்பா பதவி ஏற்ற சில மணி நேரத்திலேயே விடுதிக்குப் போடப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினரே அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எம்.எல்.ஏ.க்களை கேரளா அல்லது பஞ்சாப் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யவும் காங்கிரஸ் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

உதவிக்கரம் நீட்டும் ஆந்திரா, தெலங்கானா!

கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என ஆந்திர மற்றும் தெலங்கானா மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர். விசாகப்பட்டினம் அல்லது திருப்பதியில் எம்எல்ஏக்கள் தங்க ஏற்பாடு செய்வதாக சந்திர பாபுவும் ஹைதராபாத்தில் எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் எனச் சந்திரசேகர ராவும் உத்தரவாதம் அளித்துள்ளனர். கர்நாடக எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என ஏற்கனவே கேரள அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காவல் அதிகாரிகள் மாற்றம்

மேலும் கர்நாடக மாநில காவல் துறையின் முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த இடங்களுக்கு எடியூரப்பாவிற்கு சாதகமான அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ரயில்வே துறை கூடுதல் டிஜிபி அமர் குமார் பாண்டே மாற்றப்பட்டு உளவுத் துறை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக ரிசர்வ் காவல் துறையின் டிஐஜி சந்தீப் பாட்டில் மாற்றப்பட்டு உளவுத் துறை டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிதார் மாவட்ட எஸ்.பி தேவராஜா மாற்றப்பட்டு, பெங்களூரு மத்திய பிரிவு துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊழல் தடுப்புப் பிரிவு எஸ்.பி கிரீஷ் மாற்றப்பட்டு பெங்களூரு வடகிழக்கு பகுதி துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என்று பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை துணைச் செயலாளர் குர்மா ராவ் தெரிவித்துள்ளார்.

15 நாட்கள் தேவையில்லை

இந்நிலையில் முதல்வராகப் பதவியேற்ற எடியூரப்பாவிற்கு கர்நாடக பாஜக அலுவலகத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, "வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பாஜக தலைவர்களுக்கு நன்றி. பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா பிரச்சாரத்தால் பெரும் வெற்றி கிடைத்துள்ளது" என்று தெரிவித்தார். பெரும்பான்மையை நிரூபிக்க 15நாட்கள் தேவையில்லை, விரைவில் நிரூபிப்போம் என்றும் கூறியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு தற்காலிக சபாநாயகராக தேஸ் பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கர்நாடக சட்டப்பேரவைக்கு எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon