மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

நான் எடியூரப்பாவாக இருந்தால்...

நான் எடியூரப்பாவாக இருந்தால்...

“நான் எடியூரப்பாவாக இருந்திருந்தால் உச்ச நீதிமன்றத்தில் நாளை வழக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரை பதவி ஏற்பு விழாவை தள்ளி வைத்திருப்பேன்’’ என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் எடியூரப்பாவை கர்நாடக முதல்வராக பதவியேற்க ஆளுநர் விடுத்த அழைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்திய வரலாற்றில் ஏற்கனவே 2015ஆம் ஆண்டு ஜூலை 30- ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு உச்ச நீதிமன்றம் கூடியிருக்கிறது. மும்பை தொடர்வெடிகுண்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த யாக்கூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யும்படி கோரிய மனுவின் மீதான விசாரணைக்காக உச்ச நீதிமன்றம் கூடியது. ஆயினும் அப்போது மேமனுக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்ய மறுத்துவிட்டது உச்ச நீதிமனறம்.

அதற்குப் பிறகு 2018 மே 16ஆம் தேதி நள்ளிரவு முதல் இன்று 17 ஆம் தேதி அதிகாலை வரை மீண்டும் உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசியல் குழப்பத்துக்காக கூடியது. பெரும்பான்மை இல்லாத எடியூரப்பாவை முதல்வர் பதவியேற்க ஆளுநர் விடுத்த அழைப்புக்கு எதிராக நள்ளிரவு காங்கிரஸ், மஜத கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாட, மிக அவசரமாக இரவு 2 மணி முதல் சுமார் 4.30 மணி வரை உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது.

இந்த வழக்கின் விசாரணையிலேயே காங்கிரசுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “இந்த நள்ளிரவிலும் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிப்பது ஜனநாயகத்தின் வெற்றி’’ என்று குறிப்பிட்டார்.

வாத, எதிர்வாதங்கள் முடிவில், எடியூரப்பா முதல்வர் பதவி ஏற்பதை தடை செய்ய முடியாது என்று அறிவித்த உச்ச நீதிமன்றம், வழக்கு மீண்டும் நாளை (மே 18) வெள்ளி காலை நடைபெறும். அப்போது எடியூரப்பா அரசு அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த நள்ளிரவு வழக்கு விசாரணையை வழக்கறிஞர்கள் பலர் வரவேற்றுள்ளனர். மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இந்த நள்ளிரவு விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்துக்கு சல்யூட் வைப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர், “நான் எடியூரப்பாவாக இருந்திருந்தால் உச்ச நீதிமன்றத்தில் நாளை வழக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரை பதவி ஏற்பு விழாவை தள்ளி வைத்திருப்பேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

“ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு எடியூரப்பா அனுப்பிய கடிதமே அவரது தலைவிதியை நாளை நீதிமன்றத்தில் தீர்மானிக்கும். ஏனெனில் அந்த கடிதத்தில் தனக்கு 104 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது என்றே குறிப்பிட்டுள்ளார் எடியூரப்பா. 104ஐ விடப் பெரிய நம்பர் எதுவும் அந்த கடிதத்தில் இல்லை. மேலும், ஆட்சி அமைக்குமாறு எடியூரப்பாவுக்கு ஆளுநர் அனுப்பிய கடிதத்திலும் அவருக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்களின் பலம் உள்ளது என்பது பற்றிய தகவல் இல்லை’’ என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறார் ப.சிதம்பரம்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon