மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

கோவை. வளமாக இருந்த இந்த மாவட்டம், இராமநாதபுரத்திற்கு அடுத்து அதிக வறட்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. கருவேல மரங்களால் இராமநாதபுரம் சீரழிந்ததைப் போலத் தென்னை மரங்களால் சீரழிந்துவரும் மாவட்டம் கோவை. தென்னை மரங்களுக்காக நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றனர். அதுவும் வெள்ளிமடை போன்ற பகுதிகளில் 1700 அடிக்கும் கீழ் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நீரை உறிஞ்சிவருகின்றனர்.

கோவை மாவட்டத்திற்கு உடனடித் தேவை நீர் மேலாண்மை திட்டங்கள். அதுவும் என்ன செய்ய வேண்டும் என்பதை அந்தந்த பகுதி மக்களே மனுக்களாக எழுதி அரசாங்க அதிகாரிகளிடம் கொடுத்துவருகின்றனர். அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளில் சில..

1) மேற்குத் தொடர்ச்சி மலையின் நீராதாரமாக உள்ள சோலைக்காடுகள் அழிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பில் உள்ளன. அந்த நிலப்பரப்பை மீட்டு, மீண்டும் சோலைக் காடு உருவாக்க வேண்டும்

2) மலையில் இருந்து வரும் இயற்கையான நீர் ஊற்றுகள், ஓடைகள் கால்வாய்களில் திருப்பிவிடப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கிறது. எனவே, இயற்கையாக மலைகளிலிருந்து வரும் ஊற்றுகள், ஓடைகளை அதன் போக்கிலே விட வேண்டும்.

3) ஆனைமலையில் ஆற்றில் வளர்ந்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணிகள் பெயரளவில் மட்டுமே நடக்கின்றன.

4) அதிகாரிகள் சுத்திகரிப்பு நிலையம் கட்ட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

5) பருவமழை காலங்களில் வீணாகும் மழை நீரைச் சேமித்து வைக்க அதிகாரிகளிடம் திட்டமிடல் இல்லை. வறட்டாறு மற்றும் சேர்வகாரன்பாளையம் பகுதியில் தடுப்பணை கட்டினால் மழை நீர் வீணாகிச் செல்வதைத் தடுக்க முடியும்.

இவ்வளவு தெளிவாகத் தங்களுக்குத் தேவையான திட்டங்களை வரையறுத்து மக்கள் கேட்கின்றனர். ஆனால் அதிகாரிகள் எந்தத் திட்டங்களில் கவனம் செலுத்துகின்றனர் தெரியுமா?

உக்கடம் - கரும்புக்கடை வரை பாலம் கட்டும் திட்டத்தை அவசரமாக நிறைவேற்ற நெடுஞ்சாலைத் துறை முடிவுசெய்துள்ளது. “உக்கடத்தில் ஏறிக் கரும்புக்கடையில் இறங்கப் பாலம் அவசியமே இல்லை” என்கின்றனர் அங்குள்ள மக்கள். ஏற்கனவே காந்திரம் பாலம் கட்டபட்டு எந்தப் பயனும் இல்லாமல் இருப்பதைப்போலத்தான் இதுவும் பேருக்கு ஒரு பாலமாக இருக்கப்போகிறது என்று ஆதங்கப்படுகின்றனர்.

நீர் மேலாண்மை போன்ற அவசர , அவசியத் திட்டங்களைக் கண்டுகொள்ளாத அரசு, பாலங்கள் கட்டுவதில் முனைப்பைக் காட்டுவதன் பின்னால் உள்ள கணக்குகள் மக்களுக்குத் தெரியாதா என்ன?

- நரேஷ்

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon