மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

மோசடியால் வரலாறு காணாத இழப்பு!

மோசடியால் வரலாறு காணாத இழப்பு!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சமீபத்தில் நடந்த மிகப் பெரிய வங்கி மோசடி எதிரொலியாக வரலாறு காணாத அளவில் அவ்வங்கி சென்ற காலாண்டில் ரூ.13,417 கோடி வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்சி இணைந்து ரூ.13,700 கோடிக்கும் மேல் செய்த மோசடி அவ்வங்கியைப் பெரிதும் பாதித்துள்ளது. அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வரும் அவ்வங்கிக்குச் சென்ற காலாண்டுக்கான வருவாய் விவரங்கள் மேலும் அழுத்தத்தைக் கொடுத்துள்ளன. 2017ஆம் ஆண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டில் ரூ.262 கோடி வருவாய் பெற்றிருந்த இவ்வங்கி இந்த ஆண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டில் பெரும் பின்னடைவாக ரூ,13,417 கோடி வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது. இந்த இழப்பானது முன்னதாக புளூம்பெர்க் கணித்திருந்த ரூ.3,835 கோடியை விட மிக மிக அதிகமாகும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி சந்தித்துள்ள இந்த இழப்பானது இந்திய வங்கி வரலாற்றிலேயே மிகப் பெரிய இழப்பாகும். இவ்வங்கியின் வாராக் கடன் அளவு மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. 2017 ஜனவரி - மார்ச் மாதங்களில் ரூ.57,519 கோடியாக இருந்த வாராக் கடன் 2018 ஜனவரி - மார்ச் மாதங்களில் ரூ.86,620 கோடியாக உயர்ந்துள்ளது. இக்காலகட்டத்தில் ரூ.7,779 கோடி வாராக் கடனானது நீரவ் மோடியின் மோசடியால் ஏற்பட்ட விளைவாகும். மேலும், வாராக் கடனுக்கு எதிராக மத்திய ரிசர்வ் வங்கி விதித்துள்ள விதிமுறைகளால் ரூ.10,237 கோடி வாராக் கடன் அல்லது செயற்படா சொத்துகளின் வரிசையில் இணைந்துள்ளது.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon