மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 15 ஜன 2021

ஐபிஎல்: ப்ளே ஆஃபை நெருங்கும் மும்பை!

ஐபிஎல்: ப்ளே ஆஃபை நெருங்கும் மும்பை!

மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற வாழ்வா சாவா ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இரு அணிகளின் ப்ளே ஆஃப் வாய்ப்புக்கும் இந்தப் போட்டியின் முடிவு அவசியம் என்பதால் நேற்றைய ஆட்டம் கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாகச் சென்றது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இரு அணிகளின் மாற்றங்கள்

பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால், கருண் நாயர் இருவருக்கு பதில் அக்ஷர் படேல், யுவராஜ் சிங் மீண்டும் சேர்க்கப்பட்டனர். மும்பை அணியில் நீண்ட இடைவெளிக்குப் பின் கெய்ரன் போலார்டு அணிக்குத் திரும்பினார். ஜே.பி. டுமினிக்கு பதில் அவர் இடம்பிடித்திருந்தார்.

முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக போலார்டு 23 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தார். பஞ்சாப் அணியின் ஆண்ட்ரூ டை 4 ஓவர்கள் பந்து வீசி 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மீண்டும் பேட்டிங் குளறுபடி

பின்னர் கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் அணிக்கு கே.எல்.ராகுல், கிறிஸ் கெயில் ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தனர். 11 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்து கெயில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த ஆரோன் பின்ச் ராகுலுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பஞ்சாப் அணி 16 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் என வலுவான நிலையில் இருந்தது. அப்போது 46 ரன்களில் பின்ச் ஆட்டமிழந்தார். இப்போதுதான் பேட்டிங் வரிசையில் குளறுபடி ஏற்பட்டது. வழக்கமாக அந்த இடத்தில் வரும் யுவராஜ் சிங்கிற்கு பதிலாக அஸ்வின், மார்க்ஸ் ஸ்டானிஸை அனுப்பினார். அவர் 1 ரன் எடுத்து அவுட் ஆனார். பின்னர் அக்ஷர் படேல் களமிறக்கப்பட்டார். யுவராஜ், மனோஜ் திவாரி போன்ற வீரர்கள் இருக்கையில் அனுபவம் குறைவான அக்ஷர் படேலைக் களமிறங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் 60 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்து 19ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது 9 பந்துகளில் 20 ரன்கள் தேவைப்பட்டன. அப்போதுதான் யுவராஜ் களமிறங்கினார். அவருக்கு வெறும் மூன்று பந்துகளை சந்திக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.

இந்த பேட்டிங் குளறுபடியால் பஞ்சாப் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் பாஸிட்டிவாக உள்ளதால் அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மும்பை அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிடும்.

வீணாக்கிய பஞ்சாப்

நேற்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரூ டை நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு பவுலர், ஒரே சீசனில் மூன்று முறை நான்கு விக்கெட் வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.

இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியின் ஒட்டுமொத்த ஸ்கோரில் 33 சதவீதம் ரன்களும், ஒட்டுமொத்த சிக்ஸர்களில் மூன்றில் ஒன்றும், ஒட்டுமொத்த பவுண்டரியில் ஐந்தில் இரண்டும் ராகுலின் மட்டையிலிருந்து வந்தவையே. அதேபோல் பஞ்சாப் இதுவரை எடுத்த விக்கெட்டுகளில் முன்றில் ஒரு பகுதியை வீழ்த்தி பந்துவீச்சில் அசத்தினார் ஆண்ட்ரூ டை. இவர்களைக் கொண்டு ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப் ஆகியவற்றைப் பெற்றுள்ள பஞ்சாப் அணி, கோப்பையைக் கைப்பற்றும் முயற்சியில் பின்தங்கியுள்ளது (தற்போது பஞ்சாபின் நெட் ரன்ரேட் நெகட்டிவ்வாக உள்ளதால் அடுத்த போட்டியில் வெற்றி பெற்றாலும், அந்த அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு குறைவே).

பவர்ப்ளே ஓவர்களில் பஞ்சாப் அணி பந்து வீச்சாளர்களின் நிலை:

ஆண்ட்ரூ டை- 2 ஓவர்கள், 5 ரன்கள், 3 விக்கெட்டுகள்

மற்ற பந்து வீச்சாளர்கள் - 4 ஓவர்கள், 55 ரன்கள், 0 விக்கெட்

அசத்திய பும்ரா

நேற்றைய ஆட்டத்தில் பும்ராவைப் பாராட்டியே ஆக வேண்டும். 17ஆவது ஓவர் வரை மும்பையின் கையிலிருந்த ஆட்டத்தை 18ஆவது ஓவரில் பென் கட்டிங் பஞ்சாபின் கைகளுக்கு மாற்றினார். ஆனால், 19ஆவது ஓவரை பும்ரா சிறப்பாக வீசி மீண்டும் மும்பையின் கையை ஓங்கச் செய்தார். எதிரணியின் ரன்ரேட் 8.94 என்று சென்றுகொண்டிருக்கையில் 3.75 என்ற ரன் ரேட்டில் பந்து வீசுவது சாதாரண விஷயம் அல்ல. அதனை மிகச் சிறப்பாகச் செய்து முடித்தார் பும்ரா.

ஒன் மேன் ஆர்மி ராகுல்

நேற்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் 94 ரன்கள் எடுத்து 19ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அணியின் மற்ற வீரர்கள் யாரும் அவருக்குச் சரியான ஒத்துழைப்பு தராததால் பஞ்சாப் அணி தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் ஒரு அணியின் வெற்றிக்கு உதவாத தனிநபர் ரன்னாக ராகுலின் இன்னிங்ஸ் மீண்டும் ஒருமுறை பதிவாகியுள்ளது.

இதுவரை பதிவான தனிநபர் அதிகபட்ச ரன்கள் விபரம்:

100 யூசுப் பதான், 2010

95* கே.எல்.ராகுல், 2018 (ராஜஸ்தானுக்கு எதிராக)

95 ஷான் மார்ஷ், 2011

95 மனன் வோரா, 2017

94* நமன் ஓஜா 2010

94 கே.எல்.ராகுல், 2018 (மும்பைக்கு எதிராக)

ஐபிஎல் 2018இல் இதுவரை:

அதிக ரன்கள்: கே.எல்.ராகுல் (638*)

அதிக சிக்ஸர்கள்: கே.எல்.ராகுல் (32*)

அதிக பவுண்டரிகள்: கே.எல்.ராகுல் (62*)

இந்த சீசனில் கே.எல்.ராகுல் இதுவரை ஆறு அரை சதங்கள் அடித்துள்ளார். ஒவ்வொரு போட்டியிலும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு ஆட்டத்தை மாற்றி முறையே 14, 22, 24, 36, 44 மற்றும் 48 பந்துகளில் அரை சதங்களைக் கடந்துள்ளார் ராகுல்.

களத்தில் எதிரிகள் - நிஜத்தில் நண்பர்கள்

என்னதான் ஐபிஎல்லில் எதிர் எதிர் அணிகளில் விளையாடினாலும் நாம் எப்போதும் நண்பர்களே... என்பது போல நேற்றைய போட்டி முடிவடைந்த பின்னர் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா இருவரும் தங்கள் டி-ஷர்ட்டுகளை மாற்றிக்கொண்ட காட்சி.

-முத்துப்பாண்டி யோகானந்த்

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon