மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: விசாரணையின்றிக் கைது கூடாது!

வன்கொடுமைத்  தடுப்புச் சட்டம்: விசாரணையின்றிக் கைது கூடாது!

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் அரசு ஊழியர் யாரையும் முறையான விசாரணையின்றிக் கைது செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதி ஏகே.கோயல் தெரிவித்துள்ளார்.

மார்ச் 20இல் உச்ச நீதிமன்றம் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் அரசு ஊழியர் யாரையும் முறையான விசாரணை இன்றி கைது செய்யக்கூடாது என்று ஒரு வழக்கில் தீர்ப்பளி்த்தது.

உண்மையில் வன்கொடுமைச் சட்டமானது மற்ற சட்டங்களை விட மாறுபட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தலித் மக்களுக்கு எதிராகத் தீண்டாமை உள்ளிட்ட எண்ணற்ற வன்கொடுமைகள் இழைக்கப்பட்டுவந்தன. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து தலித் மக்களுக்கு அது ஒரு குறைந்தபட்ச பாதுகாப்பாக விளங்குகிறது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களின் புகார்களை விசாரிப்பதை முதன்மையாக எடுத்துக்கொள்ளும்படி உருவாக்கப்பட்டது. ஆனால் வன்கொடுமை இழைப்பவர்கள் ஆதிக்க நிலையில் இருப்பதால் அதாவது தாக்குதல் நிலையில் இருப்பதால் அவர்களின் தரப்பு விசாரிக்கப்படுவது என்பது கைதாவதற்குப் பின்னரே தொடங்குகிறது.

தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வன்கொடுமைச் சட்டத்தின் அடிப்படையை மாற்றுவதால் இத்தீர்ப்புக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. தலித் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், அனைத்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. இதன் விளைவாக மத்திய அரசு தீா்ப்பை எதிர்த்து மீளாய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

மத்திய அரசின் மீளாய்வு வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி ஏகே கோயல் முன்பாக நடைபெற்றுவருகிறது. வழக்கின் விசாரணையின்போது நீதிபதி கூறுகையில், “தனி நபர் யாரையும் அவர் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கும் நிலையில், சிறையில் அடைக்க முடியாது. அப்படி விசாரணையின்றி ஒருவரைக் கைது செய்தால் நாம் ஒரு நாகரீகமான சமூகத்தில் வாழ்வதே கேள்விக்குறியாகிவிடுகிறது. எனவே அரசு ஊழியர் யாரையும் விசாரணையின்றிக் கைது செய்யக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon