மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 28 நவ 2020

இணைய ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் திட்டம் இல்லை!

இணைய ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் திட்டம் இல்லை!

இணைய ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி வலைதளங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முயலவில்லை என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்வர்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவை கடந்த மே 14ஆம் தேதி சிறிய அளவில் மாற்றி அமைக்கப்பட்டது. மத்திய தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அந்த அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோருக்குக் கூடுதல் பொறுப்பாக தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மிருதி இரானி, ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முயன்றார் எனப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், “இணைய ஊடகம் மற்றும் டிஜிட்டல் செய்தி வலைதளங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை. ஊடகங்கள் மக்களின் குரலாக ஒலிக்கப் பாடுபடுவோம்” என்று ராஜ்யவர்தன் தெரிவித்துள்ளதாக பிடிஐ ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், “நம் நாட்டில் உள்ள ஊடகங்கள் ஜனநாயகத்தின் முக்கியமான தூண்களில் ஒன்று என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். அவை சுயமாகத் தங்களை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் அப்போதைய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, “பொய்ச் செய்திகளை ஒரு பத்திரிக்கை நிறுவனமோ, டி.வி நிறுவனமோ வெளியிட்டது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளரின் அரசு அங்கீகாரம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். அவர் 2ஆவது முறையும் விதிமுறைகளை மீறினால் ஓராண்டு தடை விதிக்கப்படும். இது குறித்த புகார்கள் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா, செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் (என்பிஏ) போன்ற ஒழுங்கு முறை அமைப்புகளிடம் அளிக்கப்படும். அந்த அமைப்புகள் 15 நாட்களுக்குள் முடிவு அறிவிக்கும். புகார் அளித்தவுடன், அதன் முடிவு வெளியாகும் வரை சம்பந்தப்பட்ட நிருபரின் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்” என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் பிரதமர் அலுவலகம், “பொய்ச் செய்தி தொடர்பான பிரச்சினைகள் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவால் மட்டும் தீர்க்கப்பட வேண்டும்’’ என்று அறிவிப்பு வெளியிட்டது. இது தொடர்பாக ராஜ்யவர்தன் பேசுகையில், “ ஸ்மிருதி இரானியின் உத்தரவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. நாங்களா, அவர்களா (ஊடகங்கள்) என்பதல்ல அந்த உத்தரவு. ஊடகங்கள் மக்களின் குரலாக வேண்டும் என்ற ஒரு கூட்டுப் பொறுப்பாகும்” என்று தெரிவித்தார்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon