மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள்: ஷில்பா

ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள்: ஷில்பா

‘ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டு உச்சத்துக்குக்கொண்டு செல்வார்கள்’ என ‘அரும்பே’ பாடலுக்குக் கிடைத்த வரவேற்பால் நடிகை ஷில்பா மஞ்சுநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி தயாரித்து நடித்திருக்கும் ‘காளி’ திரைப்படம் நாளை (மே 18) வெளிவர உள்ளது. விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நான்கு நாயகிகளில் ஒருவராக ஷில்பா மஞ்சுநாத் நடித்திருக்கிறார். விஜய் ஆண்டனிக்கும் ஷில்பாவுக்குமான காதல் பாடலாக உருவாகியிருக்கும் ‘அரும்பே’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

படத்தின் புரொமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். விஜய் ஆண்டனியும் ஷில்பாவும் நேற்று (மே 16) படத்துக்கான புரொமோஷனில் ஈடுபட்டனர்.

அப்போது படம் குறித்து தனது அனுபவத்தைப் பகிர்ந்த ஷில்பா, “காளி படத்தில் ஒரு கதாநாயகியாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாவது மிக மிகப் பெருமைக்குரியது. சற்றும் கவனத்தைத் திசை திருப்பாத திரைக்கதை மற்றும் தமிழ்த் திரையுலகின் திறமைகள் அனைத்தும் சங்கமிக்கும் சக நடிகர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் பட்டியல் என இந்தப் படத்தில், வெற்றிக்குரிய அனைத்து அம்சங்களும் உள்ளன” என்றார்.

அவருடைய கதாபாத்திரம் குறித்து விவரித்தவர், “என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் பார்வதி. என் நிஜ வாழ்வில் எப்படி இருப்பேனோ அதற்கு முற்றிலும் எதிர்மறையான கதாபாத்திரம். நான் மாடர்ன் பெண்ணாக வளர்ந்தவள். பார்வதி கதாபாத்திரமோ, முற்றிலும் மாறாக கிராமிய சூழலில் வளரும் பெண். பல்வேறு பருவத்தைப் பிரதிபலிக்கும் பாத்திரம். மனோதத்துவ ரீதியாக மிக மிக பலம் பொருந்திய கதாபாத்திரம்” என்றார்.

‘அரும்பே’ பாடலுக்குக் கிடைத்த வரவேற்பு குறித்து பேசியவர், “அரும்பே பாடல் நான் எண்ணிக்கூடப் பார்த்திராத உயரத்தைத் தந்துள்ளது. ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டு என்னை மேலும் உச்சத்துக்குக்கொண்டு போவார்கள் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன். தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா, கதாநாயகன் விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் கிருத்திகா உதயநிதி ஆகியோருக்கு நான் காலம் முழுக்க கடமைப்பட்டுள்ளேன்” என்றார் ஷில்பா.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon