மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

தமிழக வருவாயை உயர்த்தியுள்ளதா ஜிஎஸ்டி?

தமிழக வருவாயை உயர்த்தியுள்ளதா ஜிஎஸ்டி?

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தின் வரி வருவாய் உயர்ந்துள்ளது அல்லது வரி வருவாயில் எவ்வித உயர்வும் இல்லை என்பன போன்ற விவாதங்கள் தமிழக அரசின் பல்வேறு தரப்பில் இருக்கின்றன. ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முன்பும் பின்பும் உள்ள அரசின் வரி வருவாய் குறித்த விவரங்களை தி இந்து ஊடகம் அலசியுள்ளது.

தமிழக அரசின் வணிக வரிகள் வாயிலான வருவாய் 2013-14ஆம் நிதியாண்டில் 18 சதவிகித உயர்வுடன் ரூ.56,852 கோடியாக இருந்தது. அது 2014-15ஆம் ஆண்டில் ரூ.60,314.61 கோடியாகவும், 2015-16ஆம் ஆண்டில் ரூ.61,709.58 கோடியாகவும், 2016-17ஆம் ஆண்டில் ரூ.66,188 கோடியாகவும் உயர்ந்துள்ளது. அதேபோல 2017-18 காலகட்டத்தில் வரி வருவாய் ரூ.73,148 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்நிதியாண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதியில்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. இந்த வரி வருவாயானது 10.5 சதவிகித வளர்ச்சியாகும். எனவே ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு அரசின் வரி வருவாய் கணிசமான அளவில் உயர்ந்துள்ளதைக் காண முடிகிறது.

வணிக வரித் துறையின் விவரங்களின் படி, தமிழக அரசின் ஜிஎஸ்டி வாயிலான வரி வருவாய் 12.3 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதாவது ஜிஎஸ்டி அமலான பிறகு 2017 ஜூலை முதல் 2018 மார்ச் வரையில் ரூ.29,058 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2016-17 ஜூலை - மார்ச் காலகட்டத்தில் வருவாய் ரூ.25,881 கோடியாக மட்டுமே இருந்தது.

எனவே ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழக அரசின் வரி வருவாய் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. ஆனால், அரசின் ஒரு தரப்பினர் இவ்வாறான ஆரம்பக்கட்ட வரி வருவாய் விவரங்களை வைத்துக்கொண்டு ஜிஎஸ்டியின் எதிர்கால விளைவுகளைக் கணிக்க இயலாது என்கின்றனர்.

ஜிஎஸ்டி அமலான பிறகு வருவாய் இழப்புக்கான இழப்பீடாக மத்திய அரசு தமிழக அரசுக்கு ரூ.632 கோடி வழங்கியுள்ளது. இது மகாராஷ்டிராவைத் தொடர்ந்து அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையாகும்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon