மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

ராகுல்- அமித் ஷா மோதல்!

 ராகுல்- அமித் ஷா மோதல்!

அரசியல் சாசனத்தை பாஜக ஏளனம் செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (மே 17) வைத்த குற்றச்சாட்டுக்கு, ‘ஜனநாயகத்தைக் கொலை செய்த கட்சி காங்கிரஸ்’ என்று பாஜக தலைவர் அமித் ஷா பதில் அளித்துள்ளார்.

இன்று காலை அவசர அவசரமாக பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் கூட வராமல் பெங்களூருவில் உள்ள விதான் சௌதாவில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார்.

தனிப் பெரும் கட்சியாக இருந்தாலும் பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க, அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அவ்வழக்கில் எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில்தான் இன்று காலை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் எடியூரப்பா.

இதுபற்றி காங்கிரஸ் கட்சித் தலைவரும் பாஜக தலைவர் அமித் ஷாவும் ட்விட்டரில் பரஸ்பரம் கடுமையாக மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுபற்றி இன்று காலை ட்விட்டரில் கருத்து வெளியிட்ட ராகுல் காந்தி, ‘’கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஆட்சி அமைக்கிற பாஜகவின் செயல்பாடு என்பது முரட்டுத் தனமான நடவடிக்கை. இது அரசியல் சாசனத்தைப் பரிகாசம் செய்யும் செயல்’’ என்று கடுமையாகச் சாடியிருந்தார்.

மேலும், ‘’இன்று பாஜக தனது வெற்று வெற்றியைக் கொண்டாடுகிறது. இந்தியாவோ தன் ஜனநாயகம் தோல்வி அடைந்ததற்காக துக்கம் அனுசரிக்கிறது’’ என்று கூறியிருக்கிறார் ராகுல் காந்தி.

ராகுல்காந்தியின் இந்தத் தாக்குதலுக்கு ட்விட்டரிலேயே பதில் கொடுத்திருக்கிறார் பாஜக தலைவர் அமித் ஷா.

“கர்நாடக தேர்தல் முடிவுகளுக்குப் பின் எந்த நிமிடத்தில் காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் சந்தர்ப்ப வாதத்துக்காக கை கோர்த்தனவோ, அந்த நிமிடத்தில்தான் ஜனநாயகம் கொல்லப்பட்டது. மேலும் காங்கிரசின் இன்றைய தலைவர் தனது கட்சியின் பெருமை மிகு வரலாறுகளை அறியாதவர் போலும்.

எமர்ஜென்சியைக் கொண்டுவந்தது, பல மாநில ஆட்சிகளை 356 சட்டப் பிரிவு மூலம் கலைத்தது, நீதிமன்றங்களையும் ஊடகங்களையும் சீரழித்தது, பொது சமூகத்தைக் கெடுத்தது என்ற வரலாறு கொண்டது காங்கிரஸ்’’ என்று கூறியிருக்கிறார் அமித் ஷா.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon