மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

குழந்தை இறப்பு: மருத்துவமனைக் கண்ணாடி உடைப்பு!

குழந்தை இறப்பு: மருத்துவமனைக் கண்ணாடி உடைப்பு!

திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்தவுடனே பச்சிளங்குழந்தை இறந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையிலிருந்த ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள்.

திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த பைசல் அகமது என்பவரின் மனைவி ரபியத்துள் பஷீரியா. இவர் சமீபத்தில் பிரசவத்துக்காக திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் பைசல் அகமத்தை நேற்று (மே 16) சந்தித்த மருத்துவர்கள், “உங்கள் மனைவி ரபியத்துள் பஷீரியாவுக்குப் பிரசவ வலி ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை நாங்கள் எடுத்தோம். ஆனால், பிறந்த சில நிமிடத்திலேயே பிறந்த பெண் குழந்தை இறந்து விட்டது” என்று அவரிடம் கூறியுள்ளனர்.

மருத்துவர்கள் கூறியதைக் கேட்டு, அதிர்ச்சியடைந்த பைசல் அகமது, “என்னிடம் அனுமதி பெறாமல் என்னுடைய மனைவிக்கு அறுவை சிகிச்சை ஏன் செய்தீர்கள்?” என மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து, பைசல் அகமதுவுக்கு மருத்துவர்கள் உரியப் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பைசல் அகமதுவின் உறவினர்களும் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பிரசவ வார்டை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மருத்துவமனையில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இந்த தகவலறிந்து வந்த காவல் துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்தனர். இதுதொடர்பாக, மருத்துவமனை நிர்வாகமும் காவல் துறையினரும் விசாரணை நடத்திவருகின்றனர்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon