மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 15 ஜன 2021

உள்ளாட்சி தேர்தல் முடிவு : மம்தா முன்னணி!

உள்ளாட்சி தேர்தல் முடிவு : மம்தா முன்னணி!

மேற்குவங்கத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருணமூல் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

கடந்த 14ஆம் தேதியன்று மேற்கு வங்க மாநிலத்தில் மூன்று அடுக்குகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 72.5 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தலின்போது நடந்த வன்முறையினால் 24 தெற்கு மற்றும் வடக்கு பர்கனாஸ், நாதியா, மூர்ஷிதாபாத், தெற்கு தினஜ்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. இந்த வன்முறையில் சிக்கி 13 பேர் வரை பலியானதாகத் தகவல் வெளியானது.

இந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை, இன்று (மே 17) காலை மேற்கு வங்கத்தில் தொடங்கியது. தற்போது, சில இடங்களின் நிலவரம் மட்டுமே தெரிய வந்துள்ளது. மாவட்ட அளவிலான உள்ளாட்சி அமைப்பான 825 ஜில்லா பரிஷத்களில் 221ல் திருணமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. பஞ்சாயத்து சமிதிகளைப் பொறுத்தவரை, 330 இடங்களில் 110ல் திருணமூல் முன்னிலை வகித்து வருகிறது. இந்த இரண்டு உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை பாஜக, மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எந்த இடத்திலும் முன்னிலை பெறவில்லை.

தேர்தல் நடைபெற்ற 3215 கிராம பஞ்சாயத்துகளில் 807 இடங்களின் நிலவரம் தெரிய வந்துள்ளது. திருணமூல் காங்கிரஸ் 706 இடங்களிலும், பாஜக 58 இடங்களிலும், மார்க்சிஸ்ட் அணியினர் 6 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், இதர கட்சிகள் 29 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. மீதமுள்ள இடங்களின் நிலவரம் மாலைக்குள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில மாவட்டங்களில் வன்முறை நிகழ்ந்து வருவதால், வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 12 மணி வரையிலான நிலவரம் இது.

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை, திருணமூல் காங்கிரஸ் பலம்வாய்ந்ததாகத் திகழ்கிறது. இதற்கடுத்த இடத்தில் பாஜக, மார்க்சிஸ்ட் கட்சிகள் உள்ளன. அதற்கடுத்த நிலையிலேயே காங்கிரஸ் கட்சி உள்ளதென்பது, இந்த வாக்கு எண்ணிக்கையில் தெரிய வந்துள்ளது.

மேற்கு வங்கம் முழுவதும் 58,692 இடங்களுக்கான உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இந்த தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. இவர்களில் 20,163 பேர் எந்த எதிர்ப்புமில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டதனால், மீதியுள்ள இடங்களுக்கே தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon