மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 19 ஜன 2021

செல்போனில் பேச்சு: வழக்கு கிடையாது!

செல்போனில் பேச்சு: வழக்கு கிடையாது!

கேரளாவில் செல்போனில் பேசியபடி வாகனத்தை ஓட்டிச் செல்பவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ய முடியாது என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவதால் பெரும்பாலான விபத்துக்கள் நடக்கின்றன. விபத்தைத் தடுப்பதற்கு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர். சமீபத்தில், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து செய்யப்படும் என ராஜஸ்தான் உயா் நீதிமன்ற ஜோத்பூர் கிளை எச்சரித்துள்ளது. இது போன்று, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், கொச்சியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் காவல் துறை மீது வழக்குத் தொடர்ந்தார். அவரது மனுவில், ”சில தினங்களுக்கு முன்பு செல்போனில் பேசியபடி கார் ஓட்டிச் சென்றேன். செல்போனில் பேசியவாறு காரை ஓட்டியது சட்டவிரோதமானது எனக் கூறி காவல் துறையினர் என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்ய சட்டத்தில் இடம் இல்லை. அதனால், என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ”செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் எனக் கருதி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதன் மூலம் மனுதாரர் மக்களுக்கு ஆபத்தை விளைவிப்பார் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. அதனால் இதற்கு வழக்குப் பதிவு செய்யக் கூடாது” என அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon