மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

கிரிவலப்பாதையில் 2000 மரக்கன்றுகள்!

கிரிவலப்பாதையில் 2000 மரக்கன்றுகள்!

பக்தர்கள் சிரமமின்றி கிரிவலம் சென்று வர திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அடுத்த பத்து நாட்களில் 2000 மரக்கன்றுகள் நடப்படும் என்று திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு திருவண்ணாமலையில் உள்ள கிரிவல பாதையில் அவசரக் கால பாதை திட்டம் என்ற பெயரில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றது. அப்போது அங்குள்ள மரங்கள் வெட்டி அழிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதைதொடர்ந்து வறட்சியின் காரணமாக ஆங்காங்கே மரங்களும் வாடின.

இதனால் 14 கிலோ மீட்டர் கிரிவலம் சுற்றி வரும் பயணிகள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் பாதையை பசுமையாக்கும் விதமாக நெடுஞ்சாலைத்துறை மூலம் 2 ஆயிரம் மரங்கள் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டன. இதற்கான இடங்களைத் திருவண்ணாமலை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு இன்று ஆய்வு செய்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர், “வனத்துறை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை பல்கலைக்கழகம் பேராசிரியர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் பல மரங்கள் வாடியுள்ளது தெரியவந்தது. அவற்றை வளரச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் கிரிவலப்பாதையில் பக்தர்கள் செல்லும் இடங்களில் நெடுஞ்சாலைத் துறை மூலமாகக் கூடுதலாக 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளன. அண்ணா நுழைவு வாயில் முதல் காஞ்சி சாலை அபய மண்டபம் வரை மரம் நடும் பணி அடுத்த பத்து நாட்களில் முடிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிவலப்பாதை விரிவாக்கப் பணிகள் அடுத்த மூன்று மாதங்களில் முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon