ஊதிய முரண்பாட்டைச் சரி செய்வதற்காக, தமிழகத்தில் உள்ள ஏராளமான கீழ்நிலைக் காவலர்கள் தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணையத்துக்கு மனுக்களை அனுப்பியுள்ளனர்.
ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டபோதே பல்வேறு பணி நிலைகளில் ஊதிய முரண்பாடுகள் இருப்பதாகவும் அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து, தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைய அரசு செலவினச் செயலாளர் சித்திக் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்துக்கு ஏராளமான கீழ்நிலைக் காவலர்கள் மின்னஞ்சல் மற்றும் தபால் மூலம் மனுக்களை அனுப்பியுள்ளனர்.
அதில், “1960ஆம் ஆண்டுகளில் ஆசிரியர்களுக்கு இணையாக இருந்த தங்களது ஊதியம் தற்போது மிகவும் குறைந்துள்ளது. அதாவது ஊதியம் வழங்குவது முரண்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை பார்த்தால் வழங்கப்படும் ஊதியம் ஒருநாள் ஊதியத்தைவிடக் குறைவாக இருக்கிறது. மேலும் மருத்துவச் சலுகைகள், போக்குவரத்துப் படி ஆகியவற்றை உயர்த்த வேண்டும், பண்டிகை நாள்களில் விடுப்பும் தர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக, பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக காவலர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.