மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

பருப்பு இறக்குமதியில் சேமித்த அரசு!

பருப்பு இறக்குமதியில் சேமித்த அரசு!

இந்தியாவின் பருப்பு இறக்குமதி 2017-18 நிதியாண்டில் 1 மில்லியன் டன் சரிவடைந்துள்ளது. இதனால், இறக்குமதிக்கான அந்நியச் செலாவணியிலிருந்து ரூ.9755 கோடியை அரசு சேமித்துள்ளது.

2016-17ஆம் நிதியாண்டில் 66 லட்சம் டன் அளவிலான பருப்பு இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில், 2017-18 நிதியாண்டில் இறக்குமதி அளவு 56.5 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. அதாவது பருப்பு இறக்குமதி 10 லட்சம் டன் குறைந்துள்ளது. இதனால் அரசு தனது அந்நியச் செலாவணியைக் குறைத்து ரூ.9,755 கோடியை மிச்சப்படுத்தியுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உற்பத்தியைப் பொறுத்தவரையில், 2016-17ஆம் நிதியாண்டில் 23.13 மில்லியன் டன் அளவிலான பருப்பு உற்பத்தி செய்யப்பட்டது. 2017-18 நிதியாண்டின் பருப்பு உற்பத்தி நல்ல பருவமழையாலும் அரசின் ஆதரவினாலும் 23.95 மிலியன் டன்னாக உயர்ந்துள்ளது. இறக்குமதி வரி உயர்த்தப்பட்டது மற்றும் இறக்குமதியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு போன்ற காரணங்களால் இந்தியா தனது பருப்பு இறக்குமதியையும் அதனால் ஆகும் கூடுதல் செலவையும் குறைத்துக்கொண்டுள்ளது.

ஒரு ஆண்டிற்கு 2 லட்சம் டன் துவரம் பருப்பையும், 3 லட்சம் டன் உளுத்தம் பருப்பையும், 3 லட்சம் டன் பாசிப் பருப்பையும் மட்டுமே இறக்குமதி செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு விதித்துள்ளது. அத்துடன் உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தவும் அரசு போதிய ஆதரவை வழங்கியது. இதனால் உற்பத்தி பெருகி இறக்குமதி குறைந்துள்ளது. முன்னதாக ஏற்றுமதிக்குத் தடை செய்யப்பட்ட அனைத்து வகைப் பருப்பு ஏற்றுமதியும் 2017 நவம்பர் 22ஆம் தேதி முதல் அரசின் சில கட்டுப்பாடுகளோடு ஏற்றுமதி செய்யப்பட்டன.

பருப்புடன் கோதுமை, சமையல் எண்ணெய் இறக்குமதியிலும் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் முந்தைய ஆண்டைவிட 2017-18 நிதியாண்டில் இந்தியாவின் வேளாண் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களுக்கான ஏற்றுமதி 10.5 சதவிகிதம் உயர்ந்தது.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon