மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

முதல் இஸ்லாமியப் பெண் சூப்பர் ஹீரோயின் படம்!

முதல் இஸ்லாமியப் பெண் சூப்பர் ஹீரோயின்  படம்!

கருப்பினத்தவரை சூப்பர் ஹீரோவாகக் கொண்டு முதன்முறையாக வெளியான படம் பிளாக் பேந்தர். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது முதன்முறையாக பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் கதாபாத்திரத்தைக் கொண்டு புதிய சூப்பர் ஹீரோயின் படம் தயாராகவுள்ளது.

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்துவரும் நிலையில் மார்வெல் தொடரின் அடுத்த படமான ‘கேப்டன் மார்வெல்’ அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து, மார்வெல் காமிக் தொடரில் வரும் ‘மிஸ். மார்வெல்’ என்ற பாகிஸ்தானிலிருந்து அமெரிக்கா சென்று வசிக்கும் பதின்பருவப் பெண் கதாபாத்திரத்தைக் கொண்டு படம் உருவாக்கவுள்ளதாக அவெஞ்சர்ஸ் படத்தின் தயாரிப்பாளர் கெவின் ஃபெய்ஜ் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

படக்குழு கேப்டன் மார்வெல் பட உருவாக்கத்தில் கவனம் செலுத்திவருவதால் ‘மிஸ். மார்வெல்’ படத்தின் நடிகர்கள் தேர்வு போன்றவற்றை இன்னும் தொடங்கவில்லை.

ஆனால் பிரியங்கா சோப்ரா அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமானவராக இருப்பார் என்று சமூக வலைதளங்களில் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் வேறு சிலரோ, ”பிரியங்கா இந்தியாவைச் சேர்ந்தவர்; பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும். கதைப்படி அந்தக் கதாபாத்திரம் பதின்பருவப் பெண். முப்பத்தைந்து வயதான பிரியங்கா நடித்தால் ஏற்றுக்கொள்ள முடியாது” என படம் பற்றிய எதிர்பார்ப்பை இப்போதே ஏற்படுத்திவருகின்றனர்.

பிரியங்கா சோப்ரா ‘மார்வெல்: அவெஞ்சர்ஸ் அகாடமி’ என்ற வீடியோ கேமிற்கு குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon