மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

போலீசாருக்கு அபராதம் : மனித உரிமை ஆணையம் உத்தரவு!

போலீசாருக்கு அபராதம் : மனித உரிமை ஆணையம் உத்தரவு!

மதுரை அரசு மருத்துவமனையில் பெண் துப்புரவுப் பணியாளராக இருந்த ஜெயா என்பவரைத் தாக்கிய விவகாரத்தில், இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு போலீசார் ரூ. 3 லட்சம் இழப்பீட்டை அவருக்கு வழங்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பெண் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்த ஜெயா என்பவர் 2010ஆம் ஆண்டில் அவரது பணியை ராஜினாமாச் செய்துவிட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து குழந்தையைக் கடத்தியதாக 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம், மதிச்சியம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஜெயராமன், செல்வராஜ், அழகுபாண்டி மற்றும் பெண் காவலர் வித்யாபதி ஆகியோர் ஜெயாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் விசாரணைக்காக மூன்று நாள் ஜெயாவை தனி அறையில் அடைத்து வைத்து, தாக்கியதுடன், குழந்தையைக் கடத்தியதாக ஒப்புக்கொள்ளும்படி நான்கு போலீசாரும் வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த ஜெயா காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தான் எந்த தவறும் செய்யாதபோது, தன்னைத் தாக்கியதாக நான்கு போலீசார் மீதும், துப்புரவுப் பணியாளர் ஜெயா மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் இறுதி விசாரணையில், "ஒருவரைக் கைது செய்யும்போதோ விசாரணைக்கு அழைக்கும்போதோ அவரின் அடிப்படை உரிமைகள் மீறப்படக்கூடாது" என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை நீதிபதி டி.ஜெயசந்திரன் சுட்டிக்காட்டினார்.

அதைதொடர்ந்து, குழந்தை கடத்தல் தொடர்பாக எந்த வழக்கும் பதிவாகாத நிலையில் ஜெயாவை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியுள்ளது தவறு என்றும், பாதிக்கப்பட்ட ஜெயாவுக்கு தமிழக அரசு ரூ.3 லட்சத்தை இழப்பீடாக வழங்கிவிட்டு, அந்த தொகையை, குற்றம் செய்த நான்கு போலீசாரின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அந்த நான்கு போலீசார் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon