விஷால் மீது புகார் கூறிய நடிகை ஜெயசித்ராவுக்கு, அதே மேடையில் விஷால் தரப்பில் மறுப்பு தெரிவித்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தொகுப்பாளர் குட்டி குமார், இயக்குநராக அறிமுகமாகும் படம் ஆண்டனி. மலையாள நடிகர் லால் மற்றும் ரேகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களைத் தவிர, இந்த படத்தில் நடித்துள்ள மற்ற அனைவருமே புதுமுகங்கள்.
இது இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் படமாக உருவாகியிருக்கிறது. அதாவது, தனிமையில் இருக்கும் ஒருவருக்கு ஏற்படும் பயமே இந்த கிளாஸ்ட்ரோஃபோபிக். அதை மையமாக வைத்துதான் இந்தப்படம் உருவாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தின் கதை, பூமிக்கு அடியில் நடப்பதுபோலவும் படமாக்கப்பட்டிருக்கிறது. ‘வெப்பம்’ ராஜா மற்றும் கிறிஸ்டோபர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மே 16) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை ஜெயசித்ரா, “எனது மகன் இசையமைத்துள்ள, பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே போகிறது. இது ரொம்ப கவலையளிக்கும் விதமாக இருக்கிறது. இந்தப் படம் மட்டுமில்லை. சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் பல படங்கள் இப்படித்தான் கிடப்பில் போடப்படுகின்றன. தியேட்டர்களே கிடைப்பதில்லை” எனப் புகார் கூறினார்.
இதனால் விழாவில் சற்று சலசலப்பு உருவானது. பின்னர் அதே மேடையில் தயாரிப்பாளார் சங்க நிர்வாகியான தங்கதுரை தனது உரையில், “விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திரைப்படங்களை ரிலீஸ் செய்யும் கமிட்டியில் நானும் உறுப்பினராக இருக்கிறேன். ஆண்டனி படத்தின் தயாரிப்பாளர் ‘வெப்பம்’ ராஜாவும் உறுப்பினராக இருக்கிறார். வாரத்துக்கு நான்கு படங்கள் வருகிறது. சிறிய பட்ஜெட் படங்களுக்குக்கூட தியேட்டர் கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறோம். தற்போது கட்டப்பஞ்சாயத்துகள் நடப்பதில்லை. ஆகவே சிறிய பட்ஜெட் படங்களை கண்டுகொள்வதில்லை என கூறுவதை ஏற்க முடியாது. பாஸ்கர் ஒரு ராஸ்கல் வெளியீடு தள்ளிப் போனதற்கு அந்த படக்குழுவினரின் நடவடிக்கைதான் காரணமாக இருக்கும்” என்றார்.