மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

மக்களின் தேவைகளை அறியச் சுற்றுப்பயணம்!

மக்களின் தேவைகளை அறியச் சுற்றுப்பயணம்!

நாகர்கோவில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், மக்களின் தேவைகளை அறிந்துகொள்ளவே இவ்வாறு பயணம் மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 16, 17 மற்றும் 18ஆம் தேதிகளில் தென்மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று அக்கட்சியின் சார்பில் கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. அதற்கேற்ப, நேற்று (மே 16) அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி சென்றடைந்தார். வாகைகுளம் விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவர், அதன்பின் கன்னியாகுமரி மாவட்டத்திற்குச் சென்றார். அங்கு நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர், வழியெங்கும் நேரடியாக மக்களைச் சந்தித்துப் பேசினார்.

இதன் தொடர்ச்சியாக, இன்று (மே 17) அவர் தூத்துக்குடி மாவட்டத்திற்குச் செல்வதாகப் பயணத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில், பணகுடி பகுதியில் திறந்த வேனில் நின்றவாறே மக்களிடம் பேசினார் கமல்ஹாசன்.

அப்போது, “மக்களுக்கு என்ன வேண்டுமென்று தெரிந்துகொள்வது, ஒரு தமிழ் மகனாக எனது கடமையாகும். இப்போது கட்சி ஆரம்பித்துள்ளதால், அது எனது பொறுப்பாகவும் கடமையாகவும் மாறுகிறது. மக்களின் தேவைகளை அறிந்துகொள்ளவே, இந்தப் பயணம். இனி, அடிக்கடி உங்களைத் தேடி வருவேன்” என்று கூறினார். தனது பேச்சின் இடையே, மக்கள் நீதி மய்யம் முக்கியமான பாதையில் செல்வதாகக் குறிப்பிட்டார்.

இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பயணம் மேற்கொள்ளும் கமல், நாளை திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலுள்ள மக்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நேற்று நாகர்கோவில் பேசிய கமல்ஹாசன், தொலைக்காட்சி மூலமாக கருத்து தெரிவித்தால் அதிகமான மக்களைப் பார்க்க முடியுமென்றும், அதன் வீச்சு அதிகமென்றும் சிலர் கூறுவதாகத் தெரிவித்தார். ஆனால் நேரடியாக மக்களைச் சந்திப்பதற்காகவே, தான் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதாகக் குறிப்பிட்டார். ”இதனை கெட்டிக்காரத்தனமாகச் செய்யாமல், உணர்ச்சிபூர்வமாகச் செய்ய வேண்டியது எனது கடமை. அதனால், இங்கு வந்திருக்கிறேன். வெகு நேரம் பேச ஆசைதான். ஆனால், போக்குவரத்து பாதிக்கும். மக்களைப் பாதிக்கும் எந்த போராட்டத்தையும், கொண்டாட்டத்தையும் மக்கள் நீதி மய்யம் செய்யாது” என்று கூறினார்.

நேற்று, நாகர்கோவிலில் விபத்தினால் பெண் ஒருவர் காயமடைந்தார். அவரைத் தனது சுற்றுப்பயணத்தில் ஈடுபடுத்தப்படும் வாகனம் ஒன்றில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் கமல்ஹாசன்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon